பூஜை அறை தெய்வங்கள்

பூஜை அறை தெய்வங்கள்
ஹிந்து மதத்தைப் பொருத்தவரை ஆண்டவனை அந்நியமாக பார்க்கவில்லை.  நம்மில் ஒருவராகத்தான் பார்க்கிறது. நாம் இருக்கும் வீட்டிலேயே அவருக்கு என்று இடம் ஒதுக்கிக் கொடுத்து, நாம் உண்ணும் உணவையே அவருக்கும் நைவேத்தியம் செய்கிறோம் என்றால், ஆண்டவன்பால் இருக்கும் தூய அன்பின் வெளிப்பாடுதான் இது.
அனைத்து வீடுகளிலும் பூஜையறை இருக்கிறது. சின்னதோ பெரியதோ, அலமாரியில் மாட்டி வைத்திருக்கிறோமோ அனைவரின் வீட்டிலும் இருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லாமல் பல தெய்வப்படங்களை வைத்திருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தினசரி  துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். 
சிலர் போகும் இடமெல்லாம் கண்ணில் காணும் படங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் மாட்டி வைத்து விடுவார்கள். பராமரிக்க நேரம் இல்லாதபட்சத்தில் இதுபோன்ற செயல்களை தவிர்ப்பதே நல்லது. அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது. 
விக்கரகங்களாக இருந்தால் மட்டும் அபிஷேகம் செய்ய வேண்டும். அதுவும் விஷேச காலங்கள், பௌர்ணமி, வெள்ளி செவ்வாய் போன்ற நாட்களில் செய்தால் போதும். மற்றபடி படங்களாக இருந்தால் மாலைப் போட்டு, சந்தனம் குங்குமம் வைத்து, பத்தி ஏற்றி, பழம் கனிகள், இனிப்புகள் வைத்து நைவேத்தியம் செய்தால் போதுமானது. 
 பூஜை அறை என்பது நம் வீட்டில் உள்ள கோவில். பூஜையறையில் முதலில் தெய்வ படங்களை சுவரில் மாட்டும் பொழுது தெய்வத்தின் கண்கள் தரையில் படும்படியாக படங்களை மாட்ட வேண்டும். படங்கள் பூமியை நோக்கி இருக்க வேண்டும். சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. 
துஷ்டமான தெய்வங்களை, மண்டையோடு மாட்டிய காளியை, அரக்கனை வதம் செய்யும் துர்க்கையை, நெஞ்சை கிழிக்கும் ஆஞ்சநேயர் இப்படி எந்த தெய்வப்படத்தையும் வீட்டில் வைக்கக் கூடாது.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். அந்த குலதெய்வத்தின் படத்தை வீட்டின் பூஜையறையில் வைக்கலமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு.
குலதெய்வ படம் என்றால் எந்த மாதிரியான தெய்வம். அந்த தெய்வத்திற்கு எந்த மாதிரியான நைவேந்தியங்கள் வைப்பீர்கள் என்பதை பொறுத்தே பூஜையறையில் வைப்பதா? தனியே ஒரிடத்தில் வைப்பதா என்பதை முடிவு செய்ய முடியும். உக்ர தெய்வங்களை வீட்டினுள் வழிபடுவது உகந்தது அல்ல. உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
இறந்துபோன முன்னோர்கள் நம் தெய்வங்கள்தான்.  நம்மை வளர்த்து ஆளாக்கி, மனிதனாக உருவாக்கி, நம் கண் முன்னே நடமாடி மறைந்த பெற்றோர்கள் தெய்வங்கள்தான். ஆனாலும் அவர்கள் படத்தை பூஜையறையில் வைக்கக் கூடாது.  அவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுவார்களே தவிர அவர்கள் தெய்வம் அல்ல. அதனால் இறந்தவர்கள் படங்கள் தனியாக வைத்து பூஜை செய்வது நல்லது. 
வீட்டில் சிலை வழிபாடு செய்வதாக இருந்தால் அளவில் மிகப் பெரியதாக இருக்கக் கூடாது. பீடத்துடன் சேர்த்து அதிகபட்சம் ஒருஅடிக்கு மேல் இருக்கக் கூடாது.  இந்த அளவு சிலை வைத்திருந்தால் கூட, அபிஷேகம் செய்து வழிபட்டால் மட்டுமே பூரணப்பலனை பெற முடியம்.
வீட்டில் கருங்கல் சிலைகள் வைக்கக் கூடாது. ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே அது உகந்தது.  மாவு பொருட்களால் செய்யப்படும் சாமி சிலைகள் அலங்காரமாக பயன்படுத்தலாமே தவிர பூஜிக்க உகந்தது இல்லை.  அலங்காரமாக பயன்படுத்துகிறோம் என்பதால் கண்ட இடத்திலும் சாமிசிலைகளை வைக்கக் கூடாது. தீட்டு தொடக்கு இருக்கும் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
பூஜை அறை என்று தனியாக இருந்தால் பூஜை முடிந்தவுடன் கதவுகளை சாத்தி வைக்க வேண்டும். பெண்கள் சுத்தமாக இருக்கும் பொழுது மட்டுமே வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்தால் போதும். ஒரு படம்வைத்து பூஜை செய்தாலும் அதை முறையாக செய்ய வேண்டும்.
அடிக்கடி பூஜை அறையை, சாமி படங்களை சுத்தம் செய்ய வேண்டும்.  தூசி, ஓட்டடை படிந்து சுத்தம் செய்யாமல் வைத்திருக்கக் கூடாது. 
பழைய படங்கள், உடைந்த பொம்மைகள் மற்றும் கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன் இருக்கும் படங்கள் கண்டிப்பாக பூஜை அறையில் வீட்டிலேயே இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் படங்களை ஆற்றில் கடலில் விட்டுவிடுவது நல்லது.
வீட்டில் பூஜை அறையில் ஒற்றை குத்து விளக்கு ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு என்றால் அதை மட்டும் ஏற்றலாம், குத்து விளக்கு என்றால்  இரண்டு குத்து விளக்குகள்தான் ஏற்ற வேண்டும் மூன்று அடுக்கு வைத்த விளக்கு மிகச் சிறப்பானது. 
விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம் மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல. வீட்டில் பூஜை அறையில் எப்பொழுதும் ஒரு சொம்பு தண்ணீர் இருப்பது நல்லது. அதே போல் கற்பூரம் ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது நல்லது. சுத்தமாக வீட்டை வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும் நம்மைத் தேடிவரும்.