“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”

“பார்யாளுக்கு பார்வை வந்த அதிசய சம்பவம்”
 
‘கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு . உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!’ – வைத்தீஸ்வரன் கோவில் குருக்கள்.
 
 
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி (ஒரு பகுதி)
 
 
மகா பெரியவா காஞ்சிபுரத்துல இருந்த சமயம் அது. வழக்கமா அவரை தரிசனம் பண்ணவர்றவா கூட்டம் நிறைஞ்சிருந்த நாள் அது.
 
 
அந்தக் கூட்டத்துல இளம் வயசு உடைய ஒரு தம்பதியும் இருந்தா. ஆத்துக்காரர் கையில பிறந்துஆறு ஏழு மாச சிசு ஒண்ணு இருந்தது. குழந்தையைத் தூக்கிண்டு ஆத்துக்காரியையும் தாங்கிண்டு வரிசையில மெதுவா நடந்து வந்தார், அவர்.
 
 
அன்யோன்யமான தம்பதிகள் அவாங்கறது பார்த்தபோதே பட்டவர்த்தனமா தெரிஞ்சுது. இருந்தாலும் மகாபெரியவா இருக்கிற சன்னிதானத்துக்குள்ள இப்படி நெருக்கமா நடந்து வரணுமான்னு பலரும் நினைச்சா. ஆனா,அவா கிட்டே நெருங்கினதும்தான் தெரிஞ்சது, அந்தப் பெண்மணிக்கு பார்வை இல்லைங்கறது.
 
 
பலரும் உச் கொட்டி வருத்தப்பட்டதை அவர் கவனிச்ச மாதிரியே காட்டிக்கலை. நேரா பெரியவா முன்னால போய் நின்னா.
 
 
அவாளைப் பார்த்ததுமே,”என்ன மலையாள தேசத்துலேர்ந்து வரேளா? இந்த மடத்தோட ஆதி குரு அவதார க்ஷேத்ரம் அது” அப்படின்னார் மகாபெரியவா.
 
 
ரெண்டுபேரும், ஆமாம்.அங்கேர்ந்துதான் வரோம்கற மாதிரி தலையை அசைச்சா.
 
 
“என்ன விஷயம்?” கேட்டார் ஆசார்யா.
 
 
“இவ என்னோட ஆத்துக்காரி. இந்தக் குழந்தையை கருவுல தாங்கிண்டு இருக்கறச்சே நிறை மாசத்துல எதிர்பாராதவிதமா கால் வழுக்கி தவறி விழுந்துட்டா. தலையில பலமா அடிபட்டுடுத்து.பகவான்கிருபையில கர்ப்பத்துல இருந்த சிசுக்கு ஒண்ணும் ஆகலை. குழந்தையும் நார்மலா பொறந்தது. ஆனா, அதுக்கு அப்புறமாதான் பிரச்னை ஆரம்பிச்சுது. இவளுக்கு அடிக்கடி ஃபிட்ஸ் வர ஆரம்பிச்சுடுத்து. போதாக் கொறைக்கு கொஞ்சம் கொஞ்சமா பார்வையும் பறிபோயிடுத்து.! நானும் பார்க்காத வைத்தியமில்லை. போகாத கோயிலும் இல்லை.
 
 
“ஒன் கஷ்டம் புரியறது. ஆமா, இங்கே என்னைப் பார்க்கறதுக்கு ஏன் வந்தே!” பரிவோட கேட்டார் ஆசார்யா.
 
 
“இவளுக்குப் பார்வை போனதுக்கு தெய்வ குத்தம் ஏதாவது காரணமா இருக்குமோன்னுட்டு எங்க ஊர் வழக்கப்படி குடும்பத்துக்குப் பரிச்சயமான நம்பூதிரி ஒருத்தர்கிட்டே பிரஸன்னம் பார்த்தோம் .க்ஷேத்ராடனம் செஞ்சா நிவர்த்தி ஆகிடும். இவளுக்குப் பார்வை வந்துடும்னு அவர் சொன்னார். அதான் குழந்தையையும்,இவளையும் கூட்டிண்டு க்ஷேத்ராடனம் பண்ணி, தீர்த்த ஸ்நானமும் சுவாமி தரிசனமும் பண்ணிண்டு வரேன்.
 
 
“கோயில்களுக்குப் போறே சரி. இங்கே எதுக்கு வந்தே? இது கோயில் இல்லையே!”-பெரியவா.
 
 
“நீங்க கோயில் இல்லைன்னு சொல்றேள். ஆனா, இதுதான் நடமாடும் தெய்வம் இருக்கிற இடம்னு, வைத்தீஸ்வரன் கோவில்ல இருக்கிற குருக்கள் ஒருத்தர் சொன்னார். ‘கலியுகத்துல வரக்கூடிய எத்தனையோ பிரச்னைகளுக்கெல்லாம் மருந்தா இருக்கிற மகான் காஞ்சிபுரத்துல இருக்கார். அவரைப் போய்ப் பாரு. உன்னோட ஆத்துக்காரிக்கு பார்வை கிடைக்கும்!’னு அவர்தான் சொன்னார். அதான் உங்களை தரிசனம் பண்ண வந்திருக்கோம்!” பவ்யமா அவர் சொல்ல,அவரோட ஆத்துக்காரியும் ‘ஆமாம்’கற மாதிரி தலையை அசைச்சா.
 
 
மௌனமா அவாளை ஒரு நிமிஷம் பார்த்தார் மகாபெரியவா
.
 
“மொத மொதெல்லா உங்களைப் பார்க்க வர்றதால என்ன எடுத்துண்டு வரணும்கறதுகூட எங்களுக்குத் தெரியலை. அதனால இதை மட்டும் வாங்கிண்டு வந்தோம்!” கையில இருந்த கொஞ்சம் வாழைப் பழத்தை மகாபெரியவா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் செஞ்ச அவர், தன்னோட ஒய்ஃபையும் நமஸ்காரம் செய்யச் சொல்லி அதுக்கு ஒத்தாசையும் பண்ணினார். அப்புறம் குழந்தையையும் ஆசார்யா திருவடி முன்னால கீழே விட்டுட்டு எடுத்துண்டார். அப்புறம் பிரசாதம் வாங்கிண்டு புறப்படலாம்னு நினைச்சு கையை நீட்டினவர்கிட்டே ஆசார்யா, “ஒரு நிமிஷம் இருங்கோ!” அபடின்னார்.
 
 
தனக்குப் பக்கத்துல இருந்த அணுக்கத் தொண்டர் ஒருத்தர்கிட்டே, “யார் கிட்டேயாவது டார்ச் லைட் இருக்கான்னு கேளு!” அப்படின்னார் -பெரியவா அதுக்காகவே கொண்டு வந்தவர் மாதிரி கூட்டத்துல ஒருத்தர் தன்னோட ஹேண்ட்பேக்ல வைச்சுண்டு இருந்த டார்ச்சை எடுத்து தொண்டர் கிட்டே குடுத்தார்.
 
 
டார்ச் லைட்டை அணுக்கத் தொண்டர் ஒரு மூங்கில் தட்டுல வைச்சுக் குடுத்தார். அதை எடுத்துண்ட ஆசார்யா,தன்னோட முகத்துக்கு நேரா,அதைத் திருப்பி,’ஆன்’ பண்ணினார்.
 
 
டார்ச்ல இருந்து வெளிச்சம் பரவித்து மகானோட முகத்துல அதுபட்டு தனக்குப் பெரும் பாக்யம் கிடைச்சதா பூரிச்சு பிரகாசித்தது..மகான் முகத்துல படர்ந்த வெளிச்சம் தவிர மீதி அவர் தலைக்குப் பின்னால இருந்த சுவர்ல பட்டு அப்படியே பூரண ஒளிவட்டமா ஜொலிச்சுது. அங்கே இருந்த எல்லாரும் அந்தப் பரவசமான காட்சியைப் பார்த்துண்டு இருக்கறச்சே, ஆசார்யா அந்த நபரைக் கூப்பிட்டார்.
 
 
“ஒன்னோட பார்யாகிட்டே நான் தெரியறேனான்னு கேளு!” அப்படின்னார்.
 
 
வந்தவர் திரும்பி தன்னோட ஆத்துக்காரிகிட்டே அதைக் கேட்கறதுக்குள்ளே.” ஆஹா என்ன ஒரு தேஜோமயமா சன்யாசி ஒருத்தர் உட்கார்ந்துண்டு இருக்கார்.அவரை எனக்கு நன்னா தெரியறதே!” அப்படின்னு பரவசமா,சந்தோஷமா குரல் எழுப்பினா அவரோட ஆத்துக்காரி.
 
 
ரெண்டுபேரும் பரம சந்தோஷமா மகாபெரியவாளை திரும்பவும் நமஸ்காரம் பண்ணினா.
 
 
” நான் பெத்த குழந்தையோட முகத்தைப் பார்க்கவே முடியாதோன்னு நினைச்சு தினம் தினம் ஏங்கினேன். உங்களாலதான் எனக்கு அந்த பாக்யம் கிடைச்சுது!”ன்னு தழுதழுக்கச் சொல்லி மகாபெரியவாளைக் கையெடுத்துக் கும்பிட்டார் அந்தப் பெண்மணி.
 
 
“அடடே ஒனக்குப் பார்வை என்னால வந்ததுன்னா சொல்றே? எனக்கு என்னவோ அப்படித் தோணலை. நீங்க இத்தனை நாளா தரிசனம் பண்ணிண்டு வந்தேளே, அந்த தெய்வங்களோட அனுகிரஹம்தான் நோக்கு நேத்ர தரிசனம் கிடைக்கப் பண்ணியிருக்கு. க்ஷேமமா ஒரு கொறையும் இல்லாம இருப்பேள். சௌக்யமா போயிட்டு வாங்கோ!” குங்குமப் ப்ரசாதமும் ஒரு ஆரஞ்சும் குடுத்து ஆசிர்வதித்தார் மகா பெரியவா.
 
எல்லாத்தையும் பண்ணிட்டு, எதுவுமே தான் செய்யலைன்னு சொல்லிக்கிற மகாபெரியவாளோட மகத்துவத்தை நினைச்சு சிலிர்ப்போட பிரசாதத்தை வாங்கிண்டு புறாப்பட்டா அவா.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...