அகத்திய மாமுனிவரால் தன்மகளாக பாவிக்கப்பட்டு, விசாக நட்சத்திரத்தில் பிறந்தவளே தாமிரபரணி நதி. நதிகளைப் பெண்ணாகபப் போற்றுவது நம்பாரத தேசத்தின் மரபு.
தென்பொதிகை மலையில் இயற்கையாகவே அமைந்திருக்கும் “பூங்குளம்”தான் தாமிரபரணி உற்பத்தியாகும் இடம் என்று வரலாறு கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட மாதங்களில் இந்த அடர்ந்த வனப்பகுதியில் “கருடா மலர்கள்” பூத்துக் குலுங்குவதால் பூங்குளம் என்று அழைகின்றனர். பசுமையும், செழிப்பும் மிக்க அடர்த்தியான பொதிகை மலையின் நீர்ப்பிடிப்பு இடங்களில் இருந்தெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து இங்கே வந்து கலந்து, வனப்பகுதியில் உள்ள உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளைத் தொட்டுத் தழுவியபடியே வருவதால் தாமிரபரணி நதிக்கு மூலிகை குணமும் உண்டு. அதில் நீராடுபவர்களுக்கு நோய்கள் தீர்வதும் உண்டு.
சுமார் ஆறாயிரத்து எழுநூறு அடி உயரத்தில் “பூங்குளம்” என்ற ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு அடர்ந்த காடுகளின் வழியே வருகின்ற குளிர்ந்த நீரினையும் சேர்த்துக் கொண்டு பாணதீர்த்தம் என்ற பகுதியில் அருவியாகி, அங்கிருந்து கல்யானதீர்த்தம், அகத்தியர் அருவிகளாகப் பிரவாகம் எடுத்து பாபநாசம் என்ற இடத்தில் சமவெளியில் வடக்கு நோக்கித் திரும்பி “உத்திரவாகினி” என்ற பெருமையோடு திருச்செந்தூர் கடலருகில் புன்னைக்காயல் என்னும் இடத்தில் கடலோடு கலக்கிறாள். செல்லும் இடங்கள் தோறும் தீர்த்தக் கட்டங்களாக்கி வளமை கொழிக்கச் செய்கிறாள். தாமிரபரணி நதிக்கரையில்தான் தீர்த்த கட்டங்கள் அதிகமாக இருப்பதாக தாமிரபரணி மகாத்மிய வரலாற்றுப் பதிவு கூறுகிறது.
“மகாபுஷ்கரம்”
இப்புண்ணிய நதிக்குத்தான் மகாபுஷ்கரம் 11.10.2018 முதல் 22.10.2018 வரை நடக்கவிருக்கிறது. பன்னிரண்டு ராசிகளுக்கும் அதற்குரிய நதிகள் உண்டு. தாமிரபரணி நதிக்கு “விருச்சிக ராசி”. ஒவ்வொரு ராசியிலும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை பிரவேசிக்கிறார். அப்படி பன்னிரெண்டாவது வருடம் பிரவேசிக்கும் பொழுது புஷ்கரம் என்றும், நூற்றி நாற்பத்தி நான்காவது வருடத்தில் பிரவேசிக்கும் பொழுது மகாபுஷ்கரம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த வருடம் தாமிரபரணி நதிக்கு மகாபுஷ்கரம் வருகிறது.
“திருநெல்வேலி மாவட்டத்தில் மகாபுஷ்கர ஏற்பாடுகள் “
காவேரி புஷ்கரத்தின் துவக்க நாளன்று, ” 2018ம் வருடம் வரவிருக்கின்ற தாமிரபரணி மகாபுஷ்கரத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்” என்று தீர்மானித்து அனைத்து பக்தர்களுக்கும் அழைப்பு விடுத்தனர் அகிலபாரத துறவியர் சங்கம். இதன் தலைவரான சுவாமி ராமானந்தா அவர்கள் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு. இரத்தினவேல் பாண்டியன், நெடுவயல் பண்ணையார் திரு. முத்தையா (எ) குமார், சிங்கம்பட்டி ஜமீன் திரு. முருகதாஸ் தீர்த்தபதி, திரு. நயினார் நாகேந்திரன் (தமிழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்), திரு.கே. நவநாதன் (ஓய்வு பெற்ற காவல்துறை நேர்முக உதவியாளர்) ஆகியோரையும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ சங்கராச்சார்யார் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளையும் நேரில் சந்தித்து தாமிரபரணி மகாபுஷ்காரத்தைச் சிறப்பான முறையில் கொண்டாட வழிமுறையைக் கேட்டனர்.
நவம்பர் மாதம் 27ம் தேதி, 2017 (27.11.2017) ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தும், மகாபுஷ்கரத்திற்கான தேதியை 11.10.2018 முதல் 22.10.2018 வரை என்று குறித்துத் தந்தும் இந்த புனித வைபவத்தைக் கொண்டாடச் சொன்னார்கள். மேலும் தங்களால் மகாபுஷ்கர விழாவிற்கு வர முடியாத காரணத்தால் “அகில பாரத துறவியர் சங்கம்” இந்தப் புண்ணிய விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் அதற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் கிளைமடங்களை மஹாபுஷ்கரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், வேத பாராயணத்திற்காக வேத பண்டிதர்களை நியமித்து அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்போம் என்றும் அருளாசி தந்து வழிகாட்டினார்கள்.
“தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018″ன் முதல் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் இருக்கும் ஸ்ரீ சாரதா கல்யாண மண்டபத்தில் 22.12.2017 அன்று சுவாமி இராமானந்தா தலைமையில்,ஆதீனங்கள், துறவியர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சுவாமி அகிலானந்தா, சுவாமி பக்தானந்தா, சுவாமி சுப்ரமணியானந்தா, சுவாமி வேதாந்த ஆனந்தா, சுவாமி விஸ்வலிங்க தம்பிரான், ஞானேஸ்வரி மாதாஜீ, சுவாமி ராகவானந்தா, ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி கோவிலின் சிவாச்சாரியார்களின் குழுவினர் மற்றும் உள்ளார் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் சுவாமி ராமானந்தா அவர்களைத் தலைவராகவும், நெடுவயல் பண்ணையார் திரு. முத்தையா (எ) குமார் அவர்களைச் செயலாளராகவும், திரு. வீரபாகு அவர்களைப் பொருளாளராகவும் கொண்ட “தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018″ன் உச்சகட்ட குழு அமைக்கப் பட்டது. மேலும் தாமிரபரணி நதியின் முக்கிய நாற்பது தீர்த்த கட்டங்களுக்குத் தனித்தனியே உள்ளூர் குழுக்களும் அமைக்கப் பட்டன.
இந்த மகாபுஷ்கர விழாவிற்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அரசு விழாவாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்ற அரசு அதிகாரிகளுக்கும் நேரில் சென்று மனுக்கள் மூலமும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் திரு. சத்தியநாதன் அவர்கள் தலைமையில் எண்ணற்ற தன்னார்வத்தொண்டர்கள் தாமிரபரணி நதியின் தீர்த்தக் கட்டங்களைத் தூய்மை செய்யும் பணிகளைச் செய்யத் துவங்கினார்கள். “அகில பாரதிய துறவியர் சங்க”த்தின் செயலாளரும், தாமிரபரணி மகாபுஷ்கரக் குழுவின் தலைவருமான சுவாமி ராமானந்தா அவர்கள் தேசம் தழுவியும், தமிழ்நாடு முழுவதும் இதுபற்றிய பிரசாரம் மேற்கொண்டார். இக்குழுவின் உறுப்பினர்களும் தாமிரபரணி நதிக் கரையில் உள்ளஊர்களுக்குச் சென்றும் பிரசாரம் செய்து வந்தனர்.
“தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018″ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை சுவாமி ராமானந்தா அவர்களை நிர்வாக அரங்க்காவலராகவும், 24 உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு அறக்கட்டளையும், அதற்கு பாளையங்கோட்டை Axis Bankல் கணக்கும் துவங்கப்பட்டது.
சாரதா கல்லூரிச் செயலாளர் சுவாமி பக்தானந்தா அவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்தனர்.
திருநெல்வேலி தாமிரபரணியின் தைப்பூசப் படித்துறையில் வைகாசி விசாக தினமான (28.05.2018) திங்கட்கிழமை அன்று அனைத்து சாதுக்கள், கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்களின் முன்னிலையில் அன்னை ஸ்ரீ தாமிரபரணி தேவிக்கு மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு பிராத்தனை செய்யப்பட்டது.
ஸ்ரீ சாரதா பீடத்தின் ஸ்ரீ சங்கராச்சார்யர் அவர்களை மீண்டும் சந்தித்த பொழுது ஸ்ரீ குருமாகாசன்னிதானம் அவர்கள் தனது கரங்களால் பூஜை செய்த ஸ்ரீ தாமிரபரணி, ஸ்ரீ அகத்திய முனிவர் ஆகியோரது உருவச் சிலைகளையும், மற்றும் அன்னக் கொடி, காவிக்கொடிகளையும் சுவாமி ராமானந்தா அவர்களின் கரங்களின் தந்து ” எமது சார்பாக அகில பாரதிய துறவியர் சங்கத்தின் மூலமாக இந்தத் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவினை மிகச்சிறப்பாக நடத்துங்கள் ” என்று அருளாசியுடன் பிரசார யாத்திரையைத் துவங்கி வைத்தார்கள்.
சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் துவங்கிய யாத்திரை, தமிழகத்தின் காவேரிக் கரையோரமாக உள்ள ஊர்களுக்குச் சென்று வைகை நதியின் மதுரை மாநகர், இராஜபாளையம் வழியாக தென்பொதிகை அடிவாரத்தின் தென்காசி, செங்கோட்டை, பழயபேட்டை, திருநெல்வேலி டவுண் என்று தொடர்ந்து திருநெல்வேலியை வந்தடைந்தது.
ஸ்ரீ நெல்லையப்பர் கோவிலில் ஸ்ரீ தாமிரபரணி, ஸ்ரீ அகத்திய முனிவர் ஆகியோரது உருவச் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு மாடவீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஸ்ரீ சாரதா கல்யாண மண்டபம் வந்தடைந்தது. மறுநாள் சாரதா கல்லூரி, முக்கூடல், அம்பாசமுத்திரம் வழியாக பாபநாசதில் யாத்திரை முடிவுற்றது.
திருநெல்வேலி ஸ்ரீ எட்டெழுத்துப் பெருமாள் ஆலயத்தில் ஜடாயு படித்துறை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா அனைத்து ஜீயர் சுவாமிகள், குருமஹாசன்னிதானங்களின் ஆசியுடன் சிறப்பாக நடைபெற்றது.
திருமூர்த்திமலை உலக சமாதான தூதுவர் குருமகான் அவர்களின் ஆசியுடன், பேரளம் வேதாத்திரி மகரிஷி நிறுவனர் முனைவர் அழகர் இராமானுஜம் அவர்கள் தலைமையில் அகிலபாரதீய துறவியர் சங்கத்தின் துறவியர்கள் அனைவரும் தொடர்ந்து வர , பாபநாசம் திருக்கோவிலை வலம் வந்து ஊர்வலம் ஜூலை 30 அன்று மீண்டும் ரதயாத்திரையாகப் புறப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் வளத்தைக் காக்கும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஊர்கள் அனைத்திற்கும் பிரசார யாத்திரை செய்து பாபநாசம் கைலாச ஆச்ரமத்தில் அனைத்து ஆதீன குருமகான்கள் முன்னிலையில் ஸ்ரீ தாமிரபரணிக்கு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று மிகப்பெரிய ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
“மகாபுஷ்கர தினங்களில் நிகழ்ச்சிகள்”
மகாபுஷ்கர தினங்களில் (11.10.2018 முதல் 22.10.2018 வரை) தாமிரபரணி மகாத்மிய பாராயணம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பன்னிருதிருமுறைகள், திருவருட்பா, திருப்புகழ், சகஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிறப்பு வழிபாடுகள், பரிகார ஹோமங்கள், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம், தாமிரபரணிக்கு மங்கள ஆரத்தி போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் சிருங்கேரி ஸ்ரீ சாரடாபீடத்தின் ஸ்ரீ சங்கராச்சார்ய குருமகா சந்நிதானங்கள், ஆதீன குருநாதர்கள், அனைத்து ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் ஆகிய மகான்களின் வழிகாட்டுதலின் படி நடக்கவிருக்கிறது.
இந்தப் புனிதத் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் அனைத்து மக்களும் கலந்துகொண்டு தங்களின் வாழ்க்கையைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ஞானியர்களான நல்லோர்களின் வேண்டுகோள்.
செப்டம்பர் மாதம் “அம்மன் தரிசனம்” ஆன்மிக மாத இதழில் வெளியான “ஸ்ரீ தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018” கட்டுரை…
எழுதியவர்: மீ.விசுவநாதன்