உள்ளாட்சித்துறை முறைகேடு குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலக தயார் என்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
முன்னதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்த ஊழல் புகார்களைத் தொகுத்து, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதை அடுத்து, திமுக., .தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில்,
உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சித் துறையாக” உருக்குலைத்திருப்பது, உள்ளபடியே பேரதிர்ச்சியளிக்கிறது.
அ.தி.மு.க அமைச்சரவையில் திரு எஸ்.பி.வேலுமணி ஊழலின் மணியான “கதாநாயகனாக” இருந்து, அரசு கஜனாவை, தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலம், அப்படியே “ஹைஜாக்” செய்து, கொள்ளையடித்து வருவது பற்றிய புகாரை, இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் திரு ஆர்.எஸ்.பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அளித்துள்ளார்.
இந்த பகல் கொள்ளை பற்றிய பகீர் தகவல்களை, “டைம்ஸ் நவ்” ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டதற்காக, “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் திரு மயில்வாகனன் ஆகியோரை, அமைச்சரின் பினாமி ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ், சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் மிரட்டி, அநாகரீகமான வார்த்தைகளால் அர்ச்சித்தது, கடும் கண்டனத்திற்குரியது.
உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், அமைச்சரின் ஆணைப்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் பினாமி நிறுவனங்களான
1) கே.சி.பி. எஞ்சினியர்ஸ் லிமிடெட்
2) பி.செந்தில் அன்ட் கோ,
3) வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
4) கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா
5) ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட்
6) கன்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட்
7) இன்விக்டா மெடிட்டெக் லிமிடெட்
8)ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவைதான், அமைச்சரின் துறைகளில் முழு ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன.
86 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வணிகம் செய்த நிறுவனம், இவர் உள்ளாட்சித்துறை அமைச்சரான பிறகு, 28 கோடி ரூபாய் அளவுக்கு “பிஸினஸ்” செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இன்னொரு நிறுவனம் ஐந்து மடங்கிற்கு மேல், தனது “பிஸினஸை” 150 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாக 17 கோடி ரூபாய் மதிப்புள்ள பிஸினஸ் மட்டும் செய்து வந்த கேசிபி எஞ்சினியர்ஸ் லிமிடெட் என்ற கம்பெனி, திரு எஸ்.பி. வேலுமணியின் நேரடிக் கண் பார்வை பட்டதால், அதன் விளைவாக இன்றைக்கு 500 கோடி பிஸினஸ் செய்யும் கம்பெனியாகி விட்டது.
கட்டுமானப் பணிகள், உட்கட்டமைப்புப் பணிகள், நகை வியாபாரம்- போதாக்குறைக்கு மெட்டல் ஷீட் கம்பெனிக்கு, 149 கோடி ரூபாய் சென்னை ஸ்மார்ட் சிட்டி டெண்டர், மேலும் பத்து மாநகராட்சிகளின் 100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஆகியவற்றை அள்ளித்தர, அதிகார துஷ்பிரயோகம் என்று, அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி “ஊழல் திருவிளையாடல்கள்” அரங்கேற்றி அ.தி.மு.க அமைச்சரவையில் மற்றவர்களையெல்லாம் தோற்கடித்து, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
942 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணியின் ஊழல் டெண்டர்களால் சூறையாடப்பட்டு, இன்றைக்கு 2500 கோடி ரூபாய் கடனில் மாநகராட்சி மூழ்கியிருக்கிறது. ஒரு கம்பெனியின் பங்குகளை, 300 சதவீதம் அதிக விலை கொடுத்து, அமைச்சரின் பினாமி வாங்கியிருக்கிறார் என்றால், ஊழல் பணம் எப்படியெல்லாம் ஊரைச்சுரண்டி அதலபாதாளம் வரை ஆவேசத்துடன் பாய்கிறது என்பதை வெளிப்படையாகவே காண முடிகிறது.
ஏற்கனவே, முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவர் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேவையான ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஊழல் புகார்களின் மீது, லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், வெட்கமோ அச்சமோ இல்லாமல் ஊழலுக்குத் துணை போனது வேதனையளித்தது. அதனால், உயர்நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, இப்போது அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் திரு எஸ். பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
வருமானத்திற்கு அதிகமாக பலநூறு மடங்கு சொத்துச் சேர்ப்பதற்கு, தனது துறையின் டெண்டர்களில், முறைகேடுகள் – அதிகார துஷ்பிரயோகம் செய்து, தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமே, ரூபாய் 1000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள டெண்டர்களை அளித்து, இதுவரை வரலாறு கண்டிராத “மஹாமெகா” ஊழலில் ஈடுபட்டுள்ள “வீரதீர மிக்க” அமைச்சர் திரு எஸ். பி. வேலுமணி, அந்தப் பதவியில் நீடிப்பதற்கு, தார்மீக ரீதியாகச் சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கையாளர்களை மிரட்டிய கான்டிராக்டர் சந்திரபிரகாஷை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் தாமதம் ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், இந்த ஊழல் – கொள்ளைக்குத் தொடர்புடையவர்கள் –துணை செய்தவர்கள் என்றே நடுநிலையாளர்கள் கருதுவார்கள் என்பதையும் இப்போதே சுட்டிக்காட்டுகிறேன்! – என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.
ஆனால், அப்போதும், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று எஸ்பி.வேலுமணி கூறி வந்தார். இந்நிலையில் உள்ளாட்சித் துறையில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், புகார் குறித்து ஆதாரங்களை தந்தால் இன்றைக்கே பதவி விலகத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் வேலுமணி. அப்போது அவரிடம் உள்ளாட்சித் துறையில் முறைகேடு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார் என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், திமுகவில் ப்யூன் வேலை பார்த்த ஆர்.எஸ். பாரதிக்கு எல்லாம் தான் பதில் சொல்ல முடியாது. தமிழகத்தில் மின்வெட்டு குறித்து பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு அருகதையில்லை. மின்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் எங்குமே மின்வெட்டு இல்லை என்று கூறினார்.