ருஷி வாக்கியம் (29) – தர்மப் பாலத்தை தகர்க்கலாகாது

ராமச்சந்திர மூர்த்தி ராமாயணத்தில், “தர்மத்தில் மட்டுமே நிலை நிற்பேன். அதனால் நான் ரிஷிகளுக்கு சமமானவன்” என்ற உயர்ந்த வார்த்தைகளை கைகேயியிடம் கூறுகிறான்.

“வித்திமாம் ருஷி பிஸ்துல்யம் கேவலம் தர்ம மாஸ்ரிதம்” – என்கிறான்.

தர்மத்தை சாதாரணமாக நாம் எதனால் மீறுகிறோம் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். நமக்குத் தெரியும் தர்மம் எது அதர்மம் எது என்று. ஆயினும் ஏன் தர்மத்தை பின்பற்றாமல் அதர்மத்தை பின்பற்றுகிறோம்? இதற்கு காரணமாக சிலவற்றை கூறுகிறான் ராமச்சந்திரமூர்த்தி.

முதலாவது லோபம். இரண்டாவது மோகம். மூன்றாவது அஞ்ஞானம். நான்காவது விவேகமின்மை. அஞ்ஞானமும் விவேகமின்மையும் ஒரே பொருளைக் கொடுத்தாலும் விவேகத்தை இழப்பதால்தான் லோபம், மோகம், அறியாமை என்ற மூன்றும் பிறக்கின்றன என்பதால் விவேகமின்மையே அனைத்து தீய குணங்களுக்கும் மூலகாரணமாகிறது. விவேகம் என்றால் வேறுபடுத்திப் பார்க்கும் குணம். எது தர்மம் எது அதர்மம் என்று தெளிவாக நமக்குத் தெரிந்து, பிரித்துப் பார்க்க முடிந்தாலும் கூட நாம் ஏன் விவேகத்தை இழக்கிறோம்?

ஓரொரு முறை தர்மம் என்றெண்ணி அதர்மத்தைச் செய்கிறோம். அதர்மம் என்று தெரிந்தும் அதையே செய்கிறோம். இதுபோல் விவேகத்தை இழப்பதால் லோபம் மோகம் அறியாமை மூன்றும் நம்மை ஆட்கொள்கின்றன. அதுமட்டுமல்ல இம்மூன்று குணங்களும் நம்மை ஆட்டிப் படைப்பதால் கூட நாம் விவேகத்தை இழக்கிறோம். அதனால அதர்மத்தைப் பின்பற்றி தர்மத்தை விட்டு விடுகிறோம்.

ஆனால், “எத்தகைய சூழலிலும் லோபத்தாலோ மோகத்தாலோ அஞ்ஞானத்தாலோ விவேகத்தை இழப்பதாலோ சத்திய சொரூபமான தர்மத்தை விட்டு விலக மாட்டேன்” என்று கூறுகிறான் ராமச்சந்திர மூர்த்தி. இது அரச தர்மம் மட்டுமல்ல. தனிமனித தர்மமும் கூட.

லோப குணத்தால் சத்தியத்தை மீறுவது ஏன்? சில நேரங்களில் சில நியமங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதால் நாம் உயர்ந்த நிலையை அடைகிறோம். அதன்பின் விதி வஞ்சிப்பதாலோ, பிராரப்தம் காரணமாகவோ அத்தகைய உயர்ந்த நிலையை இழந்து விடுகிறோம். அப்போது மீண்டும் முதலில் இருந்த உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் முதலில் எந்த நியமத்தை கடைப்பிடித்து வந்தோமா அந்த நியமத்தை மீறி நடந்து கொள்கிறோம். இங்கு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக நியமத்தை மீறுகிறோமா என்றால் அதுவும் இல்லை. லோபத்தால்தான் மீறுகிறோம்.

லோபம் என்றால், “ஒரு பொருள் எனக்கு வேண்டும்; அல்லது என்னிடம் இருக்கும் பொருள் என்னை விட்டுப் போகக்கூடாது; மேலும் மேலும் அது வளர வேண்டும்” என்ற எண்ணத்தின் பெயர் லோபம். அத்தகைய லோப குணத்தால் தர்மத்தை மீறுகிறோம்.

தர்மத்தை மீறுபவர்கள் செய்யும் தீய செயல் என்னவென்றால் அதர்மத்தை தர்மம் போல் பிரச்சாரம் செய்வதும் தர்மத்தை அதர்மம் போல் பிரச்சாரம் செய்வதுமே! அவனுடைய லட்சியம் ஒன்றுதான்! லோபம் என்ற தீய குணத்தால், தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற சுயநலம். அதன்மூலம் சத்திய சொரூபத்தை அவன் தகர்க்கிறான்.

அதேபோல் மோகத்தாலும் தர்மத்தை மீறுகிறான். மோகம் என்றால் ஒரு வஸ்துவின் மேல் ஏற்படும் அதீதமான விருப்பம். அது போன்ற கோரிக்கை ஏற்படுவதால் அந்த பொருளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஏதேதோ செய்கிறான். இது எப்படிப்பட்டது என்றால், “நான், என் பிள்ளைகள், என் உறவுக்காரர்கள் மேலும் மேலும் பலன்களைப் பெற வேண்டும். என்னைச் சேர்ந்தவர்கள் லாபம் பெற வேண்டும்” என்று ஒரு மனிதன் மீதோ அல்லது ஒரு விஷயத்தின் மீதோ வைத்த “என்னுடைய” என்ற மமகாரம். உண்மையில் இது அர்த்தமற்றது என்று அவனுக்கும் தெரியும். ஆனாலும் அதையே விடாமல் பிடித்துக் கொண்டிருப்பான். இந்த குணம் மோகம் எனப்படும். அப்படிப்பட்ட மோகத்தால் ‘என்னுடையது, என்னுடையவர்கள்’ என்ற ஆசை அதிகமாகி அவர்களுக்காக தர்மத்தை விட்டு விலகுகிறான்.

இனி அறியாமையால் தர்மத்தை தவறுபவர்கள். இவர்களைக் கொஞ்சம் மன்னிக்கலாம். ஏனென்றால் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள். சிலர் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அவர்களிடம் அஞ்ஞானம் பாளமாகப் படிந்து விட்டது என்று பொருள். அதன் மூலம் அவனுக்கும் ஆபத்து. பிரபஞ்சத்திற்கும் ஆபத்து.

இவ்விதம் மோகம், அறியாமை, லோபம் இவற்றால் விவேகத்தை இழந்தவர்கள் சத்தியம் என்னும் பாலத்தை தகர்க்கிறார்கள் என்கிறான் ராமன். ஏனென்றால் காலம் என்பது ஒரு பிரவாகம். சம்சாரமும் ஒரு பிரவாகம். இந்த பிரவாகத்தில் நாம் அடித்துச் செல்லப்படாமல் கரை சேர வேண்டுமென்றால் அதாவது சத் கதியைப் பெற வேண்டுமென்றால் அதற்கான சேது தர்மமே! அதனால் தர்மத்திற்கு ‘சேது’ என்று பெயர். தர்மமே சத்திய சொரூபம்! சத்தியமே தர்ம சொரூபம். சத்தியம் என்னும் சேதுவை நாம் மோகத்தாலோ லோபத்தாலோ அறியாமையாலோ விவேகமின்மையாலோ தகர்க்கக் கூடாது என்கிறான் இராமன். அதாவது தர்மம் என்னும் பாலத்தை உடைக்கக்கூடாது.

“தர்மப் பாலத்தை அரசாளுபவன் பாதுகாக்க வேண்டும். பாலத்தைத் தகர்த்து விட்டால் அவன் மட்டுமல்ல இன்னும் பலரும் மூழ்கிவிடுவர். அதனால் அரசன் ஒரு சேதுவைப் பாதுகாப்பது போல் தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் தர்மம் என்னும் சேதுவின் மூலமே நாட்டு மக்கள் அனைவரும் உய்வடைய முடியும். அதனால் அவர்கள் நலமாக கரை சேர வேண்டுமென்றால் அவர்களுக்காக தர்மம் என்னும் சேதுவை பாதுகாக்க வேண்டிய கடமை கட்டாயமாக அரசாட்சி செய்பவருக்கு உள்ளது” என்கிறான் ராமச்சந்திர மூர்த்தி.

“நான் தவம் என்னும் தர்மத்தைக் கடைபிடித்து இங்கே இருந்து வருகிறேன். யாரொருவன் தர்மத்தை விட்டு விலகி பிரதிக்ஞைக்கு கட்டுப்படாமல் இருப்பானோ அப்படிப்பட்டவன் செய்யும் பூஜைகளை இறைவன் ஏற்க மாட்டான். பித்ரு தேவதைகளும் ஏற்க மாட்டார்கள்!” என்று கூட ராமச்சந்திரமூர்த்தி எச்சரிக்கிறான் என்றால் அதர்மம் செய்பவர்கள் செய்யும் பூஜைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை அறிய வேண்டும்.

அதனால் அதர்மம் செய்பவர்களுக்கு நாம் ஆலயத்தில் வரவேற்பு கூறி தெய்வ தரிசனம் செய்வித்தாலும் கூட, இறைவன் அவர்களை மெச்சிக் கொள்ள மாட்டான். இதனை நன்கு உணர வேண்டும்.

தர்மத்தோடு வாழ்பவர்களின் பிரார்த்தனைகளை மட்டுமே இறைவனை ஏற்பான்.

எனவே இறைவன் நம் குறைகளை தீர்க்க வேண்டுமென்றால் இறைவன் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். அவன் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் சத்தியத்தையும் தர்மத்தையும் பின்பற்ற வேண்டும் என்று இறைவனான ராமச்சந்திரமூர்த்தி அற்புதமாக போதித்துள்ளான்.

அத்தகைய தர்ம விக்ரகமான ராமச்சந்திர மூர்த்திக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...