டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

புதுக்கோட்டை: டாஸ்மாக்-கினால் ஏற்படும் விபரீதங்களில் ஒன்றாக, மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் வெட்டிக் கொன்று, மதுவின் கோர அரக்க முகத்தை காட்டியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த விவசாயி சேகர். 50 வயதாகும் இவருக்கு மணிகண்டன், அருண் என இரு மகன்கள்.

27 வயதாகும் மகன் அருண் வேலை எதற்கும் செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்வாராம். மது குடிப்பதற்காக பணம் கேட்டு, தந்தையிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். தன் மகன் இப்படி குடித்து வீணாகிக் கொண்டிருக்கிறானே என வருத்தப்பட்ட தந்தை சேகர், மகன் வளர்ந்து பெரியவன் ஆகி விட்டதால், அடிக்க மனமின்றி, வேலைக்குச் செல்லும்படி அறிவுரை கூறுவாராம்.

இந்நிலையில் வழக்கம்போல் அருண், தன் தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் சேகர் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து பெற்ற தந்தை என்றும் பாராமல் கண் மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதனால் ரத்தம் அதிகம் வெளியேறிய நிலையில் மயங்கிச் சரிந்துள்ளார் சேகர். நினைவற்றுக் கிடந்த சேகரை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற தன் தம்பி மீது சேகரின் மூத்த மகன் மணிகண்டன் கந்தர்வகோட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.