சென்னை : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் பழனிசாமி திடீரென இன்று மாலை சந்தித்துப் பேசினர்.
அதிமுக., நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தொடர்ந்து, கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்நிலையில், இன்று மாலையே முதல்வர் ஈபிஎஸ்., அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் ஆளுநரை சந்தித்துள்ளனர் .
முன்னதாக, பிரதமர் மோதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திங்கள் அன்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப் பட்டதாகக் கூறப் பட்டது. தொடர்ந்து, நேற்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தில்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடந்து முடிந்த பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் திடீரென ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சந்திப்பின் போது புதிய டிஜிபி நியமனம், புதிய தலைமை செயலாளர் நியமனம், ராஜிவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப் பட்டது.
தொடர்ந்து, அடுத்து நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி, ஆளுநரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்துடன், முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (12.6.2019) ஆளுநர் மாளிகையில் மேதகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். pic.twitter.com/3BSSXOPRnt
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2019