spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்மல்லிகார்ஜுன கார்கே... ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

- Advertisement -
write thoughts

“மக்களே! மறக்காம என் மறைவுக்கு வந்துருங்க!” – மல்லிகார்ஜுன் கார்கே வினோத அழைப்பு!

— ஆர். வி. ஆர்

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

சமீபத்தில் கர்நாடக மாநிலம், கலபுர்கி லோக் சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார் கார்கே. அப்போது மேடையில் நின்று மக்களை நோக்கி, “நீங்கள் என் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி ஊர்வலத்துக்கு வந்து விடுங்கள்” என்று தத்தக்கா பித்தக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.

ஒருவேளை கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கார்கே நினைத்திருக்கலாம். அதற்காக, இப்படி உணர்ச்சி பூர்வமாக – அதுவும் இறப்பு நிகழ்ச்சி என்றெல்லாம் – பேசினால் மக்கள் பரிதாபத்தில் உருகி சற்று அதிகமானவர்கள் தனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள், காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். எதுவானாலும் இது வடிகட்டின அசட்டுப் பேச்சு.

ஒரு வருடம் முன்பு திமுக மாநில அமைச்சர் துரை முருகன், முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு, “நான் மறைந்த பிறகு, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்” என்று பேசி, கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஸ்டண்ட் அடித்தார். அதை மனதில் வைத்து, ‘இப்போது அரசியலில் பல தலைவர்களும் மலிவாகப் பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சும் அது மாதிரித்தான்’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயமில்லை இது.

துரைமுருகன் பேசியது, அக்மார்க் திமுக பாணி. இது போன்ற பேச்சு, இந்த அளவிலான மற்ற செயல்கள், திமுக-வுக்கே உரித்தானது.

சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பாக, திமுக-வின் மு. கருணாநிதி ஒரு காரியம் செய்தார். அப்போது திமுக நடத்திய ஒரு போராட்டத்தின் பகுதியாக, திருச்சிக்கு அருகில் ‘டால்மியாபுரம்’ என்றிருந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக் கோரியது அக்கட்சி. அந்த சமயத்தில், அந்த ஊர் ரயில் நிலையத்திற்குள் கட்சிக்காரர்களுடன் சென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து, அங்கிருந்து கிளம்பவிருந்த ரயில் புறப்படாமல் ஸ்டண்ட் செய்தார் கருணாநிதி – என்ன இருந்தாலும் ரயில் தன் மீது ஏறாது என்ற நிச்சயத்தில். கருணாநிதிக்கு அப்போது வயது 29. இதனால் அரசியலில் சில படிகள் முன்னேறினார் கருணாநிதி.

சமீபத்தில் தனது 84-வது வயதில், துரை முருகன் தன்னால் முடிந்த ஸ்டண்டைத் தன் ‘கல்லறைப் பேச்சு’ மூலமாகவே செய்துவிட்டார் – திமுக வழியில். ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே பிதற்றியது, தலை சிறந்த காங்கிரஸ் முன்னோடிகளிடம் அவர் கற்ற பாடத்தினால் அல்ல.

திமுக அன்றுபோல் இன்றும் மலிவான பேச்சு, கண்ணியம் குறைந்த செயல்கள், ஸ்டண்ட் நடவடிக்கைகள், என்றுதான் அரசியல் செய்கிறது. ஆனால் திறமைக்கும் கண்ணியத்திற்கும் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புக்கும் ஒரு காலத்தில் பெயர்போன காங்கிரஸ் கட்சி, இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையில், எல்லா வகையிலும் தாழ்வுற்று நிற்கிறது. இந்தப் பெரும் சோகத்தின் ஒரு அடையாளம், காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக (‘பிரஸிடெண்ட்’ என்று) பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேயும் அவரது பேச்சும் செயல்களும்.

திமுக தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்குள் தனது மகன் மு. க. ஸ்டாலினை உயர்த்திவிட, ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பொறுமையாகச் செயல்பட்டு வந்தார். எதிர்பார்த்தபடி அதைக் கட்சியில் அனைவரும் ஏற்றனர். இப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படி வேகவேகமாகக் கட்சிக்குள் முன்நிறுத்துகிறார், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் எப்படி அசாத்தியமாகத் தொழில் செய்கிறார், கட்சிக்குள் இருக்கும் மற்ற தலைவர்கள் அந்த இருவரை எப்படி விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள், வணங்குகிறார்கள், என்பதும் வெளிப்படை.

காங்கிரஸ் கட்சி இப்போது கௌரவம் இழந்து சீரழிந்து விட்ட நிலையில், அதன் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது பேச்சில் திமுக மாதிரி கட்சிகளின் பாணியைக் காப்பி அடிக்கிறார்கள். இதில் ஸ்டாலினோடு போட்டிபோட்டு அவரை மிஞ்சுகிறார் ராகுல் காந்தி. அதே பொறுப்பற்ற வகையில், ஆனால் ராகுலை மிஞ்சி விடாமல், கலபுர்கியில் பேசி இருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே.

சரி, மல்லிகார்ஜுன் கார்கே இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பிதற்றுவதற்கு ஏன் கலபுர்கி லோக் சபா தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்? மனிதர் காரண காரியமாகத் தான், திடீரென உணர்ச்சியில் உருகித் தனது கடைசிப் பயணத்துக்குக் கலபுர்கி மக்களைக் கண்ணில் நீர் மல்க அழைத்துவிட்டார். இதில் திமுக-வின் சாயல் பெரிதும் உண்டு. கலபுர்கி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, அவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மாப்பிள்ளைதான்!

அடுத்த படியாக, தமிழகத்தில் நோஞ்சானாய் இருக்கும் தமது கட்சியைப் பெரிதாய் வளர்க்க, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சிலும் செயலிலும் என்ன புதுமையைக் கடைப் பிடிப்பார்களோ? மேல்மட்டத்தில் காங்கிரஸ் இப்போது கெட்ட கேட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனி எப்படியெல்லாம் திமுக வழியில் செல்வார்களோ, அவர்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சு எப்படி உதாரணமாகத் திகழுமோ, என்றெல்லாம் யாராவது கணிக்க முடியுமா?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
[email protected]
https://rvr-india.blogspot.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe