
இந்தியாவில் பரபரப்புக்கு பெயர் போன மாநிலமாக தெலுங்கானா இருந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நிதியமைச்சர் டி. ஹரிஷ் ராவ், அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் கலந்துகொள்வதற்கு தாமதமானதால் 50 லட்சம் ரூபாயைஅபராதமாக செலுத்தியிருக்கிறார்.
அமைச்சர் டி. ஹரிஷ் ராவின் சொந்த ஊரான சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள துபாக் பகுதியில், நகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வறுமையைப் போக்கும் திட்டத்தின் சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படிருந்தது.
இந்த நிகழ்வுக்கு அம்மாநில நிதியமைச்சரான டி.ஹரிஷ் ராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
காலை 11:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு மாலை 3:30 மணிக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து சித்திப்பேட்டையில் நடந்த மற்றொரு விழாவில் கலந்துகொள்ள சென்றதால் இந்த விழாவிற்கு வர தாமதமானதாக அமைச்சரின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டது மட்டுமின்றி தனக்கு அபராதம் விதிக்கும்படியும் அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
உடனடியாக இந்த விழாவில் கலந்துகொண்ட பெண்கள் சிலர், அந்தப் பகுதியில் பெண்கள் பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற அமைச்சர், தன்னுடைய தாமதத்திற்கான அபராதமாக 50 லட்சம் ரூபாயை தான் செலுத்துவதாகவும் அதனை பெண்களுக்கான கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் சகோதரியின் மகன் ஹரிஷ் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.