பீகார் சூறாவளிக்கு 65 பேர் உயிரிழப்பு: தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் நள்ளிரவில் வீசிய திடீர் சூறாவளிக்கு 65 பேர் பலியாயினர். பீகார் மாநிலம், பூர்ணியா, மாதேபுரா, சஹார்ஸா, மதுபானி, சமஸ்திபூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவு திடீரென சூறாவளி வீசியது. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த சூறாவளியில், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின் விநியோகம் தடைப்பட்டது. மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகளும் இதில் சேதமடைந்தன. மேலும், கோதுமை, உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன. சாலைப் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் பலத்த காயமடைந்த 80 க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டர் மூலமாகப் பார்வையிட்டு, நிவாரணப்பணிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் இதில் பலியானவர்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேத விவரங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.