கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நிலவும் சூழலில், சிரமப் படும் சக மனிதருக்கு உதவும் நெஞ்சங்களின் செயல்கள் உள்ளத்தை உருக்குவதாக அமைந்திருக்கிறது. கரூர் மாவட்டம் லாலாபேட்டையில் அரசுப் பள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவியுள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டை, மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் தங்கராஜ். இவரது இரண்டாவது மகன் த. யக்ஞமூர்த்தி (வயது 39), இவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்துள்ள லாலாபேட்டை பகுதியினை சார்ந்தவர்களுக்கும், ஏழை, எளியவர்கள் என்று பலருக்கும் ஏற்கெனவே அரிசி, பருப்பு வகைகளைக் கொடுத்து உதவினார். தொடர்ந்து, தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ள கட்டடத் தொழிலாளர்கள், மேஸ்திரி, சித்தாள் மற்றும் டீக்கடை தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் என 8 பேர் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ¼ கிலோ துவரம்பருப்பு, 100 கிராம் புளி, மிளகாய் தூள், மல்லித்தூள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இவரது செயல் கண்டு அப்பகுதி மக்களும், அவருடைய மாணவர்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
தனி நபராக அன்றி அமைப்பாகவும் பல்வேறு உதவிப் பொருள்களை கரூரில் அளித்து வருகின்றனர் நல்லுள்ளங்கள் சில. தூய்மைப் பணியாளர்களான துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய கரூர் நகரத்தார் டிரஸ்ட், 150 பேருக்கு நலத்திட்ட உதவிப் பொருட்கள் வழங்கியது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் சந்நிதி தெருவில் அமைந்துள்ள கரூர் நகரத்தார் சங்க கட்டடத்தில், கரூர் நகரத்தார் டிரஸ்ட் சார்பில் கரூர் நகராட்சியில் பணியாற்றும் 150 துப்புரவு பணியாளர்களான தூய்மைக் காவலர்களுக்கு கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, துப்புரவு தொழிலாளர்களுக்கு கர ஒலி எழுப்பி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் நகரத்தார் டிரஸ்ட் தலைவர் சுப.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் செயலாளர் மேலை பழநியப்பன், பொருளாளர் கும.குமரப்பன் நகராட்சி அலுவலர்கள் தங்கராசு தனபால், நகரத்தார் சங்க செயற் குழுவினர் கரு.ரெத்தினம், வைஷ்ணவி மெய்யப்பன் அமர்ஜோதி ஆறுமுகம் அருணாசலம் முன்னிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், காமராஜ் மார்க்கெட்டி ஐ சார்ந்த 150 துப்புரவு தொழிலாளர்களுக்கு முகக் கவசம், அரிசி மற்றும் உணவுப் பொருட்களும், டீத்தூள் உள்ளிட்ட உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.