எட்டு விஷயங்களுக்குள்தான் நம் வாழ்வு அடங்கியிருக்கிறது. இந்த எட்டு விஷயங்கள்தான் நம் ஆன்மிக சாதனையை மேம்படுத்தி, வாழ்வின் பயனை நமக்குக் கிடைக்கச் செய்யும். அந்த எட்டு என்னென்ன தெரியுமா?
கங்கா கீதா ச காயத்ரி அபி துளசிகா கோபிகாசந்தன|
சாளக்ராமாபிபூஜா பரமபுருஷ: ஏகாதசி விஷ்ணு சஹஸ்ரநாம: ||
இந்த சுலோகத்தில் முதலாவதாக வருவது கங்கை…கங்கை என்றாலே தூய்மைதானே! அவள் மிகப் பவித்ரமானவள். கங்கை ஒரே ஒரு நதியாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் மந்தாகினி என்று சொர்க்கத்தையும் பாகீரதி என்று இந்த பூலோகத்தையும் போகவதி என்று பாதாளத்தையுமாக மூன்று லோகத்தையும் பவித்ரமாக்குகிறாள். இதை குமாரசம்பவத்தில் காளிதாசன் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கா எப்படி மூன்று லோகங்களையும் பாவனமாக்குகிறாளோ அப்படி கௌரிதேவி மூன்று காலங்களையும் பாவனமாக்குகிறாள் என்பதை குமாரசம்பவத்தில் சொல்லும்போது கங்கையின் பெருமையையும் காளிதாசன் சேர்த்துச் சொல்கிறான். கங்கையிலே ஸ்நானம் செய்வது மஹாபுண்ணியம். இல்லை கொஞ்சம் தீர்த்தம் எடுத்துத் தலையில் புரோக்ஷணம் செய்வது உத்தமம். கங்கே கங்கே என்று பிரார்த்தித்து நம் வீட்டில் குளிப்பதற்கு வைத்திருக்கும் நீரில் த்யானித்துக் குளித்தாலே கங்கை அதில் வந்து விடுவாள். கங்கே கங்கே என்று சொல்ல எங்கே எங்கே என்று வருவாள் என்பதை திருவிசநல்லூர் ஸ்ரீதரஅய்யாவாள் சரிதத்திலே நாம் பார்த்திருக்கிறோம்.
இரண்டாவது. கீதை! பகவத்கீதையில் எல்லாத் தத்துவங்களும் இருக்கின்றன. நம் மதத்தின் சாரம் அதில் அடங்கியிருக்கிறது. நம் மதத்துக்கு அத்தாரிட்டி என்று பகவத் கீதையைச் சொல்லலாம். உபநிஷத் சாரம், வேத சாரம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், நையாயிகம், வைசேஷிகம், பூர்வமீமாம்சை… இப்படி எல்லாவிதமான தத்துவங்களூம் அதில் அடங்கியிருப்பதால்தான் அதில் தினமேனும் கொஞ்சமாவது படிக்க வேண்டும் என்கிறார்கள்.
பகவத் கீதா கிஞ்சித தீதா… என்று ஆதிசங்கர பகவத்பாதர் பஜகோவிந்தத்தில்
சொல்லியிருப்பது போல் கொஞ்சமாக ஓரிரு சுலோகங்களையாவது அனுதினமும் படிக்க வேண்டும்…
மூன்றாவது, காயத்ரி… காயந்தம் த்ராயதீதி காயத்ரி என்பர். காயத்ரிக்கு சமமான மந்திரம் இல்லை. அநுஷ்டுப் என்பதில் இது பிரமாதமான அநுஷ்டுப். அதாவது அணி, சீர்…என்று இலக்கணப்படி வகுப்பதுபோல் எல்லாம் ஒரு கட்டமைப்பில் வகுக்கப்பட்டது. அநுஷ்டுப்பிலே காயத்ரிக்கு இணை வேறு இல்லை.
நான்காவது, துளசி. துளசி, பெருமாள் சிரசிலும் இருக்கிறாள். தோளிலும் இருக்கிறாள். பாதத்திலும் இருக்கிறாள். பவிஷ்ய புராணம் சொல்கிறது துளசிதான் ராதை என்று! அவள் பெருமானின் பக்கத்திலே இருந்தவள். அவளால்தான் பெருமானுக்குப் பெருமை. அவளே நேபாளத்தில் ஓடுகின்ற கண்டகி நதி. அதிலேதான் பகவானின் சிலாரூபமான சாளக்கிராமக் கற்கள் கிடைக்கின்றன. பகவான், கண்டகியிலேயே சாளக்கிராமமாகக் கிடப்பதும் அதனால்தான்.
ஐந்தாவது, கோபிகா சந்தனம் என்ற, நெற்றிக்கு இட்டுக்கொள்வது. பகவான் வராக மூர்த்தியாக அவதரித்து பூமியிலிருந்து வந்தபோது அவனுடைய உடம்பில் இருந்து வண்ண வண்ணமாய் மண் உதிர்ந்தது. மஞ்சள், சிகப்பு, வெள்ளை என்று உதிர்ந்த அந்த மண்தான் திருமண். நாம் அதைத்தான் தவறாது அவனை ஸ்மரித்துக் கொண்டு நெற்றியில் இட்டுக்கொள்கிறோம். நெற்றி எப்போதும் பாழாக வெறுமனே இருக்கக் கூடாது. திலகம் இல்லாது நெற்றி எப்போதும் இருக்கக் கூடாது.
ஆறாவது சாளக்கிராமம். இந்த சாளக்கிராமத்திற்கு ஒரு விசேஷம் உண்டு. மற்ற எந்த தெய்வத்தையும் கல்லில் வடித்து அதை முறையாக ஆவாஹணம் செய்து வணங்க வேண்டும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஆவாஹயாமி, அஸ்மின் புஸ்தக மண்டலே ஆவாஹயாமி என்று ஆவாஹணம் செய்கிறோமல்லவா?
அப்படி சாளக்கிராமத்தை ஆவாஹணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணம் சாளக்கிராமமே பகவான்தானே!
பகவான்தான் சாளக்கிராம உருவில் இருப்பதாக கீதையில் சொல்கிறானல்லவா? மற்ற தெய்வங்களுக்கானால், நைவேத்தியத்துக்கு என்று சிரத்தை எடுத்துக் கொண்டு, ஒழுங்காகச் செய்யவேண்டும். ஆனால் சாளக்கிராமத்துக்கு வெறுமனே ஏதோ கொஞ்சம் உலர்ந்த திராட்சை, கல்கண்டு என்று நைவேத்தியம் செய்துவிடலாம். சாளக்கிராம பூஜை என்பது தொடர்ந்து வரவேண்டும். அதை பூஜை இல்லாமல் வெறுமனே வைத்திருக்கக்கூடாது.
ஏழாவது- ஏகாதசி. இதற்கு மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம். ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்… ஏகாதச்யாம பூரார்த்தம் கர்த்தவ்யம் போஜனத்வயம்… என்று ச்லோகம் ஒன்று உண்டு. அதாவது ஏகாதசியன்று போஜனத்வயம் என்றபடிக்கு இரண்டு வேளையும் சாப்பிடணும்… போஜன த்வயம் என்றா பொருள்… அப்படி இல்லை! ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும்… போ(ஓ) ஜன(மக்களே) த்வயம்(இரண்டு) த்ராத்ரௌ ஜாகரணம் குர்யாத் திவாஜ ஹரி கீர்த்தனம்…. இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதே இந்த இரண்டு செயல்கள்… போ ஜனா த்வயம் கர்த்தவ்யம் என்ற அர்த்தம் இந்த ச்லோகத்துக்கு!
இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அனுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம்.
அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜ்யத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜ்யத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவித பக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்..
அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான்.
ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து… இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும்.
அப்போதுதான்…. துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்… வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு…
ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி, பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட்டாக அப்போது துர்வாசர் … இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு.
அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் … ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்… அவரை விட்டுவிட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது… என்றார்கள்.
அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப்போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்…
என்ன செய்கிறாய்…?
பாரணை…!
என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்…. என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே
இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார்.
அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்… என்று கர்ஜிக்க… துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்… சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோ சமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது.
தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை இரண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக் கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்…
அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார்.
அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம்
புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்… என்றார்.
வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
ஏகாதசி விரத மகிமை அப்பேர்ப்பட்டது.
எட்டாவது – விஷ்ணு சஹஸ்ரநாமம். இரண்டு சஹஸ்ரநாமங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்று லலிதா சஹஸ்ரநாமம். அடுத்தது விஷ்ணு சஹஸ்ரநாமம். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு ரெண்டுபேர் மிக அழகான உரை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் – சங்கர பகவத்பாதரும் ஸ்ரீபராசரபட்டரும்!
ஆதிசங்கர பகவத்பாதர் லலிதா சஹஸ்ரநாமத்திற்குத்தான் வியாக்யானம் செய்யணும் என்று நினைத்தார்.. அதைக் கொண்டுவரச் சொல்லி சிஷ்யனைப் பணித்தார். சிஷ்யன் ஒவ்வொருமுறை கொண்டுவரும்போதும் அது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம். சரி பகவானோட ஆக்ஞை இதுதான் என்று எண்ணி, அவர் விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கே பாஷ்யம் எழுதினாராம். அவர் லலிதா த்ரிசதிக்கு பாஷ்யம் எழுதினார், லலிதா
சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதவில்லை.
இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு அப்படி என்ன விசேஷம்?
மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகைக்குக் கிளம்பினார். அப்போது தர்மபுத்திரர் அவரிடம் வந்தார். ஸ்வாமி தெரிந்தோ தெரியாமலோ இத்தனை பேர் போரில் மடிந்துவிட்டார்கள். பாபம் சம்பவித்ததற்கு நானும் காரணமாகிவிட்டேன். அஸ்வத்தாமாஹத: என்று நானும் பொய்சொல்லும்படி ஆனது. இப்படி பாபங்கள் சம்பவித்துப் பெற்ற ராஜ்யம் எனக்கு வேணுமா? நான் எப்படி ராஜ்ய பரிபாலனம் செய்வேன்? இந்த பாபங்களைப் போக்கிக் கொள்ளணும் என்றால் அதற்கு என்ன பிராயச்சித்தம்… என்று கிருஷ்ணனிடம் கேட்டார் தர்மபுத்திரர்.
அப்படியா… இதுமாதிரி சந்தேகம் வந்தால் நாம் பெரியவர்களிடம்தான் போய் நிவர்த்தி செய்துகொள்ள வேணும். இப்போது பாட்டனார் பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையிலே இருக்கிறார். உத்தராயணத்திற்காகக் காத்திருக்கிறார். அவர்தான் இதற்குச் சரியானவர். அவரிடம் போய்க் கேட்போம் வா என்று கிருஷ்ணர் சொல்ல, எல்லோரும் பீஷ்மரிடம் போனார்கள்.
பீஷ்மரை நமஸ்கரித்து தர்மபுத்திரர் இந்தப் பாபங்களுக்கான பிராயச்சித்தம் என்ன என்று கேட்டார்…
கிமேகம் தைவதம் லோகே கிம்வாப்யேகம் பராயணம்…. என்று நாம் பாராயணம் பண்ணுகிறோமல்லவா? அப்படி கிம் ஏகம்? எந்த ஒரு தெய்வத்தை பாரயணம் செய்து எனது இந்த பாபங்களைப் போக்கிக் கொள்வது என்று தர்மர் பீஷ்மரைப் பார்த்துக் கேட்டார்.
பீஷ்மர் சொன்னார்… ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்? உன் தம்பி அர்ஜுனனிடம் கேள். அவனுக்குத் தேரோட்டினானே கிருஷ்ணன், உன் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறானே…. அவன் உனக்கு தெய்வமாகத் தெரியவில்லையா?
ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம்… என்று அந்த புருஷோத்தமனான கிருஷ்ணன் உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? அவன் பெருமையை நான் சொல்கிறேன்.
பத்தாவது நாள் யுத்தம். நான் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே… உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே.. நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர்.
இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி. நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உமக்கு பாண்டவர்கள் மேல் பரிவு இருக்கிறது. உன் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்… உமக்கு இருப்பது பாண்டவ பக்ஷபாதம் என்று சொல்லி என்னைத் திட்டினான்.
அஸ்தினாபுரத்தைக் காப்பேன் என்று என் தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தைக் காத்து வரும் எனக்கு இப்படி பக்ஷபாதம் என்ற அவச்சொல் கேட்க சகிக்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன். இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.. நான் செய்யும் கோர யுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன் பார் என்று அவனிடம் நான் சபதம் செய்தேன்.
அப்படியே நான் போர்க்களத்திற்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்… வெறியோடு யுத்தம் செய்தேன். எதிரில் வந்தான் பார்த்தசாரதி அர்ஜுனனோடு! அவன் மீது அம்பை எய்தேன். அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் ஸ்வாமிக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவ வேண்டாமா? அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்…
கண்ணன் மீது அம்பு பட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் அல்லவா செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்… ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் பார்த்திபன். பார்த்தார் கிருஷ்ணன். கையில் சக்ராயுதபாணியாக
தேரிலிருந்து குதித்தான். அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக் கீழே விழுகிறது. அதைத் தாண்டிக்கொண்டு அவன் வருகிறான்.
நானோ அப்பா கிருஷ்ணா… அந்தப் பாபி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும் எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும் என்று ஸ்வாகதம் ஸ்வாகதம் என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்த பார்த்தன் பார்த்தான். கையில் சக்கரத்தோடு கிருஷ்ணன் பீஷ்மரைப் பார்த்துச் செல்வதை கண்டு ஓடி வந்தான். கிருஷ்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, ஹே கிருஷ்ணா இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா? என்று கேட்டான். அதற்குக் கிருஷ்ணன் சொன்னான்.. என் சத்தியம் கிடக்கட்டும்… நீ செய்த சத்தியத்தைக் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் தஞ்சம்… அவன் என்னைக் காப்பான் என்றாயே… இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்துவிடுவான் போலிருக்கிறதே… நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை… என்று சொன்னான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுகிறது. உண்மையில் தர்மா… கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்… இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே
ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை என்று! என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காக என் பிரபு ஆயுதம் எடுத்தான்..
உம்மை பின்னால் பார்த்துக் கொள்கிறேன் என்று கிருஷ்ணன் சொல்லிச் சென்றான். இதோ அந்த நேரமும் வந்துவிட்டது. உத்தராயண புண்ணிய காலமும் வந்துவிட்டது என்று சொல்லி, கிருஷ்ணனின் நாமத்தை விட்டால் வேறு ஏது புகல் என்று தர்மருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தைச் சொன்னார் பீஷ்மர்.
விச்வம்விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: என்று!
நாமும் சொல்வோம்…
வநமாலீ கதீசார்ங்கீ சங்கீ சக்ரி சநந்தகீ
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணு வாசுதேவோபிரக்ஷது…
இப்படி எட்டுக்குள்ளே மனிதவாழ்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் நம் வாழ்வு இனிக்கும். வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள இந்த எட்டையும் மனசுக்குள் போட்டு வையுங்கள்.
- செங்கோட்டை ஸ்ரீராம்