காறித் துப்பிய விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆணையரிடம் பத்திரிகையாளர்கள் புகார்!

சென்னை:

பத்திரிக்கையாளர்களிடம் த்தூ எனத் துப்பி, அநாகரீகமாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனம் சார்பில், அதன் இணைச் செயலாளரும் பத்திரிக்கையாளருமான எஸ்.சீனுவாசன், விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்து இன்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், ” விஜயகாந்த் ‘துா’ என்று துப்பி, செய்தியாளர்களாகிய எங்களை மட்டுமல்ல; அனைத்து ஊடகங்களையும் இழிவுபடுத்தியுள்ளார். அவர் எதிர்கட்சித் தலைவர், ஒரு கட்சியின் தலைவர், ஒரு ஊடகத்தின் முதலாளி என்பதை மறந்துவிட்டு நிதானமிழந்து பேசியுள்ளார். இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. ஆகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.