துபாயில் மாரடைப்பால் இறந்தவரை இந்தியா கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மதிமுக தலைமைக் கழகம் இன்று (ஏப்.27) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மார்ச் 17ஆம் நாள் துபாயில் மாரடைப்பால் இயற்கை எய்திய, விருதுநகர் மாவட்டம் மகராஜபுரம் துரைராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தடை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதன் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினார். துரைராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் நாள் அவர் உடல் வந்து சேரும் என உறுதி அளித்து இருக்கின்றார்.
அதே போல அபுதாபியில் இருந்து தில்லிக்கு வந்து, திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும் இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இத்தகைய தடைகளை நீக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அமைச்சர் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டதற்கு வைகோ நன்றி தெரிவித்துக்கொண்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.