இந்து மதம் இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து ஜாதிகளையும் ஒன்று சேர்த்து ஒரு பெரு மரபாக ஒற்றைப்படையாக ஆவது சரியென்றால், கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்வது பல மடங்கு சரியாகத்தானே இருக்கவேண்டும்?
இரண்டு அடையாளங்கள் ஒன்று சேர்ந்து பெரிதாகும்போது பரஸ்பர புரிதலுடன் பரஸ்பர மரியாதையுடன் அந்தக் கலப்பு நடக்கவேண்டும். ஒன்று முழுவதுமாக அழிந்துபோனாலோ பெருமளவுக்கு மாற்றப்பட்டாலோ அது தவறு. இரு தரப்புக்கு இடையிலான எந்தவொரு பரிமாற்றத்திலும் இரு தரப்புக்கும் நன்மை இருக்கவேண்டும். 50-50 என்பது லட்சிய எதிர்பார்ப்பு. 60-40 என்றாவது இருக்கவேண்டும். 70-30 கூடப் பரவாயில்லை. 90-10 என்று இருப்பது நிச்சயம் தவறுதான்.
கிறிஸ்தவ – இந்து கலாசாரக் கலப்பு என்பதோ இஸ்லாமிய – இந்து கலாசாரக் கலப்பு என்பதோ ஆரோக்கியமாக நடப்பதில்லை. கிறிஸ்தவம் இந்து மதத்தின் அனைத்தையும் இடம் பெயர்க்கப் பார்க்கிறது. இஸ்லாமும் அப்படியே. ஆனால், இந்து பெருந்தெய்வ மரபுக்கும் குல தெய்வ நாட்டார் மரபுக்கும் (பரிவார தெய்வம், எல்லைத் தெய்வம்) இடையிலான கலப்பு என்பது மிகவும் இயல்பான வளர்ச்சிப் போக்காக, நேர்மையான பரிமாற்றமாக இருக்கிறது. குங்குமம், விபூதி, புற்று மண் என நாட்டார் வழிபாட்டின் அம்சங்கள் பெருந்தெய்வ மரபிலும் அப்படியே தொடர்கின்றன.
குல தெய்வ மரபின் உருவ வழிபாடுகள் பெருந்தெய்வ மரபிலும் அப்படியே தொடர்கின்றன. குல தெய்வ மரபின் கற்பூர ஆரத்தி, வெற்றிலை பழம், பூ, நிவேதனம் என எல்லாமும் பெருந்தெய்வ மரபிலும் இடம்பெறுகின்றன. பொங்கல், சல்லிக்கட்டு, கார்த்திகை தீபம், ஆடி மாதக் கூழ் வார்த்தல் என பழங்கால திருவிழாக்கள் அனைத்தும் அப்படியே இன்றுவரை இந்துப் பெருமரபுக்குள் தொடர்கின்றன. நாட்டார் குல தெய்வ மரபின் நீத்தார் சடங்குகள் இந்து மதத்துக்குள் இயல்பான வளர்ச்சிப் போக்குடன் தொடர்கின்றன. இந்த அம்சங்கள் எதுவுமே கிறிஸ்தவ இஸ்லாத்துக்குச் சென்றால் தொடர்வதில்லை.
சமீபகாலமாக இந்து அடையாளங்களை கிறிஸ்தவம் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இது எப்போது வரவேற்கத் தகுந்ததாக ஆகுமென்றால், அந்த அங்கீகாரம் மேலோட்டமான புற அம்சங்கள் சார்ந்ததாக இருக்காமல் இந்து ஆன்மிகத்தின் உண்மையான உள் வாங்கலாக இருக்கவேண்டும். திருவள்ளுவரை மதித்து ஏற்பது என்பது அவரைப் போல் தாடி வளர்த்துக்கொண்டு ஆடு மாடை வெட்டிக் கொல்வதாக இருக்கக்கூடாது. புலால் உண்ணாமையை ஏற்றுக்கொள்வதாக இருக்கவேண்டும்.
பரிவார தெய்வ மரபின் ஆதார அம்சம் என்னவென்றால் அது இன்னொரு பரிவார தெய்வ வழிபாட்டைப் பழிக்காது; ஒழிக்க நினைக்காது. சுடலை மாடன் என்றாவது இசக்கி மாடனை எதிர்த்ததுண்டா… எந்த ஜாதித் தாய் தெய்வமாவது இன்னொரு ஜாதித் தாய் தெய்வத்தை அழிக்க நினைத்தது உண்டா? இந்தப் பன்முகத் தன்மைதான் பரிவார தெய்வ மரபின் அடி நாதம். அது பெருந்தெய்வ மரபிலும் அப்படியே தொடர்கிறது. ராமரையும் கும்பிடலாம்; சிவனையும் கும்பிடலாம்; விநாயகரையும் கும்பிடலாம்; முருகரையும் கும்பிடலாம்; கூடவே அவரவர் குல தெய்வங்களையும் கும்பிட்டுவரலாம்.
கிறிஸ்தவமும் இஸ்லாமும் அந்தப் பன்மைத்துவத்தை ஏற்பதில்லை. எனவேதான், நாட்டார் குல தெய்வ மரபுகள் ஒன்று சேர்ந்து இந்துப் பெரு மரபாக ஆவது உயர் ஆன்மிக, ஜனநாயக, சமத்துவச் செயல்பாடாக இருக்கிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய ஒற்றைப்படையாக்கம் என்பது அழிவுச் செயல்பாடாக சர்வாதிகாரம் மிக்க மதவெறிச் செயல்பாடாக இருக்கிறது. கிறிஸ்தவமும் இஸ்லாமும் தாம் சென்ற இடத்து கலாசார மரபுகளை மட்டுமல்ல; அவை தோன்றிய இடங்களின் பழங்குடி மரபுகளையும் அழித்தொழித்தே பூதாகரமாக ஆகியிருக்கின்றன. இந்து மதம் மட்டுமே ஆதி கால மரபுகளை அழிக்காமல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
இங்கு இன்னொரு கேள்வி எழக்கூடும். பரிவார தெய்வ மரபு அசைவப் படையலைக் கொண்டது. பெருந்தெய்வக் கோவில்களில் அது தடை செய்யப்பட்டுள்ளது. எங்கே பரிவார தெய்வ மரபை அனுசரித்து நடந்திருக்கிறது?
இஸ்லாமும் கிறிஸ்தவமும் இந்து நாட்டார் – பரிவார தெய்வப் பண்பாட்டின் எந்தவொரு அம்சத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை; அசைவப் படையலையும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்துப் பெரு மரபு பெரும்பாலான நாட்டார் வழிபாட்டு அம்சங்களை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அசைவ படையலை மட்டும் தவிர்க்கச் சொல்கிறது.
இதற்குக் காரணம் என்ன..?
நாட்டார் மரபின் அசைவ வழிபாட்டை இந்துப் பெரு மரபு இழிவாகப் பார்ப்பதால் அப்படிச் செய்யவில்லை. இறைவன் இந்த உலகம் முழுவதையும் படைத்தவன் எனும்போது விலங்குகள், பறவைகளையும் கூடப் படைத்ததும் அவனே. எனவே, இறைவன் படைத்த உயிரை இறைவனுக்காக என்று சொல்லிக் கொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?
https://www.india.com/hindi-news/india-hindi/eco-friendly-bakrid-2018-people-in-lucknow-will-cut-cake-with-bakra-image/
புலிக்கு உணவாக மானைப் படைத்திருக்கிறான் என்பது உண்மைதான். ஆனால், மனிதனுக்கு உணவாகத் தாவரங்களைத்தான் படைத்திருக்கிறான். மனிதனுக்கு கோரைப் பற்களும் கூர்மையான நகங்களும் கிடையாது. புலி சிங்கம் போன்ற அசைவ விலங்குகளுக்கு மட்டுமே அவை இருக்கின்றன. அதோடு புலி, சிங்கம் போன்றவை மான், முயல் போன்றவற்றை பச்சையாகவே சாப்பட்டு ஜீரணிக்க முடியும். மனிதனால் வேக வைத்தால்தான் அசைவ உணவைச் சாப்பட முடியும். இவையெல்லாம் மனிதனைத் தாவர உண்ணியாகவே இறைவன் படைத்திருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தக்கூடியவை.
எனவே, தீயை உருவாக்கக் கற்றுக்கொண்டுவிட்டதால் மாமிசத்தை வேக வைக்கக் கற்றுக்கொண்டுவிட்டு, அந்தத் தவறில் இறைவனையும் பங்குபெற வைக்கும் நோக்கில் இறைவனுக்கு மாமிசப் படையல் கொடுப்பது தவறுதான். எனவே, அப்படியான உயரிய நிலையில் இருந்துகொண்டு விலங்குகளைக் கொல்லவேண்டாம் என்று சொல்கிறது இந்துப் பெரு மரபு, வள்ளுவத் தமிழ் மரபு.
அதிலும்கூட நாட்டார் தெய்வங்களை வணங்கும்போது வேண்டுமானால் அசைவப் படையலைக் கொடுத்துக்கொள்ளுங்கள். பெருந்தெய்வத்துக்கு சர்க்கரைப் பொங்கலே போதும் என்றுதான் அது சொல்கிறது. ஆயிரக்கணக்கில் ஆடுகளை பலியிடுவதற்கு பதில் ஒரே ஒரு ஆட்டைப் பலிகொடுங்கள் என்கிறது இந்து மரபு. ஆக இங்கும் கூட அது நாட்டார் வழிபாட்டின் வழிமுறையை கரிசனத்துடனே அணுகுகிறது. இரு தரப்பு உடன்படிக்கையில் இது கிட்டத்தட்ட 55-45 என்பதுபோன்ற ஒரு புரிதல். இஸ்லாமும் கிறிஸ்தவமும் நாட்டார் மரபை 90-10 என்ற கணக்கில் கூட ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்தவராக, இஸ்லாமியராக மாறிவிட்டால் அந்த நொடியிலிருந்து நாட்டார் மரபிலிருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டாகவேண்டும் என்று சொல்கிறது.
(தொடரும்)