45ம் நாள் : ஐபிஎல் 2024 – 04.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
குஜராத் அணியை (19.3 ஓவரில் 147, ஷாருக் கான் 37, ராஹுல் திவாத்தியா 35, டேவிட் மில்லர் 30, ரஷீத் கான் 18, விஜய் ஷங்கர் 10, சிராஜ் 2/29, யஷ் தயால் 2/21, விஜயகுமார் வைஷாக் 2/23) பெங்களூரு அணி (டியு பிளேசிஸ் 64, விராட் கோலி 42) 152/6 நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாடவந்தது.
குஜராத் அணியில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் (24 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) டேவிட் மில்லர் (20 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (21 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினார்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள் – விருத்திமான் சாஹா (1 ரன்), ஷுப்மன் கில் (2 ரன்), சாய் சுதர்ஷன் (6 ரன்), ரஷீத் கான் (18 ரன்), விஜய் ஷங்கர் (10 ரன்), மானவ் சுத்தர் (1 ரன்), மோஹித் ஷர்மா (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.
இதனால் குஜராத் அணி இன்று 20 ஓவர் வரை விளையாடவில்லை. 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் அந்த அணி இழந்தது.
148 ரன் என்ற மிக எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணி இடையில் சற்று சொதப்பியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஃபேஃப் டியு பிளேசிஸ் (23 பந்துகளில் 64 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விராட் கோலி (27 பந்துகளில் 42 ரன் 2 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டனர்.
இருப்பினும் டியு பிளேசிஸ் 5.5ஆவது ஓவரில் அட்டமிழக்க அவருக்குப் பின் 7ஆவது ஓவரில் வில் ஜேக்ஸ் (1 ரன்), எட்டாவது ஓவரில் ரஜத் படிதர் (2 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ் வெல் (4 ரன்), பத்தாவது ஓவரில் கேமரூன் கிரீன் (1 ரன்) என பெங்களூரு வீரர்கள் வரிசையாக ஒருவர் ஒருவராக ஆட்டமிழந்தனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக விராட் கோலி 10.4ஆவது ஓவரில் அவுட்டானார். வெற்றி உறுதி என இருந்த நிலையில் இருந்து தோல்வி பெறுவார்கள் என்ற நிலைக்கு வந்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக் (12 பந்துகளில் 21 ரன்) ஸ்வப்னில் சிங் (15 ரன்) இருவரும் இணைந்து ஆடி வெற்றிய 13.4ஆவது ஓவரில் பெற்றுத் தந்தனர். இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெறும்.
முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
04.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 10 | 8 | 2 | 16 | 0.622 |
கொல்கொத்தா | 10 | 7 | 3 | 14 | 1.098 |
லக்னோ | 10 | 6 | 4 | 12 | 0.094 |
ஹைதராபாத் | 10 | 6 | 4 | 12 | 0.072 |
சென்னை | 10 | 5 | 5 | 10 | 0.627 |
டெல்லி | 11 | 5 | 6 | 10 | -0.442 |
பெங்களூரு | 11 | 4 | 7 | 8 | -0.049 |
பஞ்சாப் | 10 | 4 | 6 | 8 | -0.062 |
குஜராத் | 10 | 4 | 6 | 8 | -1.113 |
மும்பை | 11 | 3 | 8 | 6 | -0.356 |