கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
கேரள மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது திடீரெனப் பெய்த கன மழை. வழக்கம் போல் இந்த வருடமும் தென்மேற்குப் பருவ மழைக் காலம் கேரளத்தில் சாதாரணமாகத்தான் தொடங்கியது.
இடையில் தீவிரமடைந்து, சில நாட்கள் மழை நின்றுபோய், மீண்டும் திடீரென அதி தீவிரமடைந்து பெய்த கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, காட்டாற்று வெள்ளமென அனைத்து இடங்களுக்கும் பரவி, நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது. இதனால் கட்டடங்கள் பல மண்ணில் சரிந்தன.
தற்போது கேரளத்தின் எர்ணாகுளம், இடுக்கி தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இருந்தாலும் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
324 பேர் இந்த வெள்ளத்தில் பலியாகியுள்ளதாக, முதற்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நுற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
சாலைகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பல வெள்ளம் வடிந்தாலும் தொடர்ந்து அங்கே தங்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன. மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது. போக்குவரத்து சேவைகள் முடங்கிப் போயின.
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது ராணுவம். முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மாநில அரசுகளின் பல்வேறு முகமைகளைச் சேர்ந்த குழுக்கள், மீனவர்கள், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட தன்னார்வலர்கள் என பலரும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் 4 மாவட்டங்களில் 82 ஆயிரம் பேரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்டுள்ளனர்.
கடற்படையின் 42 அணிகள், ராணுவத்தின் 16 அணிகள், கடலோர காவல்படையின் 28 அணிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 39 அணிகள் என பரவலாகப் பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 30 ரணுவ ஹெலிகாப்டர்கள், 320 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. இருப்பினும் அவற்றின் எண்ணிக்கை போதாது என்றும், மேலும் ஹெலிகாப்டர்கள் தேவை என்றும் முதல்வர் பிணரயி விஜயன் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
Army, Air Force, Navy and Coast Guard are deployed for assisting the State in search & rescue operations. 57 Teams of NDRF involving about 1300 personnel and 435 Boats are also deployed. pic.twitter.com/jZdk0Wmj15
— #TransformingIndia (@transform_ind) August 18, 2018
இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த வீரர்கள், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டாவில் 500-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ராணுவம் முழுவீச்சில் இறங்கி வெள்ளத்தால் சிக்கித் தவிப்போரை கரை சேர்த்து வருகிறது.