சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: சிறுவர் நீதிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயது- 18 வயது வரை உள்ள சிறார்களையும் வயது வந்தவர்களாகக் கருதி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை சிறார் நீதிச் சட்டத்தில் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 18 வயதுக்குக் குறைவானவர்கள் சிறார்களாகக் (மைனர்) கருதப்பட்டு, சிறார் நீதி வாரியத்தில் விசாரிக்கப்படுகின்றனர். அவர்கள் கடும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் சிறார் நீதிச் சட்டம் – 2000ன் படி, அவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த 3 ஆண்டுகளும் அவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் தங்கினால் போதுமானது. இந்நிலையில் கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு, சிறார் நீதிச் சட்டப் பாதுகாப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெறத் தொடங்கியதால், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இது தொடர்பாக அனுப்பிய வரைவு மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்து, மற்ற அமைச்சகங்களின் கருத்தை தெரிவிக்குமாறு அனுப்பியிருந்தது. இந்நிலையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது