
“தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.”தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த அதிமுக ஆட்சியில் 2014ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 8.00ரூபாய் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.
அதன் பிறகு 2018ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 4.00ரூபாய் கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கப்பட்டது.
2014, 2018ம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதில் கிட்டத்தட்ட 80% விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கி 20% ஆவினுடைய நிர்வாக செலவினங்களுக்காக வழங்கியதில் ஒரு நியாயம் இருந்தது.
கொள்முதல் விலை உயர்வு அடிப்படையில் விற்பனை விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத, காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது ஆவின் நிறைகொழுப்பு பாலுக்கு (ஆரஞ்சு 48.00ல் இருந்து 60.00ரூபாய் மற்றும் டீமேட் 52.00ல் இருந்து 68.00ரூபாய்) லிட்டருக்கு சுமார் 12.000ரூபாய் முதல் 16.00ரூபாய் வரையிலும், ஆவின் கோல்டு (47.00ல் இருந்து 56.00) பாலுக்கு லிட்டருக்கு 9.00ரூபாய் வரையிலும் விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தி விட்டு அதிலிருந்து வெறும் 3.00ரூபாய் மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்குவது என்பது எந்தவகையிலும் நியாயமில்லை.
ஏனெனில் இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற விற்பனை விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்வோடு ஒப்பிடுகையில் தற்போது உயர்த்தப்பட்ட விற்பனை விலையில் 20%முதல் 25% வரை மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி விட்டு 75%முதல் 80%வரை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கியிருப்பதன் மூலம் பால்வளத்துறையும், தமிழக அரசும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை (விலை உயர்வு) மக்களிடம் இருந்தும், பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை ஆவினின் லாபத்தில் இருந்தும் வாங்கித் தர மூன்றாண்டுகளை கடந்தும் ஆட்சியாளர்களுக்கு மனமில்லாதததும், ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலாக பார்ப்பதுமே அதன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை பார்த்து தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்… என்று வலியுறுத்தியுள்ளார்.