“மா புரா ஜர ஸோம்ருதா: !” – அதர்வண வேதம்.
“ஓ மனிதா! நீ கிழத்தன்மையடைவதற்குள் மரணமடையாதே!”
இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.
“தீர்க்காயுஷ்மான் பவ!” என்று பெரியவர்கள் ஆசீர்வதிப்பது நம் சமுதாயத்தின் இன்றியமையாத வழக்கம்.
ஆயுள் என்பது ஒரு வாய்ப்பு. உயிர் பிழைத்திருந்தால் எந்தக் கணத்திலாவது நம்மிடம் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு உத்தமமான நிலையை அடைய முயற்சிக்க இயலும். அதனால்தான் வாழ்க்கையைப் போன்று மிகவும் மதிப்புடையது வேறொன்றுமில்லை என்கிறார்கள்.
வாழ்க்கையின் மதிப்பை வேதக் கலாச்சாரம் தெளிவாகவும் மிக அழகாகவும் எடுத்துரைக்கிறது. அனைத்து இந்திரியங்களும் புஷ்டியாக பணிசெய்து வாழ்க்கை முழுவதும் தார்மீக புத்தியோடு தர்ம வழியில் சம்பாதித்து இகலோகத்திலும் பரலோகத்திலும் நிறைநிலை எய்தும் வழியை வேதம் போதிக்கிறது.
மனிதனுக்கு பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் என்ற நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்கையும் மனிதன் முழுமையாக அனுபவிக்க வேண்டும். அகால மரணத்தின் வாயிற்படக்கூடாது. எப்படிப்பட்ட பலவீனமான கணத்திலும் வாழ்க்கையின் மீது விரக்தியை வளர்த்துக் கொள்ளக் கூடாது. வாழ்வின் மீது அன்பும் விருப்பமும் மிகவும் முக்கியம். சரியான சிந்தனைகளோடு கூடிய ஜீவிதம் மிக இன்றியமையாதது.
வாழ்வின் இந்தக் கணம் மிக கடினமானதாக தோன்றினாலும் அடுத்த கணம் மிக அதிக சுகமாக தோன்றக்கூடும். எனவே எந்த நேரத்திலும் வாழ்க்கையை வெறுக்கக்கூடாது.
ஜீவிதம் ஒரு வரம். பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் – இவற்றில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும், ஒவ்வொரு நிலையிலும் சாதிக்க வேண்டிய கடமைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் கடமையாற்றுவதில் இருந்து விலகக்கூடாது. எந்த கணத்தில் வாழ்க்கை முடிந்து போனாலும் அதன் பிறகு செய்ய வேண்டிய கடமை எதுவுமற்று இருக்க வேண்டும். எனவே பரிபூரண முழுமையான வாழ்க்கையை வாழ விரும்ப வேண்டும்.
முதுமை வேறு. கிழத்தன்மை வேறு. கிழத்தன்மை என்றால் க்ஷீணித்துப் போவது. முதியவராதல் என்றால் பெரியவராவது. முதுமை சகஜமாக வரக்கூடியது. ஆனால் ‘ஜரா’ என்னும் கிழத்தன்மை நடத்தையில் ஏற்படும் தவறுகளால் விரைவாகவே ஏற்படக்கூடியது. சரியான உணவு, சரியான பொழுதுபோக்கு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்கள், யோகாப்பியாசம் போன்றவை இல்லாவிட்டால் வயோதிகத்திற்கு பதில் சரீரம் கிழத்தன்மையடைகிறது.
நாம் முதுமையில் கூட கிழவனாகாமல் இருக்க முடியும். மீதியுள்ள மூன்று நிலைகளிலும் வெறும் போகத்தை அனுபவித்ததை மட்டுமே முக்கியமாக கருதாமல் சரியான வரைமுறையோடு கூடிய நியமங்களை கடைபிடித்து வந்தால் முதுமை, கிழத்தன்மை அடையாது. க்ஷீணித்து, உடல் குன்றி, நோய்வாய்ப்பட்ட சரீரம் ‘ஜரா’ என்னும் கிழத்தன்மையின் இயல்பு.
ஆயின், “ஜாதஸ்ய ஹித்ருவோ ம்ருத்யு: !” – “மரணம் கட்டாயம் சம்பவிக்க கூடியது”. அதற்கு முந்தைய அவஸ்தை ‘ஜரா’. அது இயல்பாகவே நேர கூறியதுதான். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு சாதனை செய்த தேகம் இயற்கையின் இயல்பாக இறுதியாக கிழத்தன்மைக்கு உட்படுகிறது. அத்தகைய நிலைமை வந்த பிறகு மரணம் ஏற்பட வேண்டும். அதுவரை மரணத்தை அருகில் நெருங்க விடக்கூடாது.
இலை உதிரும் முன்பு பழுத்துப் போகும். முதுமையின் இறுதி நிலையில் ‘ஜரா’ வந்து சேரும். அது வரை வாழ்ந்து வரத்தான் வேண்டும். அதற்குள் மரணம் வந்து விடக் கூடாது. இது நம்முடைய தீர்க்காயுளை விரும்பும் வேதமாதாவின் ஆசீர்வசனம்.
நீண்ட ஆயுளுக்கு தர்மம் இன்றியமையாதது. தர்ம மயமான ஸ்ரீராமனின் அரசாட்சியில் “பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பிரேத கர்மா செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை” என்று வால்மீகி வர்ணிக்கிறார்.
“ந சஸ்ம வ்ருத்த பாலானாம் ப்ரேத கார்யாணி குர்வதே !” என்கிறார்.
அகால மரணம் ஏற்படக்கூடாது என்று விரும்பினால் அகால மரணங்களுக்கு காரணமான அதர்மங்கள் இருக்கக்கூடாது என்ற பொறுப்பும் எச்சரிக்கையும் கூட முக்கியம்.
“வ்ருத்தேஷு சத்ஸ பாலானாம் நாஸீன் ம்ருத்யு பயம் ததா !!” –
“தர்ம மயமான ராமனின் பரிபாலனத்தில் வயோதிகர்கள் உயிரோடு இருக்கையில் பாலகர்கள் மரணமடையவில்லை” என்பது இராமாயணத்தின் வர்ணனை.
திடீர் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் மரணங்கள் போன்றவை கூட ஏற்படக் கூடாது. அனைவரும் மகிழ்ச்சியுடன் பூரண சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான அடித்தளம் தார்மீகமான வாழ்க்கை என்பதை மறக்கக்கூடாது.
மனிதர்களின் முழுமையான வாழ்க்கையை வேதம் விரும்புகிறது. வேதம் கூறியுள்ள தர்மம் அனைத்தும் அத்தகைய லட்சிய சாதனைக்காகவே என்பதை அறிய வேண்டும்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்