கேள்வி:- ராமன் வன வாசத்திற்குச் செல்லும்போது சுமித்ரா, “ராமன் அவதார புருஷன். சிறிதும் கவலை கொள்ளாதே!” என்று கௌசல்யாவை சமாதானப் படுத்துகிறாள். இந்த ஞானம், ராமனைப் பெற்ற தாயான கௌசல்யாவுக்குத் தெரியாதா?
பதில்:-
“ராம: பித்ரோ: புத்ரபாவம் ராவணாய மனுஷ்யதாம்
ருஷீணாம் பகவத்பாவம் தர்சயன் விசசாரஹ”
-“ராமன் தாய் தந்தையருக்குப் புத்ரனைப் போல, ராவணனுக்கு சாமானிய மனிதனைப் போல, ருஷிகளுக்குத் தன் உண்மை சொரூபமான தெய்வம் போல தென்பட்டு நடந்து கொண்டான்” என்பது பரத்வாஜ ராமாயண வசனம்.
கௌசல்யா, தசரதர் இவர்களின் பார்வையில் ராமன் அவர்களின் புதல்வன். அந்த பாவனையோடு உய்வடைந்த புண்ணிய பலன் அவர்களுடையது. நந்தகோபனும் யசோதையும் ஸ்ரீகிருஷ்ணனை தம் புதல்வனாகவே பாவனை செய்து உய்வடைந்தார்கள். தாற்காலிகமாக விஸ்வரூபத்தை காட்டினாலும் உடனே யோக மாயையின் பிரபாவத்தால் குழந்தை போலவே பிரமிக்கச் செய்தான். அந்த மாயையையே ராமாவதாரத்தில் கூட நிகழ்த்தி தன் அவதார காரியத்தை நிறைவேற்றிக் கொண்டான்.
அந்த காரணத்தால்தான் பெற்ற தாயான கௌசல்யாவுக்கு ராமன் அவதார புருஷன் என்று கிரகிக்க இயலவில்லை. ராமாயணத்தின்படி பார்த்தால் சுமித்ரா தத்துவ ஞானம் கொண்டவள். வால்மீகி ராமாயணத்தில் சுமித்ராவின் கதாபாத்திரம் அதிகம் வெளிப்படாவிடினும் கௌசல்யாவிடம் அவள் கூறிய சொற்களின்படி பார்த்தால் ராம தத்துவம் புரிந்தவளாக அறிய முடிகிறது. சில வியாக்கியான கர்த்தாக்களின் அபிப்பிராயப்படி சுமித்ரா உபாசனை தர்மத்திற்கு சங்கேதமாக கூறப்படுகிறாள். அதனால்தான் கைங்கர்ய சுபாவம் கொண்ட லட்சுமணன் அவளுக்குப் புதல்வனாகப் பிறந்தான்.
***
ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…
தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)