மதுரை: மதுரையில் இன்று காலை நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதிமுக., சார்பில் ஒரு நடைப்பயணம் தொடங்கப்பட்டது. நடைப்பயண ஸ்பெஷலிஸ்ட் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் இருந்து நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப் படும் கம்பம் பகுதிக்கு நடைப் பயணம் செல்ல திட்டமிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
அதன்படி, இன்று காலை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த துரை.சந்திரசேகரன் என்பவரும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவர், “மோடி அரசிடம் கப்பம் வாங்குபவர்கள் நியுட்ரினோவை ஆதரித்துப் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
நியூட்ரினோ என்பது, அறிவியல் சார் தொழில்நுட்ப வளர்ச்சி சார் திட்டம். பகுத்தறிவுப் பட்டறையில் பட்டை தீட்டிய அறிவியல் அறிஞர்களால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அப்துல் கலாம் இத்திட்டம் குறித்து திடமாக, ஆய்வு நோக்கில் ஆதரித்து எழுதினார். பக்கம் பக்கமாக எழுதினார். குறிப்பாக, தி ஹிந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரை, இப்போதும் படிக்கக் கிடைக்கின்றது. அதன் தமிழாக்கத்தையும் படித்து சாதாரணமான நம்மாலும் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, தி.க.காரர்கள் சொல்வது போல், அப்துல் கலாமும் நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து பக்கம் பக்கமாக எழுத கப்பம் வாங்கினார் போலும்!