தீபாவளி லட்டு ….
தேவையான பொருள்
புதியதாக அரைத்த கடலை மாவு 2கப்
சர்க்கரை இரண்டரைகப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப் பருப்பு 10 விருப்பம் போல்
லவங்கம் 6
திராட்சை 15
ஏலக்காய் 6 பொடித்துக் கொள்ளவும்
பூந்தி பொரிக்க வேண்டிய எண்ணெய்
கேஸரி பவுடர் ஒரு துளி
குங்குமப்பூ சில இதழ்கள்
பச்சைக் கற்பூரம் மிகச் சிறிய அளவு
செய்முறை
சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும்.
பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும்.
கரண்டியால் அதை எடுத்து விடவும்.
ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும் பாகை இறக்கி வைக்கவும். கடலை மாவைச் சலித்து ஒரு சிட்டிகை ஸோடாஉப்பு, உப்பு, கேஸரி பவுடர் சேர்த்து தண்ணீர் விட்டு தோசைமாவு பதத்தில் கறைத்துக் கொள்ளவும்.
சற்றுக் குழிவான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூந்தி தேய்க்கும் கரண்டியில், ஒரு கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் சற்று தூக்கலாக கரண்டியைப் பிடித்துக் கொண்டு, மற்ற கரண்டியின் அடி பாகத்தினால், மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும்.
முக்கால் வேக்காடே போதும். சல்லிக் கரண்டியினால் கிளறிவிட்டு , பூந்தியை எடுத்து எண்ணெயை ஒட்ட வடித்துவிட்டு, பாகில் சேர்க்கவும். இப்படியே மாவு பூராவையும் பூந்தியாகத் தேய்த்து எடுத்து பாகில் சேர்க்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, லவங்கத்தையும் சேர்த்து பிரட்டி பூந்தியில் சேர்க்கவும். ஏலப்பொடி சேர்த்துக் கிளரவும் . சற்றே ஊரவைத்து சூடு இருக்கும் போதே கலவையை
லட்டுகளாகப் பிடிக்கவும்
குங்குமப்பூவை துளி பாலில் கறைத்து பாகிலேயே சேர்த்து விடவும்.
பச்சைக் கற்பூரம் வாஸனை பிடித்தவர்கள் சேர்க்கலாம். இனிப்பு அதிகம் வேண்டியவர்கள் பாகு வைக்கும் போதே கால்கப் சர்க்கரை, அதிகம் சேர்க்கவும்.