5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு

புது தில்லி:

பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்காமல் இருக்கும் வகையில் அடுத்த மாதம் வெளிச்சந்தையில் விநியோகம் செய்யும் திட்டத்துடன் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கானஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி வெளியிட்டுள்ளது. எம்எம்டிசி நிறுவனம் கடந்த ஆண்டில் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்தது. ஆனால், உளுந்தம் பருப்பு தொடர்பாக அந்நிறுவனம் விடுத்த ஒப்பந்தப் புள்ளிக்கு போதிய வரவேற்பில்லை.

இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் துவரம் பருப்பை இறக்கு மதி செய்வது குறித்து மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறியபோது…

2015ஆம் ஆண்டில் பருப்பு வகைகளின் உற்பத்தி குறைவாக இருந்ததால், பருப்பு வகைகளின் விலை பலமடங்கு அதிகரித்தது. இதை குறைப்பதற்கு, பருப்பு பதுக்கல்காரர்களின் கிடங்குகளில் சோதனையும், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதியும் செய்யப்பட்டன. இருப்பினும், துவரம் பருப்பு விலை கிலோவுக்கு தற்போது ரூ.180ஆக உள்ளது.

இந்நிலையில், பருப்பு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், 2016ஆம் ஆண்டிலும் பருப்பு வகைகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இதையடுத்து, அடுத்த மாதம் உள்நாட்டு சந்தையில் துவரம் பருப்பை விநியோகத்தில் விடும் திட்டத்துடன் 5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியான்மர், மலாவி, மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எம்எம்டிசி நிறுவன அதிகாரிகள் தரப்பு கூறுகையில், “குறைந்தப்பட்சம் 2,000 டன் துவரம் பருப்பு என்ற அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. அதையடுத்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள், மும்பையில் உள்ள ஜவாஹர்லால் நேரு துறைமுகத்துக்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியும், சென்னை துறைமுகத்துக்கு மார்ச் மாதம் 15ஆம் தேதியும் வந்தடையும்’ என்றனர்.