சென்னை: இலங்கைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் சுடுவது தவறாகாது என்று, மோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக் கடற்படையினர் சில சமயங்களில் அப்பாவித் தமிழக மீனவர்களைச் சுட்டுள்ளனர். இலங்கைப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் மீன்பிடிக்க வருகின்றனர்? ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால் நான் அவரைச் சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது என்று ரணில் கூறியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர மீன்பிடிக்க வருவதை, வீட்டில் கொள்ளை அடிக்க முயலுவதாக ரணில் ஒப்பிட்டுள்ளார். கடலில் மீன்பிடித்தால், அதற்காகச் சுடலாம் என்பது நீதியா? கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம் என்றும் ரணில் கூறியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்று அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் நான் வலியுறுத்தினேன். மேலும், கச்சச்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்குச் செல்லப் போகும் நேரத்தில் ரணில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது சரியில்லை. கண்டனத்துக்கு உரியதாகும். எனினும், இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலனுக்காக தமது பயணத்தை நரேந்திர மோடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 13-ஆவது சட்டத் திருத்தத்தைப் பற்றி மட்டும் பேசாமல், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, பறிக்கப்பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது, வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு காவல் துறை, நில நிர்வாகம் உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாகவும் மோடி பேச வேண்டும். இதை மோடி நிறைவேற்றுவார் என நம்புவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
மோடியின் பயணத்தின் போது ரணில் இப்படி பேசியிருக்கக் கூடாது: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari