
இந்தியாவில் கொரோனா வைரஸ் ஜூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை எட்டும் என்றும் பின்னர் அது படிப்படியாக குறையும் என்றும் உலகச் சுகாதார அமைப்பின் சிறப்பு தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரையில் சரியான நேரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து வைரஸை கட்டுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த அளவிற்கு வைரஸை கட்டுப்படுத்துவது கடினம் ஆனால் அதை இந்தியா சிறப்பாக செய்துள்ளது என கூறியுள்ளார். இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகம் தான் என்றாலும் கூட, மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என கூறியுள்ளார்.
தற்போதுள்ள ஊரடங்கு நீக்கப்பட்டால் வைரஸ் அதிக அளவில் பரவக்கூடும் என்றும் ஆனால் மக்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ஜூலை இறுதியில் வைரஸ் உச்சக்கட்டத்தை அடையும். அது மிக மோசமாக இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வருமென அவர் கூறியுள்ளார் .