நாதுராம் கோட்ஸே ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ எனும் மராத்தி மொழி தினசரியின் ஆசிரியராக இருந்தார். அந்த தினசரி பத்திரிகையின் மேலாளராக நாராயண் ஆப்தே இருந்தார்.
காந்தியை கொல்ல வேண்டும் எனும் எண்ணத்தை இருவரில் முதலில் வெளிப் படுத்தியது யார் என்று தெரியவில்லை. ஏனென்றால் வழக்கு விசாரணையின் போது, தான் தான், தான் மட்டும் தான் காந்தியை கொன்றதற்கு பொறுப்பு எனும் நிலைப் பாட்டை கோட்ஸே எடுத்திருந்தார்.
இந்த நிலைப்பாடு கடைசி வரை நீடித்தது. ஒரு வேளை, இருவர் மனதிலும், ஒரே நேரத்தில் இந்த எண்ணம் உருவாகியதோ என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் பல நேரங்களில், பல விஷயங்களில் இருவரும் ஒரே மாதிரியாக யோசிக்கக் கூடியவர்கள்.
காந்தி கொலை நடந்த ஒரு வருடம் கழித்து, தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக ஆப்தே, கோட்ஸேயின் சகோதரரான கோபால் கோட்ஸேயிடம் கூறினார்: ’’ நானும் நாதுராமும் ஒன்றாக பணியாற்றிய நான்கரை வருட காலத்தில், ஓரே நேரத்தில், ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்திருக்கிறோம்.
நாதுராம் ஏதாவது இடத்திற்கு சென்றிருப்பார்; அங்கிருந்து ஒரு விஷயத்தைக் குறித்துக் கட்டுரை அனுப்புவார். பார்த்தால், அதே விஷயத்தைக் குறித்து, அதே கருத்துக்களைக் கொண்ட கட்டுரையை நான் எழுதி முடித்திருப்பேன்.
அதே போன்று, எங்கள் நோக்கத்தின் மீதிருந்த பக்தியிலும், இரு உடல்களில் ஒரே மனம் கொண்டவர்களாக இருந்தோம் ‘’
‘அந்த நோக்கம் ‘ ஹிந்து சங்கடன் அதாவது ‘ ஹிந்துக்களை ஒருங்கிணைப்பது‘
ஹிந்துக்களுக்கு புத்துணர்வூட்டி, அவர்களை ஒன்று படுத்தி, கடந்த காலங்களில் முஸ்லீம்களிடம் அடி பணிந்தது போல் இல்லாது, தங்கள் அரசியல் உரிமைகளுக்காக எழுந்து நின்று போராடும் விதமாக அவர்களை தயார் செய்வது.
இந்த ஒற்றுமை இயக்கத்தின் உச்சக்கட்ட இலக்கு, பாரதம் துண்டாடப்படாது இருப்பதை உறுதி செய்து, புனிதமான அகண்ட பரிபூரண ஹிந்துஸ்தானத்தை பேணிக் காப்பது..
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்