sengol in parliament

செங்கோல் நம் அடையாளம்; அதை அகற்றக் கோருவதா?: எல்.முருகன் கண்டனம்!

sengol in parliament
#image_title

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என்று, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரி கடிதம் எழுதியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

செங்கோல் பற்றி அவர் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும், செங்கோல் என்பதன் பொருள் புரியாமல் ஆங்கிலேய அடிமைகளின் பொது புத்தியில் பொதிந்துபோன கசடுகள் மட்டுமே. பாரத நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரம் என எதுவும் அறியாத நேருவின் வழியில் வந்தவர்களால் இப்படி தான் பேச முடியும்.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள், நீதியின் சின்னமாக செங்கோலை வைத்திருந்தனர். அரசன் நீதி தவறும்போது செங்கோல் சாய்ந்து விட்டது எனக்கூறினர். மதுரையில் நீதி தவறியதை அறிந்த பாண்டியன் தன் உயிர் துறந்து செங்கோலை காத்தான்.

மன்னர்கள் தங்களின் மானமாகவும், நீதியின் சின்னமாகவும் காத்த செங்கோல், அவர்களின் காலத்துக்குப் பின், சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் வழங்கப்பட்டன.

செங்கோல் பற்றி தொல்காப்பியம் துவங்கி, பக்தி இலக்கியங்கள் வரை பல்வேறு இடங்களில் விளக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பழம் பெரும் இலக்கியங்களான சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிடும் நிலையில், அவற்றில் செங்கோலாக திருக்குறள் குறிப்பிடப்படுகிறது.

திருக்குறளில் மனைமாட்சி, செங்கோண்மை எனும் அதிகாரங்கள் மன்னனின் இயல்புகள், அவன் கடைபிடிக்க வேண்டிய நெறிகள், அவன் ஆட்சியில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அதுபோலவே வள்ளலாரும் இறைவன் அளித்த செங்கோலாக தன் சுத்த சன்மார்க்க சங்கத்தை குறிப்பிடுகிறார்.

அத்தகைய செங்கோல், சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கப்பட்டது. பின், அதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாக்கப்பட்டது. அதை பலரும் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை வைத்து மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த அடிப்படை கூட தெரியாமல் இந்தி கூட்டணியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி எம்.பி.யின் கடிதத்தை தொடர்ந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தி கூட்டணியின் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் செங்கோல் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்து ஏற்கத்தக்கது என காங்கிரஸ் எம்.பி திரு. மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

அதுபோலவே, செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு ஏதும் இல்லை எனவும், அதனால் தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என்ற திமுக மூத்த தலைவர் திரு. டி.கே.எஸ் இளங்கோவனின் கருத்தும் இந்தி கூட்டணியினர் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

இவர்களின் இந்த கருத்துகள் அனைத்துமே ஆங்கிலேயே அடிவருடி மனப்பான்மையின் வெளிப்பாடு தான். செங்கோலின் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த இந்தி கூட்டணி தலைவர்களுக்கும் தெரியவில்லை.

தமிழ் பண்பாட்டின் மீதும், தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தின் மீதும் இவர்களுக்கு மதிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை இவர்கள் நிருபித்து விட்டார்கள். இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்பதை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டார்கள்.

நமது தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்தி கூட்டணி தலைவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.