மறைந்த முன்னாள் பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்., ஸ்வயம்சேவகருமான அடல் பிகாரி வாஜ்பாயி பெயரில் அவரது சொந்த ஊரான குவாலியரில் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.
13 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், வாஜ்பாயி பெயரில் மதிப்பும் பாசமும் மிக்க தொண்டர்கள் சிலர் வாஜ்பாயிடம் அவருடைய ஹிந்தி கவிதைகளுக்காகவும், அவர் ஹிந்தி மொழிக்கு செய்துள்ள பங்களிப்புக்காகவும் ஒரு நினைவுக் கோயில் எழுப்ப விரும்பி அனுமதி கேட்டனர். அந்தக் கோயிலில் ஹிந்தி மொழியை குறிப்பாக கவிதைகளை வாசித்து பிரபலப் படுத்துவதுதான் நோக்கம் என்றும் கூறினர்.
ஆனால், தனி மனித வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இருந்து வந்த வாஜ்பாய்க்கோ தர்ம சங்கடமாகிப் போனது. எனவே அவர் அவ்வாறான கோயில், சிலை இவற்றை எல்லாம் கூடாதென்று தடுத்தார். இருப்பினும் அன்பர்கள் வற்புறுத்தினர்.
குவாலியரில் வாஜ்பாய் சிறு வயதில் சத்யநாராயண் கி தேகரி கோயிலுக்கு அடிக்கடி செல்வார். எனவே அங்கே ஒரு சிறிய கோயில், வாஜ்பாய் பெயரில் கட்டியே தீருவது என்று அடம் பிடித்தனர் அன்பர்கள். வேறு வழியின்றி அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டிய நிர்பந்தம் வந்தது வாஜ்பாய்க்கு. அப்போது அவர் இரு நிபந்தனைகளை விதித்தார். கோயில் சிறிதாக இருக்க வேண்டும். அதில் தன் சிலை இடம் பெறக் கூடாது.
இதனை ஏற்றுக் கொண்ட அன்பர்கள், 2005இல் அங்கே ஒரு சிறிய சந்நிதி போல் எழுப்பினர். அதனுள் வாஜ்பாயின் உருவப் படத்தை வைத்தனர். அடிக்கடி அங்கே கூடினர். ஹிந்திக் கவிதைகளைச் சொல்லி வாஜ்பாய் நினைவுகளைப் போற்றி வந்தனர்.
வாஜ்பாயிடம் இந்த அனுமதி பெறச் சென்ற அன்பர்களில் ஒருவர் விஜய் சிங் சௌஹான். வழக்கறிஞர். அவர் இது குறித்துக் குறிப்பிட்ட போது, அடல்ஜி எங்களைக் கவர்ந்த மனிதர். கவிஞர். நாங்கள் ஹிந்தியை வளர்ப்பதற்காக ஒரு கோயில் அமைக்க முடிவு செய்தோம். அதை, வாஜ்பாய் பெயரில் அமைக்கலாம் என்று கருதினோம். காரணம், ஐ.நா. சபையில் முதல் முதலில் ஹிந்தியில் பேசி, மொழிக்கு கௌரவம் கொடுத்தவர். அவர் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் குடியிருப்பவர்.. என்றார்.
கவிஞர்கள், ஹிந்தி மொழி அன்பர்கள் கூடுவதற்காக வாஜ்பாய் பெயரில் இந்தக் கோவிலில் சந்நிதி அமைத்தோம். அவரால் சுய ஊக்கம் பெற்ற கவிஞர்கள் பலர். நாங்கள் அவரை தினமும் இங்கே நினைவில் கொள்கிறோம். அவர் கவிதைகளை வாசிக்கிறோம். அரசு வாஜ்பாய் பெயரில் ஒரு நினைவிடம் இங்கே அமைத்து, அவரது கவிதைகளையும் ஹிந்தியையும் பரப்ப வகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் குவாலியரைச் சேர்ந்த கவிஞரான நஸீம் ராஃபட்!