திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை வட்டாரத்தை சோ்ந்த பங்களாசுரண்டை பேரன்புருக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்தான் இப்படி தொங்கிக் கொண்டு பயணிப்பது. மாணவர்களின் உயிரோடு விளையாடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பள்ளி நேரத்தில் தேவையான அளவு நகரப் பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்க அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
தனியார் பேருந்து உரிமையாளரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம், கடையம், டானா மார்க்கத்தில் இயங்கும் பல அரசுப் பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இயங்காமல் அந்தத் தனியார் பேருந்தை முன்னால் அனுப்பி விட்டு அதற்குப் பின்னே வெறும் வண்டியாகச் செல்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர் பலரும்.
இதில் நடத்துநர், ஓட்டுநர்கள் மற்றும் பணிமனை அதிகாரிகள் அனைவருக்கும் பங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டும் மக்கள், இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது? அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் தனியார் பேருந்துகள் மேல் மட்டும் நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை என்றும் கூறுகின்றனர்.
குறிப்பாக, இந்த தனியார் பேருந்து உரிமையாளர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வேலையை விட்டுவிட்டு தனியார் பேருந்து சேவையைத் தொடங்கியவர் என்று குற்றம் சாட்டும் மக்கள், அசம்பாவிதம் ஏதும் நேரும் முன்னதாக, தகுந்த நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.