இந்தியாவில் 13 இடங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல்

புது தில்லி:

இந்தியாவில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்க பங்கரவாதிகள் தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள். ஒரு பெண்கள் பிரிவையும் உருவாக்குகிறார்கள் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததும், இந்திய உளவுத்துறையினர் உஷார் ஆனார்கள். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க காரணமான அந்த இயக்கத்தின் தளகர்த்தர்கள் யார், யார் என்ற தகவலை திரட்டினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டு பதிவு செய்யத் தொடங்கினார்கள்.

அப்போதுதான் பதன்கோட் தாக்குதலுக்கு முன்பாக, அந்தத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 4 பங்கரவாதிகளில் ஒருவரான ஜெய்ஷ் இ முகமது பங்கரவாத இயக்கத்தின் தலைவன் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராவுப் அஸ்காரின் தொலைபேசி உரையாடல் என்று நம்பப்படுகிற ஒரு உரையாடலை இந்திய உளவுத்துறையினர் இடைமறித்துக் கேட்டு பதிவு செய்துள்ளனர்.

அதில் அவர், ‘‘ஜெய்ஷ் இ முகமது இயக்கம், புதிய போராளிகளை பெற்றிருக்கிறது. (பாராளுமன்ற தாக்குதல் பங்கரவாதி) அப்சல் குரு 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததற்கு பழி வாங்கும் விதத்தில் 13 இடங்களில் பங்கரவாத தாக்குதல்கள் நடத்துவோம். இதற்கு அனைத்து தரப்பிடமிருந்தும் எங்களுக்கு ஒப்பற்ற ஆதரவு கிடைத்துள்ளது’’ என கூறி உள்ளார்.

மற்றொரு தொலைபேசி உரையாடலில் ஒருவர், ‘‘பாகிஸ்தானில் உள்ள 300 போராளிகள் தாக்குதல்கள் நடத்த தயார் நிலையில் உள்ளோம். எங்கள் சகாக்களில் சிலரை இந்தியாவில் ஊடுருவ செய்துள்ளோம். அவர்கள் தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருக்கிறார்கள்’’ என கூறி உள்ளார்.