நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்

 

மனித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் சம உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், சரித்திர காலங்களில் பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் ‘கம்போர்ட் பெண்கள்’.
 

போர்க்களத்தில் கம்போர்ட் பெண்
பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போது எப்படிப்பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால், 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் நம்புவது சிரமம்தான்.
 
2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து போட்டிகளை நடத்தின.
 
ஜப்பானும் தென் கொரியாவும், இந்தியா – பாகிஸ்தான் போல,  உள்ளுக்குள் பகையை வளர்த்துக் கொண்டு வெளியில் நட்பை பாராட்டிக் கொள்ளும் நாடுகள்.
 
போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரண்டு நாடுகளிலும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது தென் கொரியா தொலைக்காட்சி ஒன்று ஒரு விபரீதமான பேட்டியை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டத்தட்ட 50 வருடங்களாக அமுங்கிக்கிடந்த பிரச்சனையை, தடாலென்று விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்தது.
 
கிம் சாங் ஹீ என்ற 75 வயது பெண் கொடுத்த பேட்டி தான் கொரியர்களை கொதிக்க வைத்தது. இரண்டாம் உலகப்  போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நடந்த சம்பவம் அது.
 
அப்போது கிம் 20 வயதுகூட எட்டாத கன்னிப் பெண். சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து போர்க்களத்தில் இருந்து வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் போர் விமானங்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்போய் களைப்படைந்த ராணுவ வீரர்களுக்கு.. உடலும் மனசும் வேறொரு இன்பத்துக்காக ஏங்கியது. அதை ஏக்கம் என்று சொல்வதைவிட வெறி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது பெண்ணுக்கான ஏக்கம்.
 
மாதக் கணக்கில் பெண் வாடையே இல்லாமல் போர்க்களத்தில் போரிடும் ராணுவ வீரனுக்கு ஒரு பெண்ணை இனிமையாக அணுகத் தெரியாது. மென்மையாக அவளை இன்ப உலகத்துக்கு அழைத்து செல்ல தெரியாது. அவனுக்கு இருப்பதெல்லாம் காமவெறி ஒன்றுதான். அதனால் அவனுடன் கூடுதல் பெண்ணுக்கு வலி நிறைந்த கொடூரமாகத்தான் இருக்கும்.
 
ராணுவமுகாமுக்கு செல்லும் கம்போர்ட் பெண்கள்
தொடர்ந்து போர்க்களத்திலேயே இருந்த இப்படிப்பட்ட போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்த்து வைக்க பெண்கள் தேவைப்பட்டார்கள். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு ஏற்ப விலைமாதர்களும் இல்லை. அதனால் ராணுவத்துக்கு வேறு வழி தெரியவில்லை. இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு வந்தார்கள்.
 
ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ்  நாட்டுப் பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள். இப்படி கடத்தப்பட்ட பெண்களும் ராணுவ வீரர்களைவிட குறைவாகவே இருந்தார்கள்.
 
ராணுவமுகாமில் கம்போர்ட் பெண்கள்
அழகான, இளமை நிறைந்த, பயந்து நடுங்கும் குடும்ப பெண்களைப் பார்த்ததும் வெறி இன்னும் உச்சத்தை அடைந்தது. பல பெண்கள் ஓய்வு இல்லாமல் வேறு வேறு ராணுவ வீரர்களுடன் உறவு கொண்டனர்.
 
அதிகாரிகளுக்கு கூடுதலாக பெண்கள்
மென்மையும், பலவீனமும் நிறைந்த பல பெண்கள் வெறித்தனமான இந்த பலாத்காரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரிழந்தனர். அப்படியும் கூட விடாமல் பிணத்தைக் கற்பழித்த கொடூரமும் நடந்திருக்கிறது. இப்படி ராணுவ வீரர்களுக்காக உடலைக் கொடுத்த பெண்களுக்கு ‘கம்போர்ட் உமன்’ என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் சொல்வதென்றால் ‘ஆறுதலளிக்கும் பெண்கள்’.
 
ராணுவத்தினரால் கர்ப்பிணியான பெண்
ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளித்த இந்த பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் என்கிறது சீன அரசு. அந்த கம்போர்ட் பெண்களில் ஒருவர்தான் கிம் சாங் ஹீ. அந்தப் பெண் தொலைக்காட்சி பேட்டியில், “எங்களின் வாழ்வை சூறையாடியதற்காக ஜப்பானிய அரசு எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும். அதுமட்டுமல்ல, ஜப்பான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
 
நிர்வாண சித்ரவதை
ஆனால், ஜப்பான் அரசு கம்போர்ட் பெண்களை ஒரு புழுவைப் போல்தான் பார்த்தது. நம்மூரில் இருப்பது போல வில்லங்கமான அரசியல்வாதிகள் ஜப்பானிலும் உண்டு. அதில் ஒரு அதிகப்பிரசங்கி அரசியல்வாதி ஒருவர் எல்லோரையும்விட ஒருபடி மேலே போய், “நான் அந்தப் பெண்ணை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் கொடுத்த சுகத்திற்கு பதிலாக உங்களுக்கு பணம் தரப்பட்டதல்லவா..! அதோடு அது உங்களுக்கும் சுகமான அனுபவம்தானே..!” என்று பொறுப்புணர்வு இல்லாமல் டி.வி.யில் பேட்டி கொடுத்துவிட.. பற்றிக்கொண்டது. 
 
கம்போர்ட் பெண்கள் கொதித்துப் போய் நடுரோட்டிற்கே வந்து போராடத் தொடங்கினார்கள். கதறி அழுதார்கள். “அன்பு, பாசம், காதல் கனிந்த கனிவான பேச்சு, இவைகள்தான் ஒரு பெண்ணுக்கு ஆணுடன் கூடும்போது இன்பத்தை தருமே தவிர, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பலாத்காரத்தில் இன்பம் இருக்காது. வேதனையே மிதமிஞ்சி இருக்கும். இதை அறியாமல் பேசும் அந்த அரசியல்வாதி ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவம்” என்று கம்போர்ட் பெண்கள் காச்சி எடுத்தார்கள். 
 
போராட்டத்தில் கம்போர்ட் பெண்கள்
தங்களை விலைமாதர்களைப் போல் குறிப்பிட்டதை கம்போர்ட் பெண்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. “போர்க்களத்தில் எங்கள் உடலை சின்னாபின்னப் படுத்தினீர்கள். இப்போது 50 வருடங்கள் கழித்து எங்கள் ஆன்மாவை சிதைக்கிறீர்கள்” என்று வெடித்தார்கள். 
 
ஜப்பானிய மக்களே தங்கள் அரசு அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கான நஷ்டஈடு கொடுப்பதுதான் முறை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். 
 
மிகப் பெரும் தயக்கத்திற்குப் பிறகு ஜப்பானிய பிரதமர் அந்தப் பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். “பெண்கள் சரித்திரத்திலேயே இரண்டாம் உலகப் போர் காலக்கட்டம் தான் மிக மோசமானது. அப்போது அவர்கள் அடைந்த அவமானம்  வேறு எப்போதும் ஏற்பட்டதில்லை” என்றும் கூறி மனம் வருந்தினார். பின்னர் அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப் பட்டது.
 
எந்தப் பிரச்சனையுமே முழுவதுமாக மறைந்து போய்விடுவதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உலகுக்கு உணர வைத்தது இந்த கம்போர்ட் பெண்களின் போராட்டம்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.