அம்பை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி மஹாபுஷ்கரம் இன்று காலை தொடங்கியது. இதற்காக பாபநாசத்துக்கு வந்திருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழக அரசு இந்த மஹாபுஷ்கர திருவிழாவை புறக்கணிப்பதாகவும் சரியான பாதுகாப்பின்றி படித்துறைகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பெண்களுக்கான சரியான பாதுகாப்பு வசதி, கழிப்பிட வசதி எதுவும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்த அரசு முயற்சி எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. பக்தர்கள், பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி வழிபாடு செய்தனர். வரும் 22-ஆம் தேதி வரை இந்த புஷ்கர விழா நடக்கிறது. பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை பக்தர்கள் நீராட 143 படித்துறைகளில் பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.