ராஜீவ் கொலைவழக்கு: மறுவிசாரணை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சாந்தகுமரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன் என ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரி ரகோத்தமன் கூறினார். இந்த விசாரணையின்போது சிபிஐ இயக்குநராக இருந்த டி.ஆர்.கார்த்திகேயன், இந்த வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், அமெரிக்காவின் சிஐஏக்கு இதில் பங்குண்டு என்றும் கூறினார். எனவே, இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் … என கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யக் கோரி இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவையென்றால் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.