மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்! வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் தமிழகம் மதுரை

madurai thevar name protest - 2026

மதுரை : மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக் கோரி பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள் சார்பில் மதுரையில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று மதுரையில் கடை அடைப்புக்கு தேவரின தேசபக்திப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பல்வேறு தேவர் சமுதாய இயக்கங்களும் களம் இறங்க, மதுரையில் பல்வேறு  இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதை அடுத்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கே குவிக்கப்பட்டனர். போக்குவரத்து திருப்பி விடப் பட்டது.  ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கூட்டத்தை போலீஸார் கட்டுப் படுத்தினர்.

மதுரையில் உள்ள அண்ணாநகர் பேருந்து நிலையம், மதுரை மீனாட்சி அம்மன் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபடச் சென்றோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தல்லாகுளம் வள்ளுவர் காலனியில் அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டது. தொடர்ந்து, கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், அண்ணா நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டன. காய்கறி சந்தை, பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டன.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், தேவரின் வரலாற்றை 7ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகளும் வெகுகாலமாகவே வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.