– மு.ஸ்ரீனிவாஸன்
17 ஆம் நூற்றாண்டின் சம்ஸ்கிருதக் கவிகளிலே தன்னிகரற்று விளங்கியவர் நீலகண்ட தீட்சிதர். அவர் பன்முக வித்தகராக வாழ்ந்தார். பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.
ஏறக்குறைய கி.பி.1582 ஆம் ஆண்டில் நீலகண்ட தீக்ஷிதர் பிறந்தார். அவருக்கு முன்னும் பின்னும் ஐந்து தலைமுறைகளுக்கு புகழோடு விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். தனது வம்சாவளியை அவருடைய நூலான கங்காவதரணம் என்ற காவியத்தில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்.
“பரத்வாஜர் என்று மூவுலகிலும் புகழ்பெற்ற ஒரு மகரிஷி உண்டு. அவருடைய சொல்லைக் கேட்டு, ராமன் காட்டில் திரிந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். அவருடைய வம்சத்தில், பாற்கடலிலிருந்து நிலா தோன்றியது போல், முதலாம் அப்பய்ய தீக்ஷிதர் தோன்றினார். அவர்
பெரும் சிவபக்தர். அவரது தம்பி ஆச்சான் தீக்ஷிதர். அவரும் தமையனைப் போலவே எல்லாம் கற்றறிந்தவர். அவருடைய
பிள்ளை நாராயண அத்வரி. அவருக்கு அன்பினால் இணைந்த ஐந்து புதல்வர்கள். அவர்கள் தாயின் கருவில் இருக்கும்போதே சிவபக்தியை சொத்தாகப் பெற்றவர்கள். அவர்களுள் தாய் பூமிதேவிக்கு இரண்டாவதாகப் பிறந்த மகன் நான்.”
அவரது முன்னோர்கள் பலரும் அரசர்களால் மதித்துப் போற்றப்பட்டவர்கள். அப்பய்ய தீக்ஷிதரின் தாத்தா ஆசார்ய தீக்ஷிதர் விஜய நகரம் கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்தவர். அப்பய்ய தீக்ஷிதர் வேலூர், பெனுகொண்டா மன்னர்களால் கொண்டாடப்பட்டவர். மிக உயர்ந்த நூறு நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர் அப்பய்ய தீக்ஷிதர். எழுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அவரைக் கனகாபிஷேகம் செய்து மன்னர் கௌரவித்ததாகவும், அவர் சிதம்பரத்தில் முக்தியடைந்ததாகவும் வரலாறு. அவரது
ஆதரவில் வளர்ந்தவர் நீலகண்டன்.
கோவிந்த தீக்ஷிதரின் புதல்வரும் சதுர் தண்டிப்ரகாசிகா நூலின் ஆசிரியருமான வேங்கட மகியிடம் அவர் கல்வி கற்றார். கிருஷ்ணானந்த யதி, கீர்வாணேந்த்ர சரஸ்வதி, தந்தையான நாராயணாத்வரி முதலியவர்களிடம் சாஸ்திரங்களையும், குறிப்பாக அத்வைதத்தையும் கற்றுத் தேர்ந்தார். அவரது பன்னிரெண்டாவது வயதில் அப்பய்ய தீக்ஷிதர் காலமானார். பெரிய தாத்தாவின் சொத்தாக தேவி மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் பெற்றுக் கொண்ட அவரை, “நீ தேவியின் அருளால் மகாகவியாவாய்’ என அப்பய்ய தீக்ஷிதர் ஆசிர்வதித்தாராம்.
பின்னாளில் சுமார் முப்பதாண்டுகள் நீலகண்ட தீக்ஷிதர் மதுரையரசர் திருமலைநாயக்கனது அமைச்சராக இருந்தார். அது பற்றிய சுவையான வரலாறு உண்டு. மதுரையில் ஆற்று மணலில் தீக்ஷிதர் தேவி மகாத்மியப் பிரவசனங்கள் செய்து வந்தார். அதை மறைந்திருந்து கேட்டு அதனால் பெரிதும் கவரப்பட்ட திருமலை நாயக்கன் ஒரு புலவர் சபையைக் கூட்டி ஒரு போட்டி வைத்தவன். அதில் கேட்கப்பட்ட கேள்வி காக்கைக்குக் காகம் என்று எப்படிப் பெயர் வந்தது என்பதாகும். அவ்வளவு பெரிய சபையில் ஒரே நிசப்தம். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.
சபையைக் கலைக்க வேண்டியது தான் என்று அரசன் நினைத்த நேரத்தில் ஒருவர் எழுந்தார். ஒரு விளக்கமும் அளித்தார். இந்திரகுமாரன் ஜயந்தன் காக்கையுருவில் சீதையின் மார்பைக் கொத்திய போது ராமன் வெகுண்டான். ஆனால் சீதை ஜயந்தனை பொறுமையாய் மன்னிக்க, ராமனும் தன் கருணையால் அவனை மன்னித்தான்.
அதைக் கண்டு சுற்றியிருந்த காகங்கள் “”இவ்வுலகில் பொறுமை, மன்னிக்கும் இயல்பு இவற்றில் சீதையை ஒத்தவள் யார்?
( கா). இவ்வுலகில் தயையில் ராமனை ஒத்தவன் யார்? (: க)? என்று “காக’ என்று குரலெழுப்பி ஆர்ப்பரி
த்தன. அதனால் “காக” என்ற பெயர் வந்தது. (யார் என்பதற்கு “கா’ என்பது பெண்பால் சொல், “க’ என்பது ஆண்பால் சொல் சம்ஸ்கிருதத்தில்). அப்படி விளக்கமளித்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவரை உடனேயே தனது மந்திரியாக்கினான் திருமலை நாயக்கன்.
மதுரையின் அமைச்சராக நீலகண்ட தீக்ஷிதர் நல்ல பல சீர்திருத்தங்களைச் செய்தார். மீனாக்ஷியம்மன் கோவிலில் செய்யப்பட வேண்டிய தினசரி பூஜை பல்வேறு உற்சவங்கள் முதலியவற்றை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்தினார். நிர்வாக அலுவல்களுக்கு நடுவில் ஏராளமான நூல்களை எழுதினார். தான் கற்ற கல்வியை பிறருக்கும் போதித்து ஒரு நல்ல சிஷ்ய பரம்பரையை உருவாக்கினார்.
கடைசியில் ஒரு நாள் அரசுப் பணியும் சலித்தது. இறையருளிலே திளைக்க விரும்பிய அவர் பட்டம் பதவிகளைத் துறந்து விட்டு, திருநெல்வேலிக்கருகில் தாம்பிரவருணியின் கரையிலமைந்த பாலாமடை கிராமத்தில் துறவியாகத் தனது எஞ்சிய நாட்களைக்
கழித்து இறைவனடி சேர்ந்தார். அவர் மதுரையை விட்டுஅகன்றது பற்றியும் ஒரு கதை உண்டு.
மதுரைக் கோவிலின் புதுமண்டபம் 1626 முதல் 1633 வரை திருமலை நாயக்கனால் கட்டப்பட்டது. அங்கே ஒரு தூணில் திருமலை நாயக்கன் தன் ஏழு பத்தினிகளுடன் இருக்கும் பெரிய சிற்பம் உள்ளது. சுந்தரமூர்த்தி ஆசாரி என்ற தலைமைச் சிற்பிக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
பட்டமகிஷியின் சிலையைச் செய்யும்போது, இடது துடையில் சில்லுப் பெயர்ந்து விட்டது. மீண்டும் புதிதாகச் செய்தான், மீண்டும் அதே இடத்தில் சில்லுப் பெயர்ந்தது. அப்போது அப்பணியை மேற்பார்வை பார்க்க அங்கு வந்த தீக்ஷிதர் விஷயத்தைக் கேட்டு, சற்றே கண்மூடி யோசித்துவிட்டு, “”அதை அப்படியே விட்டுவிடு. மீண்டும் செய்து பயனில்லை. ஏனெனில் அந்த இடத்தில் மகாரா
ணிக்கு ஒரு பெரிய மச்சம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஆசாரியும் அதை அப்படியே விட்டு விட்டான். பின்னால் அங்கு வந்த அரசன் நடந்ததைக் கேள்விப்பட்டான். தன் தே
வியின் துடையில் மச்சமிருப்பது தெரிந்த அவனுக்கு சந்தேகம் பிறந்தது. அதுவே பெருங்கோபமாக மாறியது. அரண்மனை சென்றதும் தீக்ஷிதரை அழைத்து வரச் சொல்லி அதிகாரியை அனுப்பினான். தீக்ஷிதர் அப்போது அம்பாளது பூஜையில் இருந்தார்.
அரசன் ஆளனுப்பியது அவருக்குப் புதிய அனுபவம். உடனே கண்மூடி தியானித்தார். அரசனின் மடமை அவருக்குப் புரிந்தது. உடனே கையில் ஏற்றியிருந்த கற்பூரத்தை அம்பிகைக்குக் காட்டிவிட்டு அதனாலேயே தன் கண்களையும் அவித்துக் கொண்டார்.
“அரசன் அளிக்கவிருந்த தண்டனையைத் தானே விதித்துக் கொண்டதாகச் சொல்’ என்று அதிகாரியைத் திருப்பியனுப்பினார். பிறகு அம்பிகையைத் தன் உள்ளமுருக்கும் பாடல்களால் துதிக்கத் தொடங்கினார். பாடல்கள் முடிவதற்குள் அவரது கண்பார்வை மீண்டது.
நடந்ததையறிந்த திருமலை நாயக்கன் ஓடோடி வந்து தீக்ஷிதரிடம் மன்னிப்பு வேண்டினான். அரசனை பெருந்தன்மையுடன் மன்னித்த தீக்ஷிதர் தன் பதவியை உடனே துறந்து பாலாமடை சென்றார். திருமலை நாயக்கன் பாலாமடை கிராமத்தை அவருக்கே வழங்கினான். அதற்கு நீலகண்ட ஸமுத்ரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அப்போது தீக்ஷிதர் பாடிய பாடல்களே “ஆனந்த ஸாகரஸ்தவம்.’
நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் சிவலீலார்ணவம். சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள்.
ஹாலாஸ்ய மகாத்ம்யத்தையட்டி சிவனது 64 லீலைகளும் பேசப்படும் நூல். 22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியம்.
1907 ஆம் ஆண்டு முதன் முதலாக மகாமகோபாத்யாய தருவை கணபதி சாஸ்திரிகளால் திருவனந்தபுரத்தில் அச்சிடப்பட்டது.
மதுரை மீனாக்ஷி பிறப்பு, வளர்ப்பு, ஆட்சி, திக்விஜயம், சுந்தரேச்வரருடன் திருமணம், திருவாதவூரர் கதை, ஈசன் நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, அரிமர்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டது, நக்கீரர் அகந்தை அடக்கியது, கூன் பாண்டியன் நோய் நீக்கியது, சம்பந்தரும் சமணரும், அனல் வாதம், புனல் வாதம், பிறகு வந்த பாண்டிய மன்னர்களுக்கு அருளிய செயல்கள் அனைத்தும் கொண்ட காவியம்.
எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியும், பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை உரை நடையும், பாடலும் கலந்த சம்பு இலக்கியம்.
“நள சரித நாடகம்’ 6 வது அங்கத்தோடு நின்று விடுகிறது. “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூல் கலியுகத்தின் தீய பழக்க வழக்கங்களைக் காட்டும் நையாண்டிப் பாடல்கள். பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன’.
ஒன்றைச் சொல்லி ஆனால் உள்ளே ஆழ்ந்த வேறு பொருள் உள்ள “அன்யபதேச சதகம்’ என்ற 101 பாடல்கள். “ஆனந்த
ஸாகரஸ்தவ’ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அம்பாளைப் பற்றிப் பாடிய 108 பாடல்கள்.
பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்.’ வாழ்க்கையை அனுபவித்து அதன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற சிந்தனைகள். “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத விளக்கம்…
இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடியிருக்கிறார்.
அவரது கரைகாணாக் கல்வித் தேர்ச்சியும், கவிதைத் திறனும், அனுபவ அறிவும் ஒருங்கே துலங்கும் அவரது பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
மாறிவரும் பருவங்களைப் பற்றிப் பேசுமிடத்தில் ஒரு பேருண்மையைக் காட்டுகிறார். சில பருவங்களில் சில பூக்கள் கிடைப்பதில்லை. அதனால் என்ன? வேறு பூக்கள் உண்டே.
போதவிழ் தாமரை இல்லையெனில்
புதிய தாழம் பூஇலையோ?
சோதியாம் நிலவு இல்லையெனில்
சுந்தர மன்மதன் இங்கிலையோ?
ஏதும் அன்னங்கள் இல்லையெனில்
எழில்மிகு மயில்கள் இங்கிலையோ
ஏதோ ஒரு பொருள் இல்லையென
ஏங்கித் தவிப்பது எதற்காக?
கவிதைக்கு மக்களிடையே ஆதரவு இல்லையென்பது அவரது மனக்குறை. அவர் சொல்லுகிறார்:
“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்.”
அந்தக் கவிதையும் துஷ்பிரயோகம் ஆகிறது என்று அங்கலாய்க்கிறார். “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுவன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி மானிடரைப் புகழ்ந்து பாடாதே என்றும், கொடுப்பவனின் குறைகளையும்
கவி காட்டுவதில்லை என்றும் கூறுகிறார்:
கவிதை யென்பது கலைகளின் சிகரம்
கவிதா தேவியின் கருணைப்ரசாதம்
மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே
மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும்.
அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும்
அற்புதக் காமதேவனுவாம் பசுவை
ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும்.
கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான்.
கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால்
நீரைப் பொழியும் என்பத னாலதன்
கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்?
தாம்ரவருணி ஆற்றைப் பற்றி புலமை நிறைந்த ஒரு கற்பனை.
“தாம்ரபர்ணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாம்ரபர்ணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது.”
கலி விடம்பன நூலில் கலிகாலத்தில் கூட்டத்தில் வேண்டிய குணங்கள் என்று கிண்டலாக அவர் எழுதுகிறார்:
“கூட்டத்தில் வேண்டிய குணங்கள் குருட்டு தைரியம், வெட்கமின்மை, எதிரியிடம் அலட்சியம், இகழ்ச்சிப் பார்வை, கேலி செய்தல், கூச்சலிடுவது. எதிரி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதோ, புரிந்து கொள்வதோ கூடாது. எதிரி சாதுவாக இருந்தால், தன் கட்சி ஜயித்து விட்டதாகக் கத்தவேண்டும். எதிராளி படித்தவனாக இருந்தால், அவன் பாரபட்சமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்ட வேண்டும்.
மன்னனைப் (பதவியில் இருப்பவரை) புகழவேண்டும்.”
இன்றைய அரசியல்வாதிகளையும் அவர்களை அண்டிப் பிழைக்கும் “ஜால்ரா’க்களையும் பற்றிய உண்மையான கேலிச் சித்திரம், ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது.
ஆனந்த ஸாகரஸ்தவத்தில் பக்திப் பரவசத்தோடு தேவியைப் பாடுகிறார். அர்த்தநாரி வடிவத்தைப் பற்றிப் பேசும் போது சமத்காரமாகக் கேள்வி எழுப்புகிறார்:
“”நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால் மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதிப்பங்கு தான் உண்டு. அக்கீர்த்தியை அவர் முழுதும் எடுத்துக் கொண்டார். போனால் போகட்டும். ஆனால் இடது காலால் உதைத்து யமனை வென்றதில் அவருக்கு என்ன சம்பந்தம்?”
“சாந்தி விலாச’த்திலே நம்மை சிந்திக்க வைக்கிறார் ஒரு பாடலில்:
அகண்ட கடலை அகத்தியர் குடித்தார்
விசுவா மித்ரரோ விச்வமே படைத்தார்
அவரது அஸ்திரம் அனைத்தையும் தனது
பிரும்ம தண்டத்தால் பிளந்தார் வசிஷ்டர்
ஆற்றலில் தவத்தில் அவர்க்கிணை உண்டோ?
ஆயினும் ஒருநாள் அவர்களும் மறைந்தனர்
காலத்தின் பிடியில் கருகி மடிந்தனர்.
சகத்துள நாமோ சாச்வதமென்று
எண்ணி யிருத்தல் எத்தனை மடமை?
புத்தியின் துணையால், புலன் வசப்பட்ட
மனத்தை விட்டு மாட்சிமை பெறுவோம்.
இறுதியில் சரணாகதியே வழியென்று தேர்கிறார். அம்பிகையோடு தொடர்பில்லாத எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிறார்.
ஆனந்த ஸாகரஸ்தவத்தில் அவரது பாடல்களில் இந்த மன நிலையைக் காண்கிறோம்:
உனக்கொரு கோவில் இல்லாத
ஊரில் இருக்க நான்விரும்பேன்:
உன்னைப் பற்றிப் பேசாத
உயர்ந்த வித்தை நான்வேண்டேன்:
உந்தன் பொன்னடி போற்றாத
ஒருவம் சத்தை நான்வேண்டேன்:
உன்னைப் பற்றிய நினைவில்லா
ஒருவாழ்க் கையையும் நான்வேண்டேன்.
பேயாய் உழலும் சிறுமனத்தின்
பிதற்றல் எதையும் கேளாது
தாயாம் சக்தித் தாளினிலே
தள்ளுவாய் வாழ்க்கைச் சுமையெல்லாம்.
சேயாம் உனக்குப் பிறவிக்கடல்
சிறியதோர் குட்டையாய் ஆகிவிடும்.
நீயும் எளிதில் அதைத் தாண்டி
நிர்மல சுகத்தைப் பெற்றிடலாம்.
பாடல்களின் தமிழ்வடிவம்: கட்டுரையாசிரியர்