பாகிஸ்தானிற்கு வெடிப்பொருட்கள் கொண்டுசெல்லும் ரயிலை தகர்ப்பதை நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு குடும்பப் பிரச்சனைகள் ஆப்தேயின் மனதை ஆட் கொண்டிருந்தது. மகனின் மனநிலை பாதிப்பு அதிகமாகி வந்ததை தொடர்ந்து,இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான்,தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி பூனாவிலிருந்த ஒரு மனநல காப்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தார் ஆப்தே.
மகன் மனநலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறான் என்பதை அறிந்த ஆப்தேயின் மனைவி அடைந்த துயரத்திற்கு அளவேயில்லை. அவள் மனதை தேற்றவே இயலவில்லை.
ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டு ஆப்தேயின் மனைவி தினசரி சத்தம் போட்டு சண்டை போடுவது வழக்கமாகத் தொடங்கியது. மகனை பார்க்க மனைவியை மனநலக் காப்பகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழைத்து சென்றார் ஆப்தே.
அது சித்திரவதை தரும் நிகழ்வாக இருந்தது. தாயும் மகனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுவதும், ‘ விஸிட்டிங் நேரம் ‘ முடிந்தவுடன் தாயை இறுக்கி அணைத்துக் கொண்டு அனுப்ப மறுக்கும் மகனை பலவந்தமாக பிரிப்பதும் ஆப்தேயிற்கு நரகவேதனையாக இருந்தது.
மருத்துவமனையில் உடன் இருப்பவர்கள் தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என கதை கதையாக மகன் முணுமுணுத்துக் கொண்டே இருப்பதை கண்ட ஆப்தே
ஒரு கட்டத்திற்கு மேல், டாக்டர்களிடம், மகனை வெளியே விடாது வீட்டிலேயே பத்திரமாக வைத்து பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி அழைத்து வந்து விட்டார்.
அக்கம்பக்கத்தாரின் எதிர்ப்பு கடுமையாக இருந்தது. அதைப் பற்றி ஆப்தே கவலைப்படவில்லை. தாயும் மகனும் ஒன்றாக இருக்கிறார்களே அது ஒன்றே போதும் என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.
தன் கணவனை ஒரு கொடிய மிருகமாகப் பார்ப்பதையாவது ஆப்தேயின் மனைவி குறைத்துக் கொண்டார். அப்போது நடந்த வேறோரு விஷயம் ஆப்தேக்கு இருந்த கொஞ்சம்நஞ்சம் நிம்மதியையும் அழித்து விட்டது. மனோரமா சால்வி தான் கர்ப்பமாக இருப்பதாக ஆப்தேயிடம் தெரிவித்தார்.
மனோரமா சால்வி வில்சன்ஸ் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார். ஆனால் பெண்கள் விடுதியில் இல்லை. பைகுலாவில் காவல்துறைக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட்டில் பெற்றோரோடு இருந்தார்.
இது,மனோரமாவின் தந்தை தெளத்ராவ் சால்வே மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்த நார்த்கோட் காவல்துறை மருத்துவமனைக்கு அடுத்து அமைந்திருந்தது. B.A. கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தார்.
ஆப்தேயுடனான காதல் தொடங்கி மூன்று வருடங்கள் ஆகியிருந்தன.
சால்வே குடும்பத்தினர் கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது,கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் அக்கம்பக்கத்தினராக இருந்த ‘ மிஷினரி காம்பவுண்ட் ‘ டில் வசித்து வந்தார்கள். மனோரமா,ஆப்தேயுடனான காதலை பெற்றோரிடம் தெரிவித்தார்.
மகள் ஒரு ஹிந்துவை, அதுவும் தன் ஹிந்து மதத்திற்காக போர் குணம் கொண்டு போராடும் ஒருவனை காதலிக்கிறாள் என்பதும், அவனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்திருக்கிறாள் என்பதையும் அறிந்து அவர்கள் அதிர்ந்து போனார்கள்.
1947 அக்டோபர் மாதம் வரை ,மனோரமாவின் காதல் விவகாரம் அவர்களுக்குத் தெரியாமலேயே இருந்தது ஆச்சரியமே !
( தொடரும் )