”கோவிலில் தொழும் முறையில் வடநாட்டவர்களும் தென்னாட்டவர்களும் ஒரே முறையைப் பின்பற்றுவதில்லை. அப்புறம் எப்படி இந்து மதம் இந்த நாடு முழுதுக்கும் உள்ளதுன்னு சொல்றீங்க?” நடராஜன் சமீபத்தில் வலவன் வாசித்ததினால், அதில் வரும் ‘ அம்ம ’ கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
“ அடியோடும் சாஸ்திரம், எல்லா இடங்களிலும் சமூக ஒழுங்குமுறையைப் பண்படுத்தியது. சோதிக்கப்பட்டு, தேவையானவை சீர்செய்து எடுக்கப்பட்டபோது, பொருந்தாதவைகளைக் காலம் விலக்கியது. இது வளர்சிதை மாற்றத்தின்பின் வந்த செழுமை. பழக்கங்கள் , இடத்துக்கேற்ப மாறும். அதைப் பெரிதாக எடுக்க வேண்டியதில்லை.”
”சமஸ்க்ருத வாழ்க்கை முறையில் உள்ள தொழும் முறைக்கும், நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே சுதாகர்?
தேவிக்கு ஒரு சந்நதி, அதுக்கு அப்புற்ம்தான் பெருமாள் கிட்ட போகணும்னு ஒரு விதி நமக்கு. அவங்க அப்படியெல்லாம் ஒண்ணுமே சொல்றதில்ல. நேரா முன்னாடி போய் கையை விரிச்சு நிப்பாங்க. ஒரு வரிசை கிடையாது. அமைதியா நிக்கவோ உக்காரவோ மாட்டோம். ஒரே கசமுசா…Chaotic நம்ம கோவில்”
“வீட்டுல அப்பா அம்மா முன்னாடி வரிசையாக உக்கார்ந்தா பேசறீங்க? அது மிலிடரி வீடு, நடராஜன். நாம தொழும் முறை வேறு பிற மதங்கள் தொழும் முறை வேறு. உணர்வு முக்க்யம் இங்கு. நமக்கு இன்னும் தனிமனித ஒழுங்கு வேணும்- ஒத்துக்கறேன்.”
“பழைய சமஸ்க்ருத புஸ்தகத்த்துல நம்ம வழக்கம் ஒன்னு காட்டுங்க பாக்கலாம்” என்றார் நடராஜன்.
“எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. யார்கிட்டயாவது கேட்டுப் பாக்கறேன்” என்று சொல்லி வந்துவிட்டேன். குடைந்து கொண்டே இருந்தது. சிலநாட்களில் மறந்தும் போனேன்.
நேற்று , மிகுதியான போக்குவரத்து நெரிசலில் மாட்டி ( 12 கிமீ 2 மணி நேரம் ) முழி பிதுங்கும்போது, காரின் சி.டி ப்ளேயரில் வேளுக்குடி க்ருஷ்ணனின் புருஷ சூக்த விளக்கத்தைக் கேட்கத் தொடங்கினேன்.
“இந்த சூக்தம் மிகப் பழமையானது. வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. சூக்தங்களில் சிறந்தது புருஷ சூக்தம் “ கேட்டுக்கொண்டே வந்தேன். முன்னாடி இருக்கும் அல்ட்டிஸ் கார் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. க்ளட்ச் அழுத்தி அழுத்தி, கால் விண்ணெனத் தெறித்துக் கொண்டிருந்தது.
சி.டி சுழன்றுகொண்டிருந்தது.
“ இந்த சூக்தத்துல ஒரு இடத்துல கூட “எனக்கு இதைக் கொடு, அதைக்கொடுன்னு “ ஒரு வார்த்தை வராது. கடைசியில “ லக்ஷ்மீயுடன் இரவும் பகலும் போல் சேர்ந்தவனே! எனக்கு பிரியமானதைக் கொடு, நல்லது கொடு, அனைத்தையும் கொடு” என்கிறது.
”ஸ்ரீயத்தே லக்ஷீஸ்ச்ச பதன்யொள அஹோ ராத்ரி பார்ஸ்வே…..
இஷ்டம் மனிஷான, அமும் மனிஷான, சர்வம் மனிஷான”
யார் இருக்கும்போது கேட்கிறது? லக்ஷ்மீ என்ற தாய் இருக்கும்போது மட்டும். அவளின்றித் தருவதற்கு அவனாலும் முடியாது. கருணை, கொடை, அன்பு , உணவு அனைத்தையும் தாயிடமே கேட்கிறோம். எனவேதான்…”
நடராஜனை அழைத்தேன். இது தாய் நாடு, சாரதா தேவியின் கஷ்மீரத்திலிருந்து கன்யாகுமரி நிற்கும் கடற்கரை வரை.. காமக்க்யா இருக்கும் அஸ்ஸாமிலிருந்து, ருக்மிணீ அருளும் துவாரகை வரை…
உண்மை ஒன்றே.. அம்ம..
- சுதாகர் கஸ்தூரி
Sudhakar Kasturi