October 18, 2021, 8:32 pm
More

    ARTICLE - SECTIONS

    ஆடி ஸ்பெஷல் அசத்தல் ரெசிப்பீஸ்-பத்து!

    cooking - 1

    1. புட்டு

    தேவையானவை: பச்சரிசி, துருவிய வெல்லம் – தலா ஒரு கப், துருவிய தேங்காய் – கால் கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் – 10, ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்.

    செய்முறை: அரிசியை நன்கு களைந்து நீரை வடிகட்டவும். தண்ணீர் நன்றாக வடிந்ததும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்த மாவில் வெந்நீர் தெளித்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும் (மாவைப் பிடித்துப் பார்த்தால் பிடிக்கிற பதம்; உதிர்த்துப் பார்த்தால் உதிர்க்கிற பதம் இருக்க வேண்டும்). விருப்பப்பட்டால் வெந்நீரிலேயே மஞ்சள்தூளும் கலந்து பிசிறலாம். இந்த மாவைத் துணியில் மூட்டையாகக் கட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி, கட்டி இல்லாமல் உதிர்த்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு காயும்போது தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, பாகை மாவில் கொட்டி நன்றாகக் கலந்து, நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு நன்றாகக் கலக்கி மூடி வைக்கவும். அரை மணி நேரத்தில் சுவையான புட்டு தயார்.

    குறிப்பு: ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத் திருநாளில் இதை நைவேத்தியம் செய்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    2. கும்மாயம்

    தேவையானவை: உளுந்து – ஒரு கப், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம் – ஒன்றரை கப், நெய் – தேவைக்கேற்ப.

    செய்முறை: உளுந்து, பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பவுடராக்கவும். அந்த பவுடரை நீர்விட்டுக் கட்டியில்லாமல் கரைக்கவும் (கெட்டியான மோர் பதம்). அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நீர்விட்டுக் கரைத்துக் கொதிக்கவிட்டு, ஏற்கெனவே கரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து இடைவிடாமல் கிளறி, இடையிடையே நெய்யையும்விட்டு எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.

    குறிப்பு: ஆடி மாதத்தில் இந்தக் கும்மாயம் செய்வது வழக்கம்.

    3. சுருள் அரிசி

    தேவையானவை: பச்சரிசி – 2 கப், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், துருவிய தேங்காய் – கால் கப், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: பச்சரிசியைக் கழுவி நீரை வடித்து துணியில் உலர்த்தவும். பாதி உலர்ந்ததும் வெறும் வாணலியில் மிதமாக வறுக்கவும். மிக்ஸியில் ரவை பதத்துக்கு உடைக்கவும். வெல்லத்துடன் நீர் சேர்த்து சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி, மீண்டும் அடுப்பிலேற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதிக்கும்போது தேங்காயைத் துருவலை அதில் போட்டு, பொட்டுக்கடலையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் பாகு வந்ததும் இறக்கி வைத்துவிடவும். ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். ஆறியதும் உடைத்த அரிசி ரவையை அதில் போட்டுக் கிளறவும். சுருள் அரிசி தயார்.

    குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று இந்தச் சுருள் அரிசி செய்து பலவித சாதங்களுடன் ஆற்றுக்குச் சென்று படைப்பது வழக்கம்.

    4. மாங்காய் சாதம்

    தேவையானவை: பச்சரிசி – 2 கப், கிளி மூக்கு மாங்காய் – ஒன்று, தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், குடமிளகாய் – பாதியளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வேர்க்கடலை, உடைத்த முந்திரித் துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

    செய்முறை: பச்சரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வேகவைத்து ஆறவிடவும். குடமிளகாயை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். மாங்காயைத் தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு உதிர் உதிரான சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

    குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று இந்த சாதத்தை செய்து படைக்கலாம்.

    5. நெல்லிக்காய் சாதம்

    தேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 8, பச்சரிசி – 2 கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

    வறுத்துப் பொடிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா 3 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். நெல்லிக்காயை கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். 2 கப் பச்சரிசியுடன் 4 கப் நீர் விட்டு உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு, துருவிய நெல்லிக்காயை வதக்கவும். இதனுடன் உப்பு சேர்க்கவும். நெல்லிக்காயின் நீர் வற்றி வதங்கியதும் வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி, வேகவைத்த சாதத்தையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று இந்த சாதத்தை செய்து படைக்கலாம்.

    6. புளிச்சக்கீரை சாதம்

    தேவையானவை: பச்சரிசி – 2 கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

    வறுத்துப் பொடிக்க: சுத்தம் செய்த கோங்கூரா (புளிச்சக்கீரை) – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, மல்லி (தனியா), உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடிக்கவும். பச்சரிசியை 4 கப் நீர்விட்டு உதிர் உதிராக வடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு, உப்பு சேர்த்து பொடித்த பொடியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, உதிர் உதிரான சாதத்தையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

    குறிப்பு: முதலில் கோங்கூராவை நறுக்கி எண்ணெயில் மொறுமொறுப்பு வரும்வரை வறுத்துத் தனியாக வைத்துக்கொண்டு, பிறகு தனியா, பருப்புகளை வறுக்க வேண்டும். மிக்ஸியில் சுற்றும்போது முதலில் பருப்புகளை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பிறகு கீரையைப் போட்டுச் சுற்ற வேண்டும்.

    7. அவல் பகாளாபாத்

    தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், கெட்டி அவல், பால் – தலா அரை கப், தயிர் – ஒரு கப், உப்பு – தேவைக்கேற்ப.

    தாளிக்க: கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்).

    அலங்கரிக்க: கேரட் துருவல், உலர் திராட்சை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, உடைத்த முந்திரித் துண்டுகள் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: அவல், பச்சரிசி இரண்டையும் கழுவிக் களைந்து அரை கப் பால், 2 கப் தண்ணீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் உப்பு, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றால் அலங்கரிக்கவும்.

    8. மரவள்ளிக்கிழங்கு வடை

    தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு – ஒன்று, புழுங்கல் அரிசி – 2 கப், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – கால் கப், கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

    செய்முறை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும். மரவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி கேரட் துருவியால் துருவி, அதை அரைத்த மாவில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கலந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

    குறிப்பு: ஆடிப்பெருக்கு அன்று சுருள் அரிசி, 5 வித சாதங்கள், வடை இவற்றை ஆறு, மற்றும் நீர் நிலைகள் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று வழிபட்டு அனைவருடனும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.

    9. போளி

    தேவையானவை: கடலைப்பருப்பு – ஒரு கப், துருவிய வெல்லம் – ஒன்றரை கப், மைதா மாவு – ஒரு கப், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கேசரி கலர் – சிறிதளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 3 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை: மைதா மாவு, வெண்ணெய், நல்லெண்ணெய் இவற்றுடன் நீர் சேர்த்து, கேசரி கலரையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பை அளவான நீர்விட்டு வேகவிடவும். வெந்ததும் அதில் இருக்கும் சிறிதளவு நீரிலேயே வெல்லத்தையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவந்தவுடன் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பூரணம் தயார் (பூரணம் தளர்வாக இருந்தால், ஒரு ஸ்பூன் நெய்விட்டு பாத்திரத்தில் போட்டு அடுப்பிலேற்றிக் கிளறவும். பூரணம் கெட்டியாகிவிடும்).

    பிசைந்து வைத்த மைதா மாவிலிருந்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து அப்பளம் போல் தட்டி அதன்மீது எலுமிச்சை அளவு பூரணம் வைத்து மூடி போளியாகத் தட்டவும். போளியை தோசைக்கல்லில் போட்டு ஓரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு, மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

    குறிப்பு: வரலட்சுமி விரதத்தன்று இந்தப் போளியைச் செய்து படைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து தாங்களும் உண்டு மகிழ்வர்.

    10 கஜூர்க்காய்

    தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், துருவிய வெல்லம் – 2 கப், வெள்ளை ரவை, தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை – தலா கால் கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளை எள், உடைத்த முந்திரித் துண்டுகள் – தலா 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

    செய்முறை: வெறும் வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு வறுத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை ரவை பதத்துக்கு உடைக்கவும். வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அகலமான பாத்திரம் ஒன்றில் மைதா மாவு, ரவை, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து கால் மணி நேரம் ஊறவிடவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி வட்டமாக திரட்டிக்கொள்ளவும். துருவிய வெல்லத்துடன், உடைத்த பொட்டுக்கடலை, வறுத்த தேங்காய்த் துருவல், வறுத்துப் பொடித்த எள், ஏலக்காய்த்தூள், முந்திரித் துண்டுகள் சேர்த்து நன்றாகக் கலந்தால் பூரணம் தயார். திரட்டி வைத்துள்ள வட்டங்களின் நடுவே 2 டீஸ்பூன் அளவு பூரணத்தை வைத்து மூடி ‘மோதகம்’ வடிவில் செய்யவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மோதகங்களை போட்டுப் பொரித்து எடுக்கவும்.

    குறிப்பு வரலட்சுமி விரதத்தன்று இந்த கஜூர்க்காயை அம்மனுக்கு நைவேத்தியம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,564FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-