
வேலூர் மாவட்ட மக்களுக்காக தனது தந்தை துரைமுருகன் தன்னை தத்து கொடுத்துவிட்டதாக கூறுகிறார் கதிர் ஆனந்த் எம்.பி.
மேலும், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: தேர்தலில் வெற்றிபெற்று 101 நாட்கள் கழித்து எம்.பியாக பதவி ஏற்றிருக்கிறீர்கள், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: எனது வேலூர் தொகுதி மக்களுக்கு இந்தப் பதவியை வைத்து எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அதை செய்து கொடுக்க தேவையான சக்தியை, நான் வணங்கும் இறைவனும், மனதில் பூஜிக்கும் மறைந்த தலைவனும்(கருணாநிதியை) எனக்கு கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொண்டுதான் நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்தேன்.
நாடாளுமன்றம் என்பது எத்தனையோ பல மகத்தான தலைவர்கள் செயலாற்றிய இடம்,

அப்பேற்பட்ட ஒரு இடத்துக்கு முதன் முதலில் சென்ற எனக்கு எனது செயல்பாடுகளில் தப்புத்தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது, மக்களுக்கு பாகுபாடின்றி நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், படபடப்பும் தான் இருந்தது.
கேள்வி: எம்.பியாக தமிழில் பதவி ஏற்றுக்கொண்டீர்கள்… ஆனால் ”தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தை கைவிட்டது ஏன்?
பதில்: கடந்த மே மாதம் இருந்த அவை நடத்தை விதி (code of conduct) வேறு, இப்போது இருக்கும் அவை நடத்தை விதி வேறு. இப்போது பதவியேற்பு உறுதிமொழி படிவத்தில் இருந்த வாசகத்தை தவிர்த்து கூடுதலாக ஒரு வார்த்தைக் கூட பேசக்கூடாது என டேபிள் ஆபிசர்ஸ் எனக்கு முன்பே அறிவுறுத்திவிட்டார்கள்.
மே மாதம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற போது தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு நடந்தது.
இப்போது அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரின் கீழ் பதவியேற்பதால் அவரது கட்டுப்பாட்டுக்கு கீழ் அவை நடத்தைகள் வந்துவிடுகின்றன.

ஆகையால் தமிழ் வாழ்க எனக் கூறாததால் தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என எடுத்துக்கொள்ளத் தேவைவில்லை.
கேள்வி: உங்கள் தந்தை துரைமுருகன் என்ன அறிவுரை கூறினார்?
பதில்: என்னை வேலூர் மக்களுக்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று, இன்றல்ல எப்போது நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேனோ அப்போதே அப்பா கூறிவிட்டார்.
மேலும், என்னிடமும் இனி மேல் உனக்கு தாய், தந்தை, சொந்த பந்தங்கள் எல்லாம் உனது தொகுதி மக்கள் தான், அவர்களுக்கு தான் இனி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஒரு தந்தையாக என்னை எப்படி பார்த்துக்கொள்வாயோ அதைவிட ஒரு படி மேலாக உனக்கு வாக்களித்த வாக்காளர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என அப்பா சொல்லியிருக்கிறார்.

கேள்வி : உங்கள் பதவியேற்பை நேரில் பார்ப்பதற்காக அப்பா டெல்லி வந்தார்.. அப்போது மற்ற தலைவர்களை சந்தித்தாரா?
பதில்: அப்பாவை நாடாளுமன்ற வளாகத்தில் பார்த்த அகில இந்திய தலைவர்கள் பலர் கலைஞரின் புகழை பேசினர்.
காஷ்மீர் உள்ளிட்ட பல விவகாரங்களில் தளபதி முன்னெடுத்த புதிய முயற்சிகளை வியந்துது பாராட்டினர்.
அத்தனை தலைவர்களும் அப்பாவிடம் சொன்ன ஒரே வார்த்தை, ” Dmk is setting up example for entire india” (ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் திமுக முன்மாதிரியாக இருக்கிறது). என்பது தான்.
கேள்வி: கன்னி உரையில் எதைப் பற்றி பேசுவீர்கள்… உரையை தயார் செய்துவிட்டீர்களா?
பதில்: எனக்கு இப்போது தான் International financial services என்ற தலைப்பு நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மசோதா என்று விவாதத்திற்கு வருகிறதோ அன்று எனது கன்னி உரையையும், எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பிலும் நான் பேசுவேன்.