ராமநாதபுரம்: மொபைl போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
தமிழகத்திலும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பரிதவித்துப் போயுள்ளனர். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தாலும் குற்றங்கள் தான் குறைந்த பாடில்லை.
இதுபோல் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு அதிக வலி உடைய மரண தண்டனை அளித்தால்தான், இது போன்ற குற்றங்கள் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம், அண்ணா நகரில் வசித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். சில வாரம் முன் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்காக கடைக்குச் சென்றார். அந்தக் கடையில் பணியாற்றும் இளைஞரிடம் 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யச் சொன்னார் சிறுமி. ஆனால் அவர் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தார். பின், அந்த செல்போன் நம்பரை வைத்துக் கொண்டு அடிக்கடி அந்த சிறுமியிடம் பேசினார்.
ஒரு நாள் அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். பின் அதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மேலும், தன் நண்பர்களுக்கும் போன் போட்டு, 7 பேரை வரவழைத்து அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து, அதனையும் வீடியோ எடுத்துள்ளார். மற்றவர்களும் மாற்றி மாற்றி வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அதைக் காட்டியே அந்தச் சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று அந்த எட்டு பேரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் அந்தச் சிறுமி தனக்கு நடந்தவை குறித்து தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியை சீரழித்தவர்களை போலீசார் தேடினர். செல்போன் கடையில் வேலை செய்த அக்பர் அலி (27) அபுதாகிர் (26) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் மற்ற 6 பேர் குறித்து விசாரித்து, அவர்களையும் தேடி வருகின்றனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் உட்பட நான்கு கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.