விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் ஜெயந்தி நாள். சதுர்த்தி திதி கணபதிக்கு மிகவும் பிரதானமானது. ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு அதிதேவதை இருப்பார்கள். சதுர்த்தி திதியின் அதிதேவதி கணபதி.
இங்கு ஜெயந்தி, ஆவர்பவித்தல் என்ற சொற்களெல்லாம் நமக்கு புரிவதற்காக புராணங்கள் கூறும் பதங்கள். கணபதி ஒருமுறை பிறந்து பின் எப்போதோ மறையக்கூடியவர் அல்ல. எப்போதும் இருக்கும் தெய்வம் கணபதி.
சிவனும் பார்வதியும் புரிந்த தவத்தின் பலனாக கணபதி பாத்ரபத மாதம் சுக்ல சதுர்த்தி அன்று ஆவிர்பவித்தார். இதனை ‘வரதா சதுர்த்தி’ என்பர். பாத்ரபத மாதம் சுத்த சதுர்த்தியை விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இது புராணங்களிலும் சாஸ்திரங்களிலும் காணப்படும் அம்சம்.
இது மட்டுமின்றி இரண்டு வித சதுர்த்திகள் பிரதானமாக உள்ளன. சுத்த சதுர்த்தியை வரதா சதுர்த்தி என்றும் கிருஷ்ண சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைக்கிறோம்.
சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு என்னவென்றால்… பிரம்மதேவர் சிருஷ்டி தொடங்கியபோது தடைகள் ஏற்பட்டன. அவற்றை விலக்குவதற்கு பிரணவ தியானம் செய்தார். அந்த ஓங்கார சொரூபமே கணபதியாக சாக்ஷாத்காரமாகி விக்னங்களை நீக்கியது. அது கிருஷ்ண சதுர்த்தியன்று நடந்தது. அதனையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
மொத்தத்தில் சதுர்த்திக்கு இரண்டு வடிவங்கள். அவை கிருஷ்ண சதுர்ததி, சுக்ல சதுர்த்தி. அந்த இரண்டு வடிவங்களின் சதுர்த்தி திதிக்கும் கணபதியே அதிதேவதை. அதனால் அந்நாட்களில் கணபதியை வழிபடுகிறோம்.
விரும்பியவை கிடைக்க வேண்டுமென்ற இஷ்ட சித்திக்காக சுக்கிலபட்ச சதுர்த்தியன்று விநாயக சதுர்த்தியை கொண்டாடுகிறோம். கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று கிருஷ்ண சதுர்த்தியன்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்கிறோம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்