ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.45 முதல் 4.30 மணி வரை டிரம்ப்பும் மோடியும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும் சந்திப்பது இரண்டாவது முறையாகும்.
முதல் சந்திப்பு ஜி 20 மாநாடுகளிடையே ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்றது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தால் நிலவும் பனிப்போர் குறித்து டிரம்ப் மோடியுடன் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய இந்திய அரசு எடுத்த முடிவு அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தப் பிரச்சினையில் இந்தியா பாகிஸ்தானைத் தவிர மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
ஆயினும் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று டிரம்ப் அண்மையில் மூன்றாவது முறையாக குறிப்பிட்டுள்ளார். இன்றைய சந்திப்பிலும் அதனை டிரம்ப் முன்வைப்பார்.ஆனால் டிரம்ப்புக்கு உரிய விதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் மோடி டிரம்ப் பேச்சுகளில் எதிரொலிக்கக் கூடும்.இது தவிர வர்த்தக உறவுகளில் சுங்க வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் நீடிப்பதால் அதற்கு தீர்வு காண இருதலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். டிரம்ப் தவிர மேலும் நான்கு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருநாட்டு பரஸ்பர உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
பிரதமர் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தையின் போது ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது, ஜி 7 நாடுகளில் ரஷ்யாவை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொருளாதாரம், சீனா வர்த்தகம் போன்றவற்றுடன் இவை விவாதிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென எதிர்பாராத விருந்தினராக ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் பிரான்சுக்கு வந்து ஜி 7 மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதைத் தடுப்பதற்கும் அமெரிக்கா ஈரான் இடையிலான மோதலை தணிப்பதற்கும் இச்சூழல் உதவும் என்று ஜி 7 நாட்டு தலைவர்கள் நம்புகின்றனர்.ஈரானுடன் எண்ணெய் பொருட்கள் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் செய்வதை இந்தியா வரவேற்கிறது.