அகல்கோட்டில் உள்ளது அவதூத சம்பிரதாயத்தைச் சேர்ந்த சமர்த்த அகல்கோட் ஸ்வாமியின் சமாதிக் கோயில். 3 நாட்களுக்கு முன்னர், இங்கே பக்தர்களோடு பக்தராக, ஒரு குரங்கும் உள்ளே வந்தது.
பக்தர்கள் மண்டபத்தில் கீழே அமர்ந்து தியானித்தும் பஜன் பாடல்கள் பாடிக்கொண்டும் இருக்க, இந்தக் குரங்கோ அமைதியாக மண்டபத்தில் மேல் ஒரு தூணுக்கு அடியில் அமர்ந்து கொண்டது. ஆலயத்துக்கு வந்த ஸ்வாமியின் பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.
எல்லோரும் நாமஸ்மரணத்தில் இருக்க இந்தக் குரங்கோ கண்களை மூடி தியானத்தில் சுமார் பத்து நிமிடங்கள் அமர்ந்தது. குனிந்த தலையுடன், இரு கைகளையும் தன் இரு கால்களில் பிடித்தவாறே ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்ததைக் கண்டு அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியப் பட்டனர். ஒரு சிலர் அந்தக் குரங்கை இறைவனின் அம்சமாகவே கருதி வணங்கினர்.
ராமாயணத்தில் வானரங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஸ்ரீராமபிரானுக்கு உதவவே பிறந்தவைகளாக அவற்றை ராமனின் பக்தர்கள் கருதுகின்றனர். இன்றும் அனுமன் ஆலயங்கள் இந்தியா முழுக்க மட்டுமல்லாமல் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பரவிக் கிடக்கின்றன. ராமாயணக் கதை கேட்கும் இடங்களில் அனுமன் வந்து அமர்வார் என்ற நம்பிக்கை நம் நாட்டில் நிலவுகிறது. சில இடங்களில் அப்படிக் கதைகள் சொல்லப்படும் போது, குரங்கு ஏதேனும் ஒன்று வந்து ஆடாமல் அசையாமல் அதைக் கேட்டுச் செல்வதும் உண்டு. பக்தர்கள் அந்தக் குரங்குக்கு வாழைப்பழம் கொடுத்து ஆசி பெறுவதும் உண்டு.
இப்படித்தான் ஒரு குரங்கு, எங்கோ ஓர் இடத்தில் தியானத்தில் அமர்ந்துவிட்டு, பக்தர்களுக்கு ஆசி கொடுக்க அமர்ந்துவிட்டது. தன்னிடம் வந்து தலையைக் குனிந்து ஆசி வேண்டும் அன்பர்களின் தலையைத் தடவிக் கொடுத்து, ஆசி அளிக்கிறது அந்தக் குரங்கு. இந்த இரு வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. அகல்கோட் மந்திருக்கு வந்த குரங்கு, தியானத்தில் அமர்ந்துவிட்டு, பின் அனைவருக்கும் ஆசி அளிக்கிறது என்று ஒரு செய்தி பரவ, இல்லை இல்லை.. இந்த இரண்டு வீடியோக்களும் வேறு வேறு என்று சிலர் தெளிவாக்கினார்கள்.
இரு வருடங்களுக்கு முன்னர், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்த குரங்கு ஒன்று, அழுத கண்களுடன் அம்பிகையை நோக்கி தியானத்தில் அமர்ந்தது. வெகு நேரம் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்த குரங்கைக் கண்டு சிலருக்கு பக்திப் பரவசம், சிலருக்கோ பரிதாபம். அந்தக் குரங்குக்கு வயிற்றுப் பசி இருக்கும் என்று கருதி, அதற்கு வாழைப்பழம், பொறி கடலை என வாங்கி அளித்தனர். ஆனால் அந்தக் குரங்கோ, அம்பிகையைப் பார்த்தபடியே இருந்ததே தவிர, தின்பண்டங்கள் எதையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இதனை அங்கிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கிச் சென்றனர்.
இப்படி, மனிதனுக்கு மட்டும்தான் தெய்வத்தை உணரும் ஆற்றல் உண்டா என்று கேட்டால், இல்லை இல்லை விலங்குகளுக்கும் தெய்வத்தன்மையை உணரும் அறிவு உண்டு என்று இத்தகைய சம்பவங்கள் மூலம் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.