
சென்னை: பாஜக., தலைவர் பதவி என்பது அவ்வளவு இலகுவானது என்று நினைக்கிறீர்களா என்று நகைச்சுவையுடன் எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கு நகைச்சுவை மிளிர பதிலளித்தார் பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன். அப்போது அவரிடம், நடிகர் எஸ்.வி.சேகர், தன்னிடம் பாஜக., தலைமைப் பொறுப்பை அளித்தால் ஏற்றுக் கொண்டு வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டுவேன் என்று கூறியது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இதற்கு பதில் சொல்லவதை விட சிரித்துவிட்டு விட்டு விடலாம். பல சிரிப்பு நாடகங்களில் நடித்து அதைப் போல் நாடகத்தில் பேசுவதாக நினைத்துப் பேசியிருப்பார். பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவானதா? என்று கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை கூறியவை…
பாரதீய ஜனதா கட்சி இரண்டு போராட்டங்களை அறிவித்துள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் எந்த முன் அறிவிப்புமின்றி எங்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியினர் கைது தொடர்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு கொண்டாட வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசு விழாவாகவே நடக்கிறது. அதுபோல் தமிழகத்திலும் அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும்.
காவிரி முழுமையாக தூய்மையாக இருக்க காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் புஷ்கர விழா இந்த முறை தாமிரபரணியில் வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சில இடங்களில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்கர விழா சுமூகமாக நடக்க அரசு எல்லா ஆயத்த பணிகளையும் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அக்டோபர் 2ஆம் தேதி திருநெல்வேலியில் உண்ணாவிரதம் நடக்க உள்ளது. இந்துமத விழாக்களுக்கு அதிக கட்டுபாடுகளை விதிப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கைது செய்யும் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமாக நடக்கிறதா என்பதை காவல் துறையிடம்தான் கேட்க வேண்டும். எச்.ராஜா பதிவில் உள்ள தனது குரல் இல்லை என்றதும் நீதிமன்றத்தில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் வெளியே வருவார். காவல் துறை பாரபட்சமாக செயல்படுகிறதா என்பதை காவல் துறையிடம் தான் கேட்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பேருந்துக் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதைவிட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முயற்சி செய்யலாம். ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலைக் கொண்டு வர ஆதரவு தரலாம். எல்லாரும் இணைந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மத்திய அரசு மக்கள் மீது எந்த சுமையும் ஏற்றாது. பெட்ரோல், டீசல் விலை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றாக எத்தனால், பேட்டரி கார் போன்றவற்றிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
ரபேல் விமானம் பற்றி ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன், அருண் ஜேட்லி ஆகியோர் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதமும் கூட ஊழலுக்கு இடமில்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்.