விதவைக்கு குழந்தை வரம் தந்த சாங்கதேவர்

 

சலனமற்று ஓடும் தபதி ஆற்றின் கரையோரத்தில் ஆசிரமம் அமைத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, பல நூற்றாண்டுகளாக சீடர்களுக்கு உபதேசம் செய்தவர் சாங்கதேவர். யாதவ குளத்தில் அவதரித்த இவர், பண்டரீபுரத்தில் இருக்கும் பண்டரீநாதரை வணங்கி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
யார் கண்ணுக்கும் புலப்படாதபடி தனது உடலை மறைத்து அரூபமாக சென்று பண்டரீநாதனை வழிபட்டு வந்தனர். உருவம் மறைத்தல் என்பதோடு நின்று விடாமல், சப்தம் கேளாமல் இருப்பதற்கும், ஸ்பரிசம் உணராமல் இருப்பதற்கும், மேனி கவர்ச்சி உணராத நிலைக்குமான மேன்மை அடைந்திருந்தார் அவர். எல்லா சித்தர்களும் சித்து விளையாடுவதில் கெட்டிக்காரர்கள். அதில் சாங்கதேவரும் விதிவிலக்கல்ல.
 
ஆனாலும் ஒரு மனக்குழப்பம் சாங்கதேவரை வாட்டி கொண்டே இருந்தது “இவ்வளவு ஆண்டுகளாக சீடர்களுக்கு பாடம் கற்று கொடுத்தும் மனதில் முழுமையான நிம்மதி என்பது இல்லையே…” என்று வருந்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.
 
“நிம்மதியை வேண்டி மனக்குழப்பம் கொள்ளும் சாங்கதேவா! உனக்கு நிம்மதி வேண்டுமென்றால் பண்டரீபுரத்தில் ஞானதேவ் என்ற சிறுவன் இருக்கிறான் அவனிடம் போய் ஞான உபதேசம் கேள்..! அவன் முற்றும் அறிந்த ஞானி. அதன் பின்னே நிம்மதி பெறுவாய்!” என்றது.
 
சாங்கதேவருக்கு அசரீரியின் குரல் மேலும் குழப்பத்தை தந்தது. ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பலருக்கு நாம் உபதேசம் செய்கிறோம். சித்தராகிய நான் ஒரு சிறுவனிடம் போய் உபதேசம் பெறுவதா? என்னக் கொடுமை!’ இப்படி அவரது மனதில் எண்ண ஓட்டங்கள் மேலிட்டாலும் வேறு வழியின்றி ஞானதேவை சந்திக்க முடிவு செய்தார்.
 
அதே வேளையில், ஞானதேவும் பண்டரீபுரத்திலிருந்து புறப்பட்டு ஆனந்தி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார். இதை கேள்விப்பட்ட சாங்கதேவர் ஞானதேவை சந்திக்க முடிவு செய்தார். இன்றைக்கு நாம் ஒருவரை சந்திக்கும் முன் சந்திக்க விரும்பும் நபருக்கு ‘விசிட்டிங் கார்டு’ கொடுப்பது போல் சாங்கதேவரும் ஞானதேவுக்கு ஒரு ஓலையை அனுப்பினார்.
 
ஆனால் அந்த ஓலையில் துவக்கமாக என்ன எழுதுவதென்று அவருக்கு தெரியவில்லை. ‘ஞானதேவோ… வயதில் இளையவர். நாமோ அவரிடம் உபதேசம் பெறவேண்டிய மாணவர். அவரை வணங்குவதா..! ஆசீர்வதிப்பதா..!’ என்ற குழப்பத்தில் எதுவும் எழுதாமல் வெறும் ஓலையை மட்டுமே சீடனிடம் கொடுத்து அனுப்பினார். 
 
சீடனும் அந்த ஓலையை ஞானதேவிடம் கொடுத்தான். ஓலையை கைகளால் வாங்கும் முன்பே ‘என்னதான் கற்றிருந்தாலும், எழுத்துக்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும், கோபத்தை அடக்கும் வலிமை பெற்றிருந்தாலும், சித்திகள் அனைத்தும் பெற்றாலும், வாழ்க்கை வெறும் ஓலைதான் என்று சாங்கதேவர் வெறும் ஓலையை கொடுத்து அனுப்பினாரோ?’ என்று ஞானதேவ் கேட்டபோது சீடன் வெலவெலத்து போய் விட்டான்.
 
பின்னர் ”பிறவிப்பிணி நீங்க இறைவனை வழிபடுவது ஒன்றுதான் மருந்து” என்று ஓலையில் ஞானதேவ் சாங்கதேவருக்கு பதில் எழுதி அனுப்பினார். இதை வாங்கி படித்த சாங்கதேவர் தனது வலிமையையும், தவயோகத்தையும் காட்ட நினைத்து, தனது தவபலத்தால் ஒரு புலியை சிருஷ்டித்தார். அந்த புலியின் மீது கம்பீரமாக அமர்ந்தார். கையில் ஒரு கருநாகத்தை சாட்டையாக பிடித்துக் கொண்டு ஞானதேவரை சந்திக்க புறப்பட்டார். 
 
”இந்த வயதில் புலி மீது ஏறி, கருநாகத்தை கையில் பிடித்துக்கொண்டு கோபமாக போகிறாரே” என்று ஊர் முழுவதும் மக்கள் பேசினர்.
 
இப்படி மக்கள் பேச வேண்டும். இந்த பேச்சு ஞானதேவை சென்று சேர வேண்டும். தன்னை பற்றி வியப்பு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்  சாங்கதேவர் அப்படி செய்தார்.
 
கர்வம் மறைந்தது 
 
இவை எல்லாவற்றையும் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட ஞானதேவ் தனது இரண்டு தம்பிகளோடும், தங்கை முக்தா பாயுடனும் சின்னஞ் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குட்டிச் சுவரில் ஏறி அமர்ந்து மற்ற குழந்தைகளைப் போல் எந்தவித பெருமையும் இல்லாமல் சாதாரணமாக இருந்ததைப் பார்த்த சாங்கதேவருக்கு சாட்டையால் அடித்தது போல் இருந்தது. உடனே அவரது கர்வம் மறைந்தது.
 
அதேவேளையில் அவருடைய மாயபுலியும் கையில் பிடித்திருந்த கருநாகமும் மறைந்தது. சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஞானதேவை வணங்கினார் சாங்கதேவர்.

 
”எவ்வளவு பெரிய தவயோகி நீங்கள்? தாங்கள் என்னை வணங்கலாமா? வாருங்கள்…! என் அருகே அமருங்கள்!” என்று கூறி சாங்கதேவரை ஆழமரத்தடிக்கு அழைத்து போனார் ஞானதேவ்.
 
சிறுவனான ஞானதேவ் முன்பு முதியவரான சாங்கதேவர் வந்தமர்ந்தார். முன்னொரு காலத்தில் வாலிபரான சிவபெருமான் முன்பு பழுத்த முனிவரான சனக்காதி முனிவர் உபதேசம் பெற்றது போல் சாங்கதேவரும் ஞானதேவிடம் உபதேசம் பெற்றார். பரிபூரணமான ஞானத்தின் தன்மை பற்றியும் அதை அடையும் வழிகளையும், ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணைப்பு பற்றியும், பரமாத்மாவை மறைத்துவிட்டு அதனை சூழ்ந்து நிற்கும் மாயையும், அந்த மாயையை விளக்கும் முறையையும், அப்படி அவற்றை அகற்றும் போது ஏற்படும் தெளிவை பற்றியும் ஞானதேவ் சித்தரான சாங்கதேவருக்கு எடுத்துரைத்தார்.
 
பின்னர் இருவரும் ஆசிரமம் சென்றனர். ஆசிரமத்தில் பருவ வயது பெண்ணான ஞானதேவின் சகோதரி குளித்துவிட்டு வந்திருந்தார். அவள் தனது உடையை மாற்றும் சமயம் ஞானதேவ் உள்ளே சென்றார். சாங்கதேவருக்கோ உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது. பருவப்பெண் ஆடை மாற்றும்போது எப்படி கூச்சம் இல்லாமல் நுழைவது? என்று எண்ணியவர் அப்படியே நின்று விட்டார். 
 
பாகவத கதையில் இதேபோல் வியாசர் முனிவருக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டது.  
 
தேவகன்னியரின் நீராடல் 
 
வியாச முனிவரும்,அவரது புதல்வர் சுகப்பிரம்மரிஷியும் நீர் நிறைந்த ஒரு சோலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த நீர் நிலையில் ஏராளமான தேவகன்னியர் மேனியில் ஆடையின்றி நீராடி கொண்டிருந்தனர்.

அவர்கள் வாலிப இளைஞரான சுகப்பிரம்மரிஷி வருவதை பார்த்தும் எந்த வெட்கமும் கொள்ளாமல் தொடர்ந்து பிறந்த மேனியோடு நீராடிக்கொண்டிருந்தனர். ஆனால் முதியவரான வியாசர் வந்த போது தேவகன்னியர் உடனே உடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று உடைகளால் தங்கள் உடலை மறைத்தனர். இதை பார்த்த வியாசருக்கு வியப்பு ஏற்பட்டது. 
 
”கன்னிகளே! என் மகன் சுகப்பிரம்மம் வாலிபன், இளவயதினன், அவன் வந்தபோது சிறிதும் வெட்கம் இல்லாமல் நீராடி கொண்டிருந்தீர்கள். நானோ வயது முதிர்ந்த கிழம், என்னை பார்த்தவுடன் அவசரம் அவசரமாக உடைகளை அணிந்து கொண்டீர்களே… ஏன்?” என்று கேட்டார்.
 
தேவகன்னியரில் ஒருவரான ரம்பை, ”வியாச முனிவரே! தங்கள் மகன் சுகப்பிரம்மரிஷி முற்றும் துறந்த பிரம்மஞானி. மனம் பக்குவபட்டவன் அவருக்கு அழகிய பெண்ணின் உடலும் ஒன்றுதான், காய்ந்த மண்ணில் விழுந்து கிடக்கும் மரக்கட்டையும் ஒன்றுதான். ஆனால் தாங்கள் இன்னும் அந்த பக்குவநிலையை எய்தாகவில்லை!” என்று ரம்பை பதில் அளித்தார். 
 
அதேபோல் தான் இப்போதும் நடந்திருக்கிறது. ஞானதேவுக்கு ஏற்படாத கூச்சம் தனக்கு இப்போது ஏற்பட்டது தன் மனநிலை இன்னமும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டுகிறது என்ற மன உறுத்தலுடன் ஞானதேவை பின்தொடர்ந்தார் சாங்கதேவர்.
 
ஆசிரமம் உள்ளே சென்ற ஞானதேவ், பாண்டு ரங்கன் பண்டரீநாதன் குறித்த பஜனைப் பாடல்களை பாடினார். மேலும் பல போதனைகளை சாங்கதேவருக்கு போதித்தார். அதன்மூலம் அவர், தான் மனப்பூர்வமான பக்குவத்தையும், நிம்மதியையும் பெற்றதாக உணர்ந்தார்.
 
விதவைக்கு குழந்தை ஆசி 

 
ஒருமுறை கோதாவரி நதிக்கரையில் கேசவர் கோவில் ஒன்றைக் கட்டி, அதற்கு கும்பாபிஷேகம் செய்தார் சாங்கதேவர். அவரை பார்ப்பதற்காக கோதாவரி நதியை அடுத்துள்ள கல்யாணபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு வயதான பெண்மணி தனது விதவை மருமகளை அழைத்துக் கொண்டு கேசவர் கோவிலுக்கு வந்தார். இருவரும் சாங்கதேவரை வணங்கினார்.
 
அப்போது அந்த பெண்ணின் மருமகள் அமங்கலி என்பதை அறியாத சாங்கதேவர், ”உனக்கு அறிவான மகன் பிறப்பான்..!” என்று ஆசீர்வதித்தார். இதை கேட்ட விதவை அதிர்ச்சியடைந்தாள். கண்ணீர் பெருகி நின்றாள். உடனே பெண்ணின் மாமியார், ”சுவாமி என் மகன் இறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்போது என் மருமகள் விதவை. அப்படியிருக்க தாங்கள் ஆசி எப்படி உண்மையாகும்?” என்று மனம் நொந்து கேட்டாள்.
 
”தாயே என் வாக்கு பொய் இல்லை. உனக்கு பேரன் பிறந்தே தீருவான்..!” என்றார் சாங்கதேவர். இந்த ஆசீர்வாதத்தை கேட்டு சந்தோஷப்படுவதா… சங்கடப்படுவதா… என்று புரியாமல் இரு பெண்களும் திகைத்து நின்றனர்.

     “சுவாமி! தாங்கள் கூறுவதுபோல் இறைவன் அருளால் எனது மருமகள் ஒரு மகனை பெற்றெடுத்தாலும் இந்த உலகம் அதனை ஏற்குமா?” என்று கேட்டார். சாங்கதேவர் அவர்களை சமாதானப்படுத்தினார். அவர்கள் கல்யாணபுரம் என்ற அந்த ஊரிலேயே வசிக்க ஏற்பாடு செய்தார்.

     சாங்கதேவரின் வாழ்த்துப்படியே சரியாக பத்தாம் மாதத்தில் அந்த விதவைப்பெண் ஒரு அழகான ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ‘விட்டல்’ என்று பெயர் சூட்டினார் சாங்கதேவர்.

    குழந்தை வளர்ந்தது. உபநயனம் கற்கும் பருவம் வந்தது. அந்த குழந்தைக்கு உபநயனம் கற்றுத்தரும்படி அந்த ஊர் பிராமணர்களிடம் சாங்கதேவர் கேட்டார். யாரும் கற்றுத்தர முன் வரவில்லை. உபநயனம் என்பது பூனூல் அணிவித்து வேதங்கள், மந்திரங்கள் கற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் வேதமுறை. இதை நல்ல பிறப்பில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வழங்கும் வழக்கம் இருந்தது.

   “தந்தை பெயர் தெரியாத ஒரு விதவை பெற்ற குழந்தைக்கு உபநயனம் ஒன்றுதான் கேடா?” என்று ஏளனமாக மறுத்துவிட்டனர். அவர்களுக்கு பொறுமையாக பல புராணங்களிலும் இதிகாசங்களிலும் இருந்து உதாரணங்களை சாங்கதேவர் எடுத்துக்கூறினார். அப்படியும் யாரும் கற்றுத்தர முன்றவரல்லை. இதையெல்லாம் கண்டு மனம்நொந்தார் சாங்கதேவர்.

     “பெண்ணே! இந்த விட்டல் என் அருளால் பிறந்தவன். அவனுக்கு உபநயனம் செய்துவைக்க எந்த வைதீகருக்கும் மனம்இல்லை. இனி நாம் அனைவரும் பாண்டுரங்கனிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை. நாம் எல்லோரும் பண்டரீபுரம் செல்வோம்!” என்றார். நால்வரும் பண்டரிபுரம் கோவிலுக்கு சென்று வணங்கினர்.

     கோவிலுக்கு அருகே இருந்த பிராமணர் வீட்டில் நால்வரும் தங்கினர். அந்த பிராமணரிடமே சாங்கதேவர் விட்டலனுக்கு உபநயனம் செய்யும்படி கேட்டார். அதற்குள் அந்த பிராமணருக்கும் விட்டலனின் கதை தெரிந்துவிட்டது. அவரும் உபநயனம் செய்ய மறுத்துவிட்டார். அந்த பெண்கள் இருவரும் மனமுடைந்தனர்.

     மீண்டும் மீண்டும் இதே போன்ற புறக்கணிப்பு சாங்கதேவரின் மனதை புண்படுத்தியது. மனதுக்குள் வைராக்கியம் கண்டது. நேராக பண்டரீஸ்ரீநாதன் கோவிலுக்கு சென்றார். தன்னை மதிக்காது ஏளனம் செய்த வைதீகரர்களை பற்றி மனமுருக புலம்பி தீர்த்தார். அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்று இறைவன் சொன்னது போல் பாண்டுரங்கனும் முன் தோன்றினார்.

     “சாங்கா! கவலையை மற நாளை நானே நேரில் வந்து விட்டலனுக்கு உபநயனம் செய்கிறேன்” என்று கூறி மறைந்தார். மனதிற்குள் மகிழ்ச்சி சிறகுகள் சிறகடிக்க ஊருக்கு திரும்பினார். திரும்பிகையோடு எல்லார் வீடுகளுக்கும் சென்று “விட்டாலனுக்கு நாளை உபநயனம்;. எல்லோரும் குடும்பத்தோடு வந்துவிடுங்கள்” என்றார்.

     ஊரார்களுக்கு ஒரே ஆச்சரியம்! “ஊரில் இருக்கும் ஒட்டுமொத்த வைதீகரர்களான நாம் தான் அவனுக்கு உபநயனம் செய்ய மறுத்துவிட்டோமே. வேறு யார் வந்து அந்த விதவை பையனுக்கு உபநயனம் செய்யப்போகிறார்கள்?” என்று கிண்டலாக கேட்டு சிரித்தனர்.

     “பகவானே நேரில் வந்து உபநயனம் செய்வார்” என்ற போது எல்லோரின் ஏளன சிரிப்பும் எல்லை மீறி போனது. என்னதான் வேடிக்கையாக பேசினாலும் அவர்களுக்குள்ளும் ஆர்வம் இருந்தது. எல்லோரும் சாங்க தேவர் மடத்திற்கு போவதென்று முடிவுசெய்தனர். அதற்கு முன் பண்டரீபுரத்து பாண்டுரங்கன் கோவிலுக்கு சென்று பாண்டுரங்கனை வழிபடுவது, அதன்பின் மடத்திற்கு செல்வது என்று திட்டமிட்டனர். அங்கு சென்ற அவர்கள், கையெடுத்து கும்பிட்டு வணங்க முற்பட்ட போதுதான் மூலகிரகத்தில் பாண்டுரங்கன் இல்லாததை கவனித்தார்கள்.

     எல்லோரும் உடனே சாங்கதேவர் மடத்திற்கு சென்றார்கள். அவர்களை பார்த்தவுடன் “பாண்டுரங்கன் இங்கேதான் இருக்கிறார்” என்றார். எல்லோரும் பாண்டுரங்கனை தரிசித்தனர். பாண்டுரங்கன் மனையில் அமர்ந்து விட்டலை அணைத்துக்கொண்டு மந்திரோபதேசம் செய்வதை அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர்.

     மனிதர்கள் ஒரு செயலை செய்த தயங்கும் போது அங்கு இறைவன் பிரசன்னமாகி செயல்களை செய்து முடிப்பான் என்பது விதி. இங்கும் அதுதான் நடந்தது. சாங்க தேவரின் தவ வலிமையை கண்ட அனைவரும் தங்கள் தவறை உணர்ந்தனர். பாண்டுரங்கனும் அவரை எண்ணற்ற சித்து விளையாட்டுகளை ஆடச்செய்து ரசித்தார். பின் மறைந்தார்.

     சிறிது காலம் கழித்து, துவாரகை சென்று கண்ணனை தரிசிப்பதற்காக சாங்கதேவர் யாத்திரை செல்ல துவங்கினார். அப்போது ஒரு யாதவ பண்டிதர் தானும் அவருடன் சேர்ந்து யாத்திரை வருவதாக கூறி இணைந்து கொண்டார். பண்டிதரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் தனியாக இருந்தாள். அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே பண்டிதர் புறப்பட்டார்.

     இந்த தகவலை தாமதமாக தெரிந்து கொண்ட அந்த கர்ப்பிணிப் பெண் மிகவும் வேதனையுற்றாள். கணவர் இல்லாத ஊரில் ஒரு கணமும் தனித்திருக்க மாட்டேன் என்று கூறி துவாரகை நோக்கி புறப்பட்டாள். நிறை மாத கர்ப்பிணி தனியாக காட்டுப் பாதைக்குள் செல்ல வேண்டாம் என்று ஊரார்கள் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை.

     அடர்ந்த காட்டுக்குள் தனியாக சென்றாள். காட்டின் மையப்பகுதியை அடைந்ததும், அந்த பெண்ணுக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. மனித சஞ்சாரமே அற்ற அந்த அடர்ந்த காட்டுக்குள் பிரசவ வலி தாங்கமுடியாமல்…

     “துவாரகை கண்ணனே! என்னை காப்பாற்ற நீ வரமாட்டாயா? சாங்க தேவரே! இறைவனை நேரில் கண்டவர் நீங்கள். தாங்களாவது என்னை காப்பாற்றும்படி இறைவனிடம் சொல்லக்கூடாதா?” என்று மீண்டும் மீண்டும் வேண்டியபடி மயங்கி விழுந்தாள்.

     மயங்கிய பெண்ணை யாரோ தொடுவதுபோல் உணர்ந்தாள். அருகே ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். “பெண்ணே! என் பெயர் கிருஷ்ணாபாய். உன் கணவரின் குருவான சாங்கதேவர் தான் என்னை இங்கு அனுப்பி வைத்தார். என் வீடு பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருக்கிறது” என்று கூறி, அந்த பெண்ணின் இடுப்பில் கைவைத்து, தாங்கிப்பிடித்து, மெதுவாக அணைத்தப்படி கிராமத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

     அங்கு கர்ப்பிணிப் பெண்ணின் அழுக்கான ஆடைகளை களைந்து, நல்ல ஆடைகளை கொடுத்து, அருகே இருந்து உபசரித்தாள். சிறிது நேரத்தில் ஒரு அழகிய ஆண் குழந்தையை அந்தப்பெண் ஈன்றாள். பெற்ற தாயை காட்டிலும் பல மடங்கு பரிவோடு அந்த மூதாட்டி நடந்துகொண்டார். குழந்தையையும், தாயையும் உறக்கமில்லாமல் கவனித்தார்.

     காட்டுக்குள் தன்னந்தனியாக மயங்கிக்கிடந்த தன்னை மருத்துவச்சியாகவும், தாயாகவும் இருந்து கவனித்த கிருஷ்ணாபாயை அனுப்பிவைத்த கண்ணனை மனதார துதித்தாள்.

   அதே நேரத்தில் துவாரகையில் சாங்கதேவரும், பண்டிதரும் கோமதி நதியில் நீராடிவிட்டு கண்ணன் ஆலயத்தை அடைந்தனர். கோவிலில் கண்ணன் இல்லை. அந்த கண்ணன் தான் கிருஷ்ணாபாய் உருவில் பண்டிதர் மனைவிக்கு மருத்துவச்சியாக பணியாற்றிக்கொண்டிருப்பதை ஞானதிருஷ்டியில் கண்டார்.

     உடனே இருவரும் அந்த கிராமம் நோக்கி நடந்தனர். வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த முதிய பெண்மணி அவர்களை அன்புடன் வரவேற்றார். வீட்டுக்குள் சென்ற அமர்ந்த சாங்கதேவர் மடியில் குழந்தையை கிடத்தினார் அந்த பெண். சாங்கதேவரும் குழந்தையை ஆசிர்வதித்து திரும்பிப் பார்த்தார். அங்கே கிருஷ்ணாபாய் இல்லை. தேடினார்கள். அவர் எங்குமே இல்லை!

     சாங்கதேவர் எல்லையில்லா ஆனந்தமடைந்தார். கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது “கிருஷ்ண பரமாத்மாவே! உன் பக்தனுக்காக பிரசவம் பார்த்து, துணிதுவைத்து, மருத்துவம் செய்து, வீடு பெறுக்கி, குழந்தையை குளிப்பாட்டி, பிரசவித்த தாய்க்கு பணிவிடை செய்துள்ளாய். உன் கருணைக்கு எல்லையே இல்லையா? ஆபத்பாந்தவனே!” என்று நெக்குருகி போனார்.

     சில ஆண்டுகள் கழித்து…

     பேதரி என்ற நாட்டுக்கு சென்றார் சாங்கதேவர். பேதரியை ஒரு இஸ்லாமிய மன்னர் ஆட்சிசெய்து வந்தார். அவர் இந்துக்களை மிகவும் கொடுமைப் படுத்தினார். இதை அறியாத சாங்கதேவர் பேதரி அரண்மனை வாயிலில் நின்று பண்டரீநாதனை கீர்த்தனையால் துதித்துக்கொண்டிருந்தார்.

     “அய்யா! பெரியவரே, இந்த கீர்த்தனையை நிறுத்துங்கள். இந்த மன்னனைப்பற்றி உங்களுக்கு தெரியாது. இது மட்டும் மன்னன் காதுகளுக்கு எட்டினால் என்ன நடக்கும் தெரியுமா? அதோடு மன்னனின் மகள் வேறு பாம்பு கடித்து இறந்து விட்டாள். மன்னர் துக்கத்தில் இருக்கிறார். இங்கே நிற்காதீர்கள். சென்றுவிடுங்கள்.” என்று ஒரு அந்தணர் கூறினார்.

     “என்ன பாம்பு கடித்துவிட்டதா? நான் பிழைக்கச்செய்கிறேன்” என்றார் சாங்கதேவர்.

     “மன்னர் மகள் இறந்து அவளை புதைத்து மூன்று நாட்களாகிவிட்டன. பாதி மண்தின்ற உடலை பிழைக்க வைக்கிறேன் என்கிறீர்களே?!”

     “நான் உயிர்ப்பித்து தருகிறேன். மன்னரிடம் கூறுங்கள்”

     மன்னருக்கு செய்திபோனது. மன்னர் மெய்சிலிர்த்து போனார். “இது உண்மையா? நடக்குமா? சாத்தியம்தானா? அவரை உடனே அழைத்து வாருங்கள்.”

     சிறிது துளசி தீர்த்தத்தை மன்னர் கையில் கொடுத்து, மந்திரம் ஜெபித்து “அரசே! இதனை உங்கள் கையால் நான் சொல்லும் மந்திரம் ஜெபித்து, உங்கள் மகளின் உடல் மீது தெளியுங்கள்” என்றார்.

     மன்னர் மகள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த இளம்பெண்ணின் உடல் எடுக்கப்பட்டது. சாங்கதேவர் கூறியபடி மந்திரம் ஜெபித்து துளசி தீர்த்தத்தை தெளித்தார். மன்னரின் மகள் உறக்கத்தில் இருந்து விழிப்பது போல் எழுந்தாள். மன்னர் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் திகைத்து போயினர்.

     “சித்தர் பெறுமானே! தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன். என் மகளை எனக்கு திரும்பவும் கொடுத்துவிட்டீர்கள். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றார்.

     “மன்னவா, நான் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். இனிமேலாவது நீ பிற மதத்தவரை துன்புறுத்தாமல், அவர்கள் மனம் நோகாமல் நடக்க வேண்டும். அவர்களும் உன் மக்கள் தான். அவர்களை காக்கும் கடமையும் உனக்குண்டு”

     “அப்படியே செய்கிறேன்” என்று மன்னர் உறுதியளித்தார். அதன்படியே ஆட்சியும் செய்தார். அதன்பின் சாங்கதேவர் இறைவனிடம் “பாண்டுரங்கா! நான் சமாதிநிலை அடைய விரும்புகிறேன். எனக்கு ஏற்ற இடத்தை சொல்வாயாக” என்று கேட்டார்.

     “கோதவரி நதிக்கரையில் உள்ள புண்ய ஸ்தம்பம் என்ற இடம் தான் உனக்கு ஏற்ற இடம்” என்று இறைவன் உத்திரவிட எல்லோரிடமும் விடைபெற்று சமாதிநிலை அடைந்தார் சாங்கதேவர்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.