பிள்ளையார் செய்திகள்

விநாயகர் இடுப்பில் சர்ப்பம்

நர்மதா நதிக்கரையில், பேரகாம் என்னும் தலத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் நர்த்தன கணபதி, இடையில் சர்ப்பப் பட்டயம் கட்டியபடி காட் சியளிக்கிறார். கேது கிரகத்துக்கு அதிபதியான விநாயகர், பாம்பு தோஷத்தை விலக்குபவர் என்பதால், இவ்வாறு பட்டயம் கட்டியிருக்கிறார் என்கிறார்கள்.


விநாயகர் ஊர்கள்
  • காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கல் அருகில் உள்ள ஊர் ‘விநாயக நல்லூர். 
  • கோவையில் உள்ள ஒரு பகுதியின் பெயர் ‘கணபதி.’
  • திருநெல்வேலி, காலக்குடி அருகே உள்ள ஊர் ‘பிள்ளையார் குளம்.
  • கோவை, வீரபாண்டி அருகில் உள்ள ஊர் ‘கணபதி பாளையம்.’ 
  • காரைக்குடி அருகில் உள்ள ஊர் பிரசித்தி பெற்ற ‘பிள்ளையார் பட்டி.’ 
  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகில் இருப்பது  ‘இருபிள்ளையார் நத்தம்.

அபூர்வ முருக விநாயகர் – மதுராந்தகம்

மதுராந்தகத்தில் விநாயகர் கோயிலில் முருகப் பெருமானின் இருபுறமும் விநாயகர் அமர்ந்துள்ளார். இந்தக் காட்சி அபூர்வமானது.

அன்னதான கணபதி – திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலின் கிழக்கு மதில் சுவரின் உட்புறத்தில் மேற்கு நோக்கிய வண்ணம் தனிச் சந்நதியில் ‘அக்கிர சாலா  கணபதி’ வீற்றிருக்கிறார். அந்தக் கோயிலில் அன்னதானம் செய்யப்பட்ட காலத்தில் அங்கே கணபதி வீற்றிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது ஐதீகம்.

பருப்பு ரசம்தான் அபூர்வ நைவேத்யம் – கும்பகோணம்

கும்பகோணம், நாகேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர்  ‘சுரப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். காய்ச்சல் நோய் கண்டவர்கள் நோய் தீர  இவரை வணங்கினால் காய்ச்சல் மறைகிறது. பருப்பு ரசம்தான் இவருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

அரிய தகவல்கள்

  • பிள்ளையார்பட்டி விநாயகருக்கு காண்டாமிருகக் கொம்பினாலும் அபிஷேகம் நடைபெறுவது மிக அபூர்வமாகும். 
  • செய்யாறில் உள்ள கோயிலில் நான்கு அடி உயரத் திருவுரு, பிரபையுடன் சேர்த்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய விநாயகர் சிலை உள்ளது. 
  • கொல்லூர், முரடேசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தலையில் பள்ளத்துடன் காணப்படுகிறார். 
  • தாரமங்கலம் ஊரில் உள்ள கோயிலில் சித்தி விநாயகர் சந்நதி அடித்தளம் முதல் கோயில் கோபுரம் வரை ஒன்பது கற்களால் காரைக் கலப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.