செய்தியாளர்கள் மீது காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா ?

அநாகரீகமாக நடந்து கொண்டு ஊடக துறையினர் மீது தூ என காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்த பின் விஜயகாந்தை சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விஜயகாந்த் விசாரித்து நியூஸ் – 7 தொலைக்காட்சி என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா? என்று பதில் கேள்வி எழுப்பினார். கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா என்று அநாகரீகமாக நடந்து கொண்டு தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடகதுறையில் செய்தியாளராக பணியாற்றும் செய்தியாளர் மணிகண்டன் ஷங்கர் அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளதாவது :-
ஊடகங்கள் எல்லாம் ஜால்ரா, பத்திரிக்கையாளர் எல்லாம் அதிமுக கை கூலிகள் என கூறும் விஜயகாந்த், அவர் கட்சியின் அறிக்கைகளை மட்டும் ஊடகங்களுக்கு ஏன் அனுப்ப வேண்டும் ??
 
தன் மகன் நடிக்கும் “தமிழன் என்ற சொல்” படத்தின் பாடல் வெளியிட்டிற்கு மட்டும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? அப்படி என்றால் நீங்கள் சொல்வதை மட்டும் கேட்க ஊடகங்கள் வேண்டும், எதிர் கேள்வி கேட்டால் வேண்டாம்.
பத்திரிகையாளர்கள் எங்களுக்குத்தான் தைரியம் இல்லை. ஏன் என்றால் நீங்கள் குறிப்பிடுவது போல நாங்கள் ஊடக முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறோம். நீங்கள் தான் சம்பளம் கொடுக்கும் இடத்திலும் , எதிர்கட்சித் தலைவராகவும், அரசியல் கட்சி தலைவராகவும், கல்லூரி மற்றும் ஓட்டல் அதிபராகவும், நடிகராகவும் உள்ளீர்களே, நீங்கள் போய் ஜெயலலிதாவை கேள்வி கேளுங்களேன்.
எங்களால் சட்டமன்ற நிகழ்வை எழுதத்தான் முடியும், ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையே, கேள்வி நேரம், ஜீரோ அவர், விவாதம் என எல்லாவற்றிலும் ஜெயலலிதாவை கேள்வி கேட்டிருக்கலாமே?
ஜெயலலிதாவை கேள்வி கேட்க செய்தியாளர்கள் எங்களுக்கு பயம் இல்லை. எங்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஊடகங்களை அவர் வீட்டு தெரு முனைக்கு கூட அனுமதிப்பதில்லை. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட அவர் பங்கேற்பதில்லை.
நீங்களும் ஊடகங்கள் எட்ட முடியாத அளவிற்கு தான் இருக்கிறிர்கள். உங்கள் கட்சி அலுவலகத்தின் முன் பக்கம் ஊடகங்கள் நின்றால் நீங்கள் பின் பக்க வழியில் சென்றுவிடுகிறீர்கள். சட்டமன்றத்தில் சபை நடந்து கொண்டு இருக்கும் போது கூட இரண்டாம் கதவு எண் பக்கமாக வந்து கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிடுகிறீர்கள். அங்கேயும் எங்களால் வர முடியாது.
இதே போல் தான் எங்களுக்கு ஜெயலலிதாவும் சந்திக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.நீங்கள் எதிர்கட்சிதலைவர் என்ற முறையில் எத்தனை செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளீர்கள். இதையும் தாண்டி நீங்கள் வந்து செல்லும் விமான நிலையம் இது போன்ற ரத்த தான முகாம் ஆகிய இடங்களில்தான் உங்களை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழல்களிலெல்லாம் என்ன நடந்தது என்று ஊர் அறியும்.
இல்லை இனிமேலும் பத்திரிகை எல்லாம் ஜால்ரா. செய்தியாளர்கள் எல்லாம் (உங்கள் மொழியில்) கை கூலிகள் என்று சொல்லி கொண்டே இருப்பீர்கலென்றால், தே.மு.தி.க., உங்கள் சினிமா நிறுவனம், உங்கள் மகன் திரைப்படம் எல்லாவற்றிலும் இனி ஊடகங்களை புறக்கணியுங்களேன் பார்போம்….
இப்படிக்கு
ஊடக முதலாளிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் த்தூ ப்பியதை துடைத்து கொண்டு இருக்கும் சாதாரண செய்தியாளன் என்று செய்தியாளர் மணிகண்டன் ஷங்கர் அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளார்.இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது .