16/10/2019 8:09 AM
அடடே... அப்படியா? மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

மதம் மாறியவர்கள் படும் அவஸ்தை!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்.... எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?... என்று!

-

- Advertisment -
- Advertisement -

“நான் எப்படியாயினும் ஏசய்யாவாக ஆவேன்! இயேசு பிரபுவாக ஆவேன்!” இது என் விருப்பம்! என் கனவு!

கிறிஸ்தவனாகப் பிறந்தேன். கிறிஸ்தவனாகவே வளர்ந்தேன்! என் அம்மா சிறு வயதிலிருந்தே இயேசு பற்றி எனக்கு பாலோடையில் ஊட்டும் பாலோடு சேர்த்து போதித்து வந்தாள். “நீ ஏசய்யா போல் ஆகணும்டா!” என்பாள்.

நான்கைந்து வயதில் எனக்கு இயேசு பிரபு ஒரு பெரிய ஹீரோ! “உலகம் முழுவதும் இயேசுவைச் சுற்றியே உள்ளது. உலகிற்காக சிலுவை சுமந்தார்! நான் எப்போது இயேசு பிரபுவைப் போல ஆவேன்?” இந்த எண்ணங்களே என்னை எப்போதும் சூழ்ந்திருந்தன.

ஐந்தாவது வயதில் இருந்தே பைபிளை கையில் பற்றி அம்மாவின் பின்னால் சர்ச்சுக்குச் செல்வேன். அம்மாவோடு சேர்ந்து பஜனை செய்வேன்! “நான் இயேசு பிரபு போல் ஆவேன்!” என்று நான் சர்ச்சில் கூறும்போது பாஸ்டர்கள் என் தலைமீது கைவைத்து ‘ஆமென்’ என்பார்கள்.

என் டீன் ஏஜ் வயதின்போது மார்க்காபுரம் என்ற ஊரில் வசித்து வந்தோம். அங்குள்ள “பலகல” குவாரியில் வேலை செய்த தொழிலாளிகளை எங்கள் குடும்பத்தினர் வேலை வாங்குவதை பார்த்துக் கொண்டிருப்பேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்கள் ‘ஜல்சா’ செய்துகொள்ள வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களும் கிறிஸ்தவர்களே!

என் அம்மா அவர்களுக்கு பணம் கொடுப்பாள். அவர்கள் ‘ஜல்சா’ செய்து கொள்வார்கள். அந்த ஜல்சாவை எப்படி செய்து கொள்வார்கள் என்பதை ஒரு முறை நேரில் பார்த்தேன். ஒரு செம்மறி ஆட்டைக் கொண்டு வந்தார்கள். அதன் நான்கு கால்களையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவன் அதன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டான். மற்றொருவன் அதன் தோலை உரித்து மாமிசத்தை அறுக்கத் தொடங்கினான்.

திடீரென்று அந்த செம்மறியாடு தன் சக்தியையெல்லாம் திரட்டி காற்றில் எம்பிக் குதித்தது. அவ்வாறு எம்பியதில் கால்களை உதறி அடித்தது. கொம்புகளால் தன் தலையை பிடித்திருந்தவனை குத்திக் கிழித்தது.

அவ்வளவுதான். அதனை பிடித்திருந்த நால்வரும் கீழே மல்லாந்து விழுந்தார்கள். அவர்கள் எதிர்பாராத வேகத்தில் அந்த ஆடு ஓட்டமெடுத்தது. அதன் உடலிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருக்க… வெட்டிய மாம்சம் தொங்கிக்கொண்டிருக்க… எங்கிருந்து வந்ததோ… அத்தனை சக்தியையும் திரட்டி அலறியபடி ஓடியது.

எனக்கு வயிற்றைப் பிரட்டியது. “ஐயோ…! உயிர் யாருக்காயிருந்தாலும் உயிர்தானே! பிராணனை காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற வேகத்தில்….. பல்லைக் கடித்துக்கொண்டு கத்தியால் அறுத்த வேதனையை அனுபவித்த அந்த ஆடு எப்படி ஓடுகிறது…? என்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாவம்…! ஓடி ஓடி ஓய்ந்து போய் நிறைய ரத்தம் கீழே கொட்டி விட்டதால் பூமியில் சுருண்டு விழுந்து இறந்தது. எனக்கு அழுகை வந்தது.

“ஏசய்யா…! எங்கே இருக்கிறீர்?” என்று கண்ணீர் விட்டேன். அழுகையில் குரல் எழவில்லையே தவிர, இயேசு பிரபுவுக்குக் கேட்க வேண்டும் அல்லவா? ஏசய்யா வந்து ஏன் ஆட்டை காப்பாற்றவில்லை? ஆடுகளை மேய்ப்பவரான இயேசுபிரான் ஏன் வரவில்லை?

நாட்கள் கடந்த போது எனக்குப் புரியலாயிற்று. சர்ச்சில் கூறப்படும் ஆடு மேய்க்கும் இயேசுபிரான் வெறும் பெயரளவில்தான் ஆடு மேய்ப்பவர்! ஆடுகளின் உயிரைக் காப்பாற்றுபவர் அல்ல! சிறிது சிறிதாக இயேசுவின் மீது என் அபிப்பிராயம் மாறத் தொடங்கியது.

மார்க்காபுரத்தில் ஒரு முறை ஏதோ உற்சவம் நடந்தபோது அம்மாவோடு சேர்ந்து நானும் கோவிலுக்குச் சென்றேன். அம்மா கோவிலுக்குக் கூட செல்வாள். ஆனால் அங்கு பிரசாதம் மட்டும் சாப்பிட மாட்டாள். அங்கு ஒரு சுவாமிஜி பகவத் கீதை சொற்பொழிவு போதனை செய்தார். எனக்கு பிடித்த சுலோகமாக அது மாறிப் போனது.

“யுக்தாஹார விஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மசு
யுக்த ஸ்வப்னாவ போதஸ்ய யோகோ பவதி து:கஹா !!”

“நாம் உண்ணும் உணவு நம் பழக்க வழக்கங்கள் இவற்றை கட்டுப்படுத்த முடிந்தால்தான் யோகசித்தி கிடைக்கும். துயரத்திலிருந்து விடுபட முடியும். உணவு சுத்தமில்லாவிட்டால் மனம் சுத்தமாகாது. நீ உண்ணும் உணவைப் பொறுத்தே உன் குணம் இருக்கும்! ரஜோ, தமோ குணங்களை உணவின் மூலம் கட்டுப்படுத்திக்கொள்! சுத்தமான மனதால் மட்டுமே இறைவனைப் பார்க்க முடியும்!”

இந்த ஸ்லோகம் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அப்போதிலிருந்து மனிதனின் மேல் சைவ உணவு, அசைவ உணவு, மசாலா வகைகள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றின் தாக்கம் பற்றி ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். பெரியவர்களிடம் இது பற்றி கேட்டறியத் தொடங்கினேன். நிறைய புரிந்து கொண்டேன். நாம் உண்ணும் உணவு நம் குணங்களின் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது.

பைபிளில் ஒரு வாசகம் உள்ளது. “ஆத்மசுத்தி உள்ளவன் சிறப்பானவன். பரலோக அரசு அவனுடையதே!” ஆனால் செம்மறியாடுகளை வெட்டித் தின்பவர்களுக்கு ஆத்மசுத்தி எவ்வாறு கிடைக்கும்? இந்த விஷயம் இயேசுவுக்குத் தெரியாதா?

“ஜீவஹிம்சை செய்யாதீர்கள்!” என்று இயேசு ஏன் கூறவில்லை? செம்மறியாடு, மான், ஆடு, பசு… இவ்வாறான விலங்குகளைக் கொன்று தின்னக் கூடாது என்று இயேசுபிரான் ஏன் கூறவில்லை? மனிதன், தான் வாழ்வதற்காக ஜந்துக்களின் உயிரை எடுக்கலாமா?

அந்த ஆடு மேய்ப்பவன், “உங்களைக் காப்பாற்றுவதற்கே வந்துள்ளேன்!” என்கிறாரே தவிர, “வாயில்லா ஜீவன்களைக் கொன்று தின்னும் வாழ்க்கையை ஏன் வாழ்கிறீர்களடா? மூடர்களே!” என்று ஏன் கேட்பதில்லை?

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்ன கூறுகிறார் என்பது நினைவு வருகிறது.

“அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன சம்பவ:
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ கர்ம சமுத்பவ: !!”

“யக்ஞங்கள் செய்தால் மழை பொழியும். மழையால் அன்னம் கிடைக்கிறது. அன்னத்தால் பிராணிகள் விருத்தியடைகின்றன”. அன்னத்தால்தான் வாழ்கிறோம் என்ற ஞானம் இருக்க வேண்டுமல்லவா?

இருபது வயதைத் தாண்டிய போது எனக்கு இந்த சர்ச் மதத்தில் நடக்கும் பயிற்சிகளெல்லாம் வெற்றுக் கூச்சலாகத் தென்பட்டன. திங்கள் முதல் சனி வரை பாவம் செய்யலாம். ஞாயிறு மட்டும் ஒருநாள் சர்ச்சுக்கு சென்று அந்த வாரத்தில் செய்த பாவங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு சொல்லிவிட வேண்டும். மேலும் பைபிளிலேயே ஒன்றுக்கொன்று பொருந்தாத வசனங்கள் உள்ளன. எனக்கு அதெல்லாம் தலைகீழ் விவகாரங்களாக தோன்றத் தொடங்கின.

என் அம்மாவிடம் கூட சொன்னேன். “அம்மா! இந்த சர்ச் பாடங்கள், பிரார்த்தனைகளை, பாவம் செய்வது, ஒப்புக்கொள்வது, அதற்காக ஆதாயத்தில் தசமபாகம் செலுத்துவது… இதெல்லாம் வெறும் மோசம், அம்மா! கிறிஸ்து சகாப்தம் என்கிறோமல்லவா? அப்படி என்றால் கிறிஸ்துவுக்கு முன்பு எத்தனையோ ஆயிரம் யுகங்கள் கடந்து விட்டன. ராமர் கிருஷ்ணர் கதைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தனவோ நம்மால் கூற இயலாது அல்லவா? வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆடு மேய்ப்பவன் என்று கூறிக்கொண்டு ஆடுகளைக் கொன்று தின்பவர்களிடம் அன்பு செலுத்தும் இயேசுவை எதற்காக நாம் நம்ப வேண்டும், அம்மா?” இவ்வாறு என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். அம்மா இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஏசுபிரபு பற்றி போதிக்கும் பாஸ்டர் எங்கள் ஊருக்கு முதன் முதலில் வந்த போது அவர் கையில் ஒரு பைபிள் மட்டுமே இருந்தது. சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆனால் இப்போது அந்த பாஸ்டருக்கு பங்களா உள்ளது. கார்கள் உள்ளன. நிலபுலன்கள் உள்ளன.

எனக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உண்மை புரிந்தது. இயேசுவின் பெயரைச் சொல்லி தசமபாகம் அபராதம் கொள்ளை அடிப்பதால் தன்னை நம்பிய இந்த பாஸ்டர்களுக்கு இயேசு பிரபு பங்களாவும் கார்களும் வயல்களும் அளித்துள்ளார். எத்தனை பெரிய முதலீடு இல்லாத வியாபாரம்….! இயேசுவை நம்பியதால் இவ்விதம் முன்னேறி இருக்கிறார்கள் போலும்!

இறுதியாக ஒரு வார்த்தை! என் ஹிந்து சகோதரர்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பின் இப்போது வருத்தப்படுகிறார்கள்…. எதற்காக இந்த பைத்தியக்கார வேலை செய்தோம்?… என்று!

தெலுங்கில் – வி.கே.ரெட்டி (வெலுகொண்டா ரெட்டி)
(கிறிஸ்தவத்தில் மனமுடைந்த கிறிஸ்தவர்)

தமிழில் – ராஜி ரகுநாதன்
(ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிகை, 2019)

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: