annamalai sattaiyadi - 2026

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உரத்த சிந்தனை அரசியல்
annamalai sattaiyadi - 2026

உயர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நேரடியானதொரு வேண்டுகோள்!

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

சமீபகாலமாக, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒருவராக உங்களை நான் உணர்கிறேன். உங்களுடைய நேர்மையான, விவேகமான, தைரியமான நடவடிக்கைகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

உங்களைப் பிடித்த அந்த கணத்திலிருந்து, உங்களுக்கு ஆதரவாக இணையத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன். நான் உங்கள் மேல் பற்றுக்கொண்ட ஒரு ரசிகன்!

ஆனால், சமீபத்தில் நீங்கள் விடுத்த, “ஜாதியையும் மதத்தையும் வீட்டில் விட்டுவிட்டு வாருங்கள்” என்ற வேண்டுகோளைப் படித்தேன்.

உங்கள் உள்மனதில் என்ன நோக்கம் இருக்கிறது என்பது சாதாரண மக்களுக்கு உடனடியாகப் புரிய வாய்ப்பில்லை. அதனால், நீங்கள் விடுத்த இந்த வேண்டுகோளை அவரவர் தங்களுக்குச் சாதகமாக மாற்றி மாற்றி எழுதி வருகிறார்கள். இங்கு எல்லாமே அரசியல்தான் என்பது எங்களைப் போன்ற முதியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நம் நாட்டு சுதந்திரத்தின் மேன்மையை உணர்ந்து, “ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று அன்று மனம் நொந்து பாடினார் மகாகவி பாரதியார்.

நாடு போகும் போக்கைப்பார்த்து மனம் வெதும்பிக் கிடந்த எங்களைப் போன்ற முதியவர்களில், சுதந்திரத்தின் மதிப்பு தெரிந்த நானும் ஒருவன்.

பாரதி பாடிய அந்த “வாராது போல் வந்த மாமணியாய்”, வெகு காலத்திற்குப் பிறகு நமக்குக் கிடைத்த பொக்கிஷமாய் உங்களை நான் நினைத்தேன்; நம் தேசத்தின் விடிவெள்ளி நீங்கள் என்று நம்பினேன். அதனால்தான், என் பாசத்தின் விளைவாக உங்களை உரிமையோடு ஆசீர்வதித்தேன்.

நீங்கள் அரசியல் செய்யுங்கள்; சாதுர்யமான அரசியல் செய்யுங்கள். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செய்யும் அந்த அரசியலை நாங்களும் ரசிக்கிறோம். ஆனால், அதைச் செய்யும்போது உங்களால் மட்டுமல்ல, யாராலுமே தங்களது ஜாதியையும் மதத்தையும் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வர முடியாது என்பதே நிதர்சனம்!

ஏனென்றால், ஜாதியும் மதமும் நாம் பிறந்த பிறகு தனியே முளைத்த சட்டையோ அல்லது வேறு விதமான அணிகலன்களோ அல்ல. அவை நம்முடன் பிறந்து, நம்முடனேயே வளருகின்ற உணர்வுகள். நாம் பிறந்த பின் ஜாதியும் மதமும் பிறக்கவில்லை; நாம் தான் ஏற்கனவே இருந்த ஜாதிகளிலும் மதங்களிலும் பிறந்திருக்கிறோம்!

பழைய அரசியல்வாதிகளும் புதிய அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியான பரப்புரையைத்தான் செய்கிறார்கள். உலகின் எந்த மூலையாக இருந்தாலும் சரி, எல்லா மதத்தவரும் அனைத்து ஜாதியினரும் இருந்தார்கள், பல மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள், எப்போதும் இருப்பார்கள். அதை மாற்றவே முடியாது.

அரசியலில் பேசுவதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் எத்தனையோ ஆக்கபூர்வமான செயல்களும், முன்னேற்றப் பாதைகளும் இருக்கின்றன.

அவற்றையெல்லாம் பேசாமல் விட்டுவிட்டு, எல்லோருமே ஜாதியையும் மதத்தையும் பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். இந்த இரண்டையும் பிடித்துக்கொண்டுதான் அரசியலே செய்கிறார்கள். நீங்களும் அதே ஜாதி, மத, இன அரசியலைத்தான் செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

இந்திய நாட்டிலே ஹிந்துவாகப் பிறந்து, தங்கள் குல தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களைப் பார்த்து, நெற்றியில் வைத்த பொட்டை அழிக்கச் சொல்கிறார்கள்; பூணூலை அறுக்கச் சொல்கிறார்கள். மற்ற மதத்தினரைப் பார்த்து இவர்களால் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்க முடியுமா? அல்லது ஹிந்து அல்லாதோரை பொட்டு வைக்கச் சொல்லி வற்புறுத்த முடியுமா? இவர்களால் முடியாது!

ஜாதியையோ மதத்தையோ யாரும் வீட்டில் விட்டுவிட்டு வர முடியாது. ஆனால், மற்ற ஜாதியினரையும் மதத்தவரையும் அவமதிக்கும் தீய குணத்தை வேண்டுமானால் விட்டுவிட்டு வரலாம்!

மண்ணில் ஜாதி, மரத்தில் ஜாதி, கனியில் ஜாதி, பூவில் ஜாதி என்று இயற்கையே பல பிரிவுகளை (வகைகளை) உருவாக்கி வைத்திருக்கிறது. ஜாதிகளை ஒழிக்க முடியாது.

எல்லா மதத்தவரும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான்; அதற்கு மதம் என்பது ஒரு கருவி, ஒரு பயண வாகனம். ஆகவே, ஜாதியையும் மதத்தையும் யாராலும் அழிக்க முடியாது.

ஆகவே, உங்களிடம் என் வேண்டுகோள் இதுதான்: அனைத்து ஜாதியினரையும் மதிக்கும் பண்பை மக்களிடம் வளர்க்கலாம்.

மதங்களையும் ஜாதிகளையும் கடந்து மனிதம் மேலோங்கச் செய்யலாம். மனிதரை மனிதராக நேசிக்கவும் மதிக்கவும் கற்றுத்தர வேண்டும்.

அப்படிப்பட்ட பொதுமையான, ஒற்றுமையான குணத்தை வளர்க்க நீங்களும் முன்வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

எல்லாவித பேதங்களையும் மறந்து மக்கள் ஒன்றாக இணைய மனப்பக்குவம் வேண்டும்.

அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை மக்களிடம் வளர்த்தெடுங்கள். நாம் தெளிவோடு இருப்போம்; மன பேதங்களைக் களைவோம்!

வந்தே மாதரம்! வாழ்க சுதந்திரம்! ஜெய் ஹிந்த்! வாழ்க பாரத மணித்திருநாடு! பாரத மாதாவுக்கு வணக்கம்.

நன்றி,
அன்புடன்,
தமிழ்த்தேனீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.